Search This Blog

Friday, January 13, 2012

அடிகளாசிரியர் - குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தமிழின் மிக உயரிய 'தொல்காப்பியர்’ விருதைப் பெற்றவர்


மிழ் அறிஞர்களில் மிக மூத்தவராக இருந்தவர் அடிகளாசிரியர்.

ஆத்திகர்களும் நாத்திகர்களும் உச்சிமோந்து கொண்டாடிய மூத்த தமிழறிஞர். குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தமிழின் மிக உயரிய 'தொல்காப்பியர்’ விருதைப் பெற்ற இவர், தன் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் குகையூரில் கடந்த 8-ம் தேதி இறந்து போனார்.சம காலத்தில் வாழ்ந்துவந்த மிக மூத்த தமிழறிஞர் என்பதால், 102 வயதில் அவர் இறந்ததை, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மொழி அன்பர்கள், வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.திண்டிவனத்தை அடுத்த மயிலத்தில் செந்தமிழ்க் கல்லூரி தொடங்கப்பட்டபோது, முதல் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர். தஞ்சை கரந்தை தமிழ்க் கல்லூரி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்து, 67 புத்தகங்களை எழுதி உள்ளார்.எட்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அடிகளாசிரியர், முதல் மகனுக்கு வைத்த பெயர் பேராசிரியர். சொல் வேறு, செயல்வேறு என முரண்பாடாக இல்லாமல், இளங்கோவன், நச்சினார்க்கினியன், சிவபெருமான் என்றும் பெண் பிள்ளைகளுக்கு திருநாவுக்கரசி, குமுதவல்லி, செந்தாமரை, சிவா என, தான் உயிராய் சுவாசித்த தமிழ்ப் பெயர்களையே சூட்டினார். அடிகளாசிரியரிடம் தமிழ் கற்ற மாணவர்கள், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மெச்சத்தக்க ஆய்வு களைச் செய்து வருகின்றனர்.


செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் மிக உயரிய 'தொல் காப்பியர்’ விருதினை கடந்த 2010-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அடிகளாசிரியருக்கு வழங்கினார். 100 வயதில் விமானப் பயணம் மேற்கொண்டவரை ஏர் இந்தியா நிறுவனத்தினர் பாராட்டிய போது, இவர் பரபரப்பாகப் பேசப்பட்டார்.  ''தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதை மிகச்சரியாக ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியவர் அடிகளாசிரியர். குடிசையிலேயே வாழ்ந்து மறைந்த ஒளி விளக்கு அவர்'' எனப் பொங்குகிறார் செம்மொழி நிறுவனத்தின் இளம் தமிழறிஞருக்கான விருது பெற்ற பேராசிரியர் மு. இளங்கோவன்.செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் ராமசாமி, ''செம்மொழி நிறுவனத்தின் ஆய்வுப் பணிகளைச் செய்பவர்களுக்கு, அதுதொடர்பாக நேர்காணல் நடத்தப்படும். தொல்காப்பியம் தொடர்பான ஆய்வுக்காக 100-வது வயதில் விண்ணப்பம் செய்திருந்தார் அடிகளாசிரியர். அந்த வயதிலும் ஒரு அடைமழைக் காலத்தில் நேர்காணலில் கலந்து கொண்டார். அந்த அளவுக்கு தகைமையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர்'' என்று பெருமூச்சுவிட்டார்.

தமிழை விற்று கல்லா கட்டிக்கொண்டு இருக்கும் கனத்த அறிவாளிகள் மத்தியில், குடிசை வீட்டிலேயே வாழ்ந்து, மறைந்த தமிழ் அறிஞரை என்ன சொல்லிப் போற்றுவது?



- இரா. தமிழ்க்கனல்  
விகடன் 

No comments:

Post a Comment