Search This Blog

Saturday, December 24, 2011

புத்தாண்டுக் கொண்டாட்டம்

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் புது வருடம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகின்றன. ஜனவரி 1 புது வருடம் என்பது கிரிகேரியன் காலண்டர்படி உலகம் முழுவதும் வெகு பிரபலமாகக் கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே! கிறிஸ்து பிறந்து எட்டாவது நாளாக வரும் ஜனவரி 1 அன்று தான் அவருக்கு நாமகரணம் சூட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. மேற்கத்திய நாடுகளிலேயே, வரலாற்றில் பல தினங்கள் - டிசம்பர் 25, மார்ச் 1, செப்டம்பர் 1 - என புது வருடம் பின்பற்றப் பட்டு வந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால் நவீன கால கட்டத்தில் ஜனவரி 1 புது வருடம். அதேபோல் கொண்டாட்ட முறைகளும், புது வருட சம்பிரதாயங்களும் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகிறது.
பிரிட்டனில் புது வருடம்
ஜனவரி 1 நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு முதன் முதல் வீட்டுக்கு வரும் ஆண்தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார் என்று நம்புகிறார்கள். அந்த ஆண் வரும் பொழுது பணம், ப்ரெட் என்று அந்தக் குடும்பத்துக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொண்டு வருவார். அப்படிக் கொண்டு வந்தால், அந்த வருடம் முழுவதும் அந்தக் குடும்பத்துக்கு எல்லா வளமும் கிட்டும் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் ஒரு பெண்ணோ, செம்பட்டை முடிக்காரரோ அச்சமயத்தில் வந்தால், அதைக் கெட்ட சகுனமாகக் கருதுகின்றனர்.
சீனாவில் புது வருடம்
நமது நவராத்திரியைப் போல் சீனர்கள் புது வருடத்தை ஒன்பது நாட்கள் கொண்டாடுகிறார்கள். சீனப் புது வருடம் - யுவான் டான் - ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20க்குள் வரும். நமது ஊரில் இருப்பது போன்று அங்கும் சந்திரனின் சுழற்சியைக் கொண்டு கணக்கிடுவதால், குறிப்பிட்ட ஆங்கிலத் தேதியில் வரும் என்பதற்கில்லை. புது வருடம் அதிர்ஷ்டம், சந்தோஷம், செல்வம் என அனைத்தையும் கொணரும் என்றே சீனாவிலும் நம்புகிறார்கள். அன்றைய தினம் பெரிய அளவில் பேரணி, அணிவகுப்புகள் சாலைகளில் நடக்கும். அதை லட்சக்கணக்கான மக்கள் நின்று கண்டுகளிப்பார்கள். சீனாவைப் பொறுத்தவரை சிங்கமும், ட்ராகன் என்றழைக்கப்படும் கடல் நாகமும்தான் முக்கிய இடம் பெறும். புது வருடத்திலும் இந்த விலங்குகள் கொண்ட தோரணமும், ஆடை அலங்காரமுமே எங்கும் நிறைந்திருக்கும். கடல் நாகம் தங்களுக்கு நீண்ட ஆயுளையும், செல்வத்தையும் வழங்குவதாக அவர்களது நம்பிக்கை. அரக்கர்களுக்கு சப்தம் பிடிக்காது என்பதால், அவர்களை விரட்டியடிப்பதற்காக சீனாவெங்கும் பட்டாசு வெடித்துப் பட்டையைக் கிளப்புவார்கள். நமது ஊரில் இருக்கும் மஞ்சள் செடியைப் போன்று கடைவீதியிலிருந்து எல்லாரும் கும்காட் மரத்தை, புது வருடத்தன்று வீட்டுக்கு வாங்கி வந்து அலங்கரிப்பார்கள். பெரியவர்கள் சிவப்பு கவரில் பணம் வைத்து, சிறியவர்களுக்குக் கொடுத்து ஆசி வழங்குவார்கள்.
ஜெர்மனியில் புது வருடம்
ஜெர்மானியர்கள் ஜனவரி 1 அன்றே புது வருடத்தை கொண்டாடுகிறார்கள். இவர்கள் வீடுகளில் உருக்கிய ஈயத்தை, தண்ணீரில் விட்டு அது என்ன வடிவத்துக்கு மாறுகிறதோ அதைக் கொண்டு அந்த வருடத்திய பலனைச் சொல்வார்கள். உதாரணத்துக்கு அது இதய வடிவத்துக்கோ அல்லது வட்டமான மோதிர வடிவத்துக்கோ மாறினால், அந்த வீட்டில் கெட்டி மேளம் நிச்சயம். கப்பல் வடிவமென்றால் பிரயாணம் உண்டு, பன்றி உருவம் என்றால் சாப்பாட்டுக்கு அந்த வருடம் முழுவதும் பஞ்சம் இருக்காது இத்யாதி இத்யாதி. அன்று சாப்பாட்டில் கெண்டை மீன் கண்டிப்பாக இருக்கும். சாப்பிட்ட பிறகு ஒவ்வொருவரும் தங்கள் தட்டுகளில் சாப்பாட்டை நள்ளிரவு வரை கொஞ்சம் மிச்சம் வைப்பார்கள். அதனால் அந்த வீட்டில் சாப்பாடு நன்றாகத் தங்கும் என்று ஐதிகம்.
கிரேக்கர்களின் புது வருடம்
ஜனவரி 1 அன்று புது வருடத்துடன் புனித பேஸில் அவர்களின் நினைவு தினத்தையும் கிரேக்கர்கள் கொண்டாடுகிறார்கள். புனித பேஸில் ஏழைகளுக்கு உதவிய மகான், இரக்க குணமுடையவர். இவர்கள் கேக் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். கேக்கை சாப்பிடும்பொழுது மட்டும் கெடுபிடியான விதிமுறைகள் இருக்கும். அதாவது முதல் துண்டு புனித பேஸிலுக்கு, இரண்டாவது துண்டு வீட்டுக்கு, மூன்றாவது முதியவர்களுக்கு, பிறகு குழந்தைகளுக்கு, அதன்பின் வர முடியாதவர்களுக்கு என்று முறைப்படி கொடுத்து உண்பார்கள். அதே போல் வீட்டு செல்லப் பிராணிகளுக்கும் சில துண்டுகள் ஒதுக்கப்படும். அதிர்ஷ்டம், செல்வம், நீண்ட ஆயுள் என எல்லாவற்றையும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் வருகையை வைத்துக் கணிக்கிறார்கள். 
ஜப்பானில் புது வருடம்
ஜப்பானியர்கள் தங்கள் புது வருடத்தை - ஓஷாகட்சூ - ஜனவரி 1 அன்றே கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று இருக்கும் புது வருட சம்பிரதாயத்தையே பின்பற்றுகிறார்கள். அரக்கனை விரட்ட புது வருடத்தன்று வைக்கோலை வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள். எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்களாம். 108 திவ்யதேசம் மாதிரி, ஜப்பான் கோயில்களில் 108 முறை டணால் டணால் என்று மணியை ஓங்கி அடிப்பார்களாம். 
இந்த மாதிரி சம்பிரதாயங்களால் சந்தோஷம் குடிகொள்ளும் என்று ஒரு நம்பிக்கை. அதேபோல் கடல் நண்டு பொம்மைகள் செய்து வீட்டை அலங்கரிப்பார்கள். நண்டின் வளைந்த முதுகு முதுமையைக் குறிக்கும். நீண்ட ஆயுள் வேண்டுமென்று புத்த பகவானை வேண்டிக் கொள்வார்கள்.ஆக, உலகம் முழுவதும் மக்களுக்கு நீண்ட ஆயுள், செல்வம், மகிழ்ச்சி ஆகியவைதான் புது வருட பிரார்த்தனைகளில் பிரதான இடத்தைப் பிடிக்கின்றன.     

1 comment:

  1. ஒவ்வொரு நாட்டின் புத்தாண்டை அழகாக சொன்னதற்கு நன்றி!
    தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    அன்புடன் அழைக்கிறேன் :
    "மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

    ReplyDelete