Search This Blog

Friday, December 02, 2011

அஸ்வின் !

முதல் டெஸ்ட் தொடரிலேயே மேன் அஃப் தி சீரிஸ், இரண்டு மேன் அஃப் தி மேட்ச் விருதுகள், ஒரு டெஸ்ட் செஞ்சுரி என்று அமர்க்களமாக அஸ்வினின் டெஸ்ட் வாழ்க்கை ஆரம்பித்திருக்கிறது. டி20-யில் மிளிர்கிற பந்து வீச்சாளர்களை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதில் அதிக விக்கெட்டுகளை எடுக்கிற பந்து வீச்சாளரை நம்பி ஏமாறக் கூடாது என்பார்கள். ஆனால், அஸ்வினுக்குப் பெரிய திருப்புமுனை, ஏணி எல்லாம் டி20 மேட்சுகள்தான். எந்த பிட்சாக இருந்தாலும் அதில் அஸ்வினால் விக்கெட்டுகள் எடுக்க முடிகிறது.ரஞ்சி டிராபியில் மூன்று வருடங்கள் தொடர்ந்து ஆடி, அடிப்படைத் தேர்வை பாஸ் செய்து, முதல்முதலாக 2009ல் ஐ.பி. எல். அணியில் இடம்பிடித்தார் அஸ்வின். 2010 ஐ.பி.எல்.லில்தான் முதல் திருப்பு முனை. ஆரம்பத்தில் மோசமாக பந்துவீசி, சில ஆட்டங்களிலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் தேர்வாகி, 2010 ஐ.பி.எல்.-ஐ சென்னை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். அடுத்ததாக, சாம்பியன்ஸ் லீகில் தொடர் நாயகனாகத் தேர்வானார். உடனே, இந்திய அணியில் அஸ்வினுக்கு அதிக வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஒருநாள் ஆட்டங்களில், அதிக ரன்கள் கொடுக்காமல், தேவையான விக்கெட்டுகள் எடுத்து, கேப்டன் விரும்பும் சமத்துப்பிள்ளையாக இருந்தார். 
ஹர்பஜனின் மோசமான ஃபார்ம், அஸ்வினை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தியது. முதல் டெஸ்ட் தொடரிலேயே, 22 விக்கெட்டுகள் எடுத்து, ஒரு டெஸ்ட் செஞ்சுரியும் அடித்து மிரட்டிவிட்டார்.  அஸ்வின், பிடெக் முடித்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர். இளம் வயதில் பேட்ஸ் மேனாகக் கனவு கொண்டிருந்தவரை ஸ்பின் பக்கம் திருப்பியவர், தமிழக முன்னாள் ஸ்பின் பௌலர், சுனில் சுப்ரமணியன். கேரம் பந்துவீச்சு முறை அஸ்வினின் பெரிய பலம். இதேபோல விதவிதமான பந்துவீச்சு வகைகளால் பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து, தம் முத்திரையைப் பதித்துவிட்டார். தொடர்ந்து திறமையுடன் பொறுப்புடன் பந்து வீச வேண்டும். 2011 உலகக் கோப்பையில் அஸ்வின் இரண்டு ஆட்டங்கள்தான் ஆடினார். ஆனால், அந்த உலகக் கோப்பைப் போட்டி யின் ஆரம்பம் முதல் இறுதி வரை இவரைப் பற்றிய பரபரப்பு அதிகம். இறுதி ஆட்டத்தில், நெஹ்ராவுக்குக் காயமானவுடன் அஸ்வின் கட்டாயம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை வீரர்கள் ஸ்பின் ஆடுவதில் வல்லவர்கள் என்பதால் ஸ்ரீசாந்துக்கு அதிர்ஷ்டம். ஆனால், அந்த வருத்தங்களையெல்லாம் கடந்துவந்து சர்வதேச அரங்கில் அற்புதமாக அறிமுகமாகியிருக்கிறார் அஸ்வின். அஸ்வினுக்கு சில பலவீனங்கள் உண்டு. பேட்டிங்கில், கடைசி ஓவரில் இரண்டு முறை சொதப்பியிருக்கிறார். 2010 ஐ.பி. எல்.லில், பஞ்சாப்புடனான ஆட்டத்தின் கடைசி இரண்டு பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் மேட்சை Tie ஆக்கினார். மும்பை டெஸ்டிலும் கூட.ஒன்றுக்கும் மேற்பட்ட திறமைகள் இருக்கிறபோது, அது அணிக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது. தோனியைவிட இதற்கு சரியான உதாரணம் காட்ட முடியாது. கும்ப்ளே, ஹர்பஜனுக்கு அடுத்ததாகப் புதிய அத்தியாயத்துக்குத் தயாராகி இருக்கிறது இந்திய அணி. அதற்காகச் சில வீரர் களை மலைபோல நம்பியிருக்கிறது. அதில், அஸ்வின் பங்கு மிக முக்கியம்.

1 comment:

  1. அவர் எதிரிகளை ASH பண்ணும் WINனர்.....
    பகிர்விற்கு நன்றி நண்பரே!

    நம்ம தளத்தில்:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    ReplyDelete