Search This Blog

Sunday, January 01, 2012

சீனப் பெருஞ்சுவர் அழியுமா?


ஹாரிபாட்டர் புத்தகங்கள் உலகில் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன? 

இதுவரை சுமார் 70 மொழிகளில் ஹாரிபாட்டர் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன ஸ்ரீராம். ஹிந்தி, மலையாளம், வங்காளம், குஜராத்தி, மராத்தி போன்ற இந்திய மொழிகளிலும் ஹாரிபாட்டர் வெளிவந்திருக்கிறது. 


சீனப் பெருஞ்சுவர் அழிந்து கொண்டே வருகிறது என்று கூறுகிறார்களே, உண்மையா? 

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது சீனப் பெருஞ்சுவர். தொழிநுட்பம் வளராத சூழ்நிலையில் மலைப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இந்தச் சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. செங்கல், மண், மரம் போன்ற பொருள்களால் கட்டப்பட்டுள்ள இந்தச் சுவர் சில இடங்களில் மிகவும் பாதுகாப்பாக நல்ல நிலையில் இருக்கிறது. சில இடங்களில் சுவற்றைச் சரி செய்திருக்கிறார்கள். ஆனால் பல இடங்களில் சுவர் நல்ல நிலையில் இல்லை. அவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கையும் அவ்வளவாக மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தப் பகுதிகள் மணற் புயலால் அழியும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் மம்தாராம்.

மருந்துக் கடைகளில் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்களே, ஏன்?

காய்ச்சல் வந்ததும் நேராக மருந்துக் கடைக்குச் சென்று, காய்ச்சலுக்கான மாத்திரையை வாங்கிச் சாப்பிடுகிறீர்கள். ஓரிரு வேளைகளில் காய்ச்சலும் குணமாகிவிடுகிறது. அல்லது காய்ச்சல் குறைவதற்கு கூடுதல் வேளை மாத்திரைகளை எடுத்துக்கொள்வீர்கள். ஒரு நோய் பல காரணங்களுக்காக வரலாம். காய்ச்சல் என்றால் சாதாரண காய்ச்சலா, வைரல் காய்ச்சலா, அல்லது வேறு நோய்களுக்கான அறிகுறியா என்று நமக்கோ, மருந்துக் கடையில் உள்ளவருக்கோ காரணம் தெரியாது. மருத்துவரிடம் சென்றால் என்ன காய்ச்சல், எதற்காக வந்திருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, அதற்கேற்ற மருந்துகளைக் கொடுப்பார். அவர் கொடுக்கும் மருந்துகளை முழுவதுமாக எடுத்துக் கொண்டால் அந்த நோயிலிருந்து முழுமையாகக் குணமாகி விடலாம். நாமே மருந்துகளை உட்கொள்ளும்போது அந்த நேரத்துக்கு குணமாகலாம், விரைவில் அது மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதற்காகத்தான் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்கிறார்கள் கல்யாண சுந்தரம்.

  கமலா 

No comments:

Post a Comment