Search This Blog

Saturday, December 17, 2011

எனது இந்தியா!(வராகமித்திரர்! ) - எஸ். ராமகிருஷ்ணன்

 
ந்திரகுப்தர் காலத்தில் வாழ்ந்த வானசாஸ்திர அறிஞர் வராகமித்திரர். உஜ்ஜயினியில் 505-ம் ஆண்டு பிறந்தார். கிரகணம் வரப்போவதை முன்கூட்டியே அறிந்து சொல்லும் எளிய முறையை வராகமித்திரர் கண்டறிந்தார். அதாவது, எண்ணெய்க் கிண்ணம் ஒன்றில் கீரையை மிதக்கவிடும் செயல்முறையின் வழியே எப்போது கிரகணம் தோன்றும் என்று சொல்லி இருக்கிறார். கூடுதலாக, கோள்களின் இணைப்பே கிரகணத்துக்குக் காரணம் என்று அறிவியல்பூர்வமாக எழுதினார். இது, கிரகணம் பற்றி வெள்ளைக்காரர்கள் கணித்து அறிவதற்கு பல நூற்றாண்டுக்கு முன்பே உருவான அறிவியல். பௌத்த மதம் புகழ்பெற்றிருந்த காலத்தில், இந்தியாவில் புகழ்பெற்ற ஆறு பௌத்தப் பல்கலைக்கழகங்கள் இருந்தன. அவை, நாலந்தா, விக்ரமசீலம், உடந்தாபுரி, சோமபுரம், ஜகத்தாலம், வல்லடி ஆகியவை. இந்த ஆறு பல்கலைக்கழகங்களிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தார்கள். தனித்தனிப் பாடப் பிரிவுகள் இருந்தன. நாலந்தாவில் 1,510 ஆசிரியர்கள் இருந்தார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.நுழைவுத் தேர்வு நடத்தித்தான் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். பேராசிரியர்களை 'துவார பண்டிதர்’ என்ற அழைத்தார்கள். பயிற்று மொழிகள் பாலியும் சமஸ்கிருதமும். ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் தனித்தனியாக விரிவுரை மண்டபம் என்று ஓர் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கல்வி நிலைய வளாகத்துக்கு உள்ளேயே ஆசிரியர்கள் தங்கியிருந்தார்கள். பேராசிரியர்​களாக நியமிக்கப்படுகிறவர்களுக்குத் தனியான பயிற்சி முறையும், தேர்வும் நடத்தி இருக்கின்றனர். நாலந்தாவினுள் 300 அறைகளும், ஏழு தனி வளாகங்களும் இருந்து உள்ளன.பல்கலைக்கழகத்தை நடத்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அருகில் உள்ள 20 கிராமங்களில் இருந்து, வசூலிக்கப்பட்ட வரியில்தான் பல்கலைக்கழகம் இயங்கியது. கல்வி வளாகத்துக்குள் பெரிய நூலகமும் இருந்துள்ளது. கி.பி. 1,037-ல் நடந்த படையெடுப்பில் நாலந்தா பல்கலைக்கழகம் எரிக்கப்பட்டது.காஞ்சிபுரத்திலும் நாகப்பட்டினத்திலும் இதுபோல பெரிய பௌத்தப் பல்கலைக்கழகங்கள் இருந்திருக்கின்றன. அவற்றைப்பற்றி யுவான்சுவாங் தனது குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.
 
இதே வேளையில், இங்கிலாந்தின் கல்வி வரலாற்றை எடுத்துப் பார்த்தால், 16-ம் நூற்றாண்டு வரை அங்கு கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரவே இல்லை. ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் 11-ம் நூற்றாண்டில் துவங்கப்​பட்ட போதும், அவை பெரிய கல்வி நிலையமாக வளர்ச்சி பெறவில்லை. 1546-ல் ஆக்ஸ்ஃபோர்டில் வேலை செய்தது ஐந்தே பேராசிரியர்கள்தான். அவர்களுக்குத் துணையாக சில பயிற்சி ஆசிரியர்கள் இருந்திருக்கின்றனர். 1805-ல்தான் புதிய பாடப் பிரிவுகளாக மருத்துவம் உயர்விஞ்ஞானம் அறிமுக​மாகிறது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வளர்ச்​சிக்கு முக்கியக் காரணம் தனிநபர்கள் அளித்த கொடைகள் மற்றும் தர்ம நிறுவனங்கள் தந்த நிலம் மற்றும் பொருளாதார உதவிகளே!இங்கிலாந்தில் 1780-களில் ஞாயிற்றுக்கிழமை வகுப்புகள் என்ற புதிய நடைமுறை துவங்குகிறது. 1802-க்கு பிறகுதான், ஆரம்பக் கல்வி மீது தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனாலும், கணிதம், புவியியல் மற்றும் இலக்கியம் தவிர வேறு துறைகளில் கல்வியில் அக்கறை காட்டப்படவில்லை. ஓர் ஆங்கிலப் பள்ளியில் பிரதானமாக லத்தீனும் கணிதமும்தான் கற்றுக்கொடுக்கப்பட்டன. அதுவும் 20-க்கும் குறைவான மாணவர்களே படித்தார்கள்.1812-ல் இந்தியாவில் பணியாற்றிய கிறிஸ்தவ மெஷினரியைச் சேர்ந்த ஹாவல், இங்கிலாந்து திரும்பி தனது சொந்தக் கிராமத்தில், இந்தியாவில் உள்ளது போல ஏழை எளியவர்களுக்கும் கல்வி தரப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்தபோது, பிரபுக்களின் பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் கல்வி எப்படி, ஏழைகளுக்கு அளிக்க முடியும் என்று, மதச் சபையே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது.  எல்லோருக்குமான கல்வி என்பது இங்கிலாந்துக்கு முன்பே இந்தியாவில் நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதே வரலாற்று உண்மை.ஆனால், இந்தியாவில் நிலவிய சாதியக் கட்டுப்பாடு, கல்வி கற்றுத்தருவதில் சூத்திரர்களை ஒதுக்கி வைத்தது, பெண் கல்வியை முற்றிலுமாக முடக்கியது என்பதையும் மறுக்க முடியாதுதான். அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற குரல் நியாயமானது. எந்தக் கல்வி என்பதில்தான் பிரச்சனையே.மன்னர் ஆவதற்கும் மந்திரி ஆவதற்கும் கல்வித் தகுதி தேவை இல்லை. ஆனால், சாதாரண மனிதன் பொருளாதார ரீதியாக வசதி இல்லாமல் போகும்போது கல்வி மட்டுமே தன்னை மேம்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்கிறான். கல்வியை நாடிப் போகிறான். அதுதான் இந்தியக் கல்வியின் ஆதாரப் புள்ளி.
 
ஆங்கிலக் கல்வி உருவாக்குவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்தியாவில் வகுப்பறை, பாடப் பிரிவு, பாட நேரம், பயிற்றுவிக்கும் சிறப்பு ஆசிரியர்கள், தங்கிப் படிக்கும் முறை என எல்லாமே அறிமுகமாகி விட்டது. கூடுதலாக, இயற்கையோடு இணைந்து கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, மலையின் மீதோ, காட்டின் அமைதியான பகுதியிலோ சில கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டன. கல்வியோடு ஒழுக்கமும், வாழ்க்கைப் பாடங்களும் இணைந்து போதிக்கப்பட்டன. ஆசிரியர் - மாணவர் உறவு என்பது, தந்தை - மகன் உறவைப் போல நெருக்கமானதாகவே இருந்து இருக்கிறது.1,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, மதுரையைச் சுற்றி இருக்கும் எட்டு மலைகளிலும் சமணர்கள் குகைப் பள்ளிகளை நடத்தி, மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்தனர். பள்ளி என்ற சொல் சமணம் தந்ததுதான். மலைக் குகையின் உள்ளே கல்லால் ஆன படுகைகளை அமைத்து, அங்கேயே பாடம் படித்து, சமைத்துச் சாப்பிட்டு அந்த இடத்திலேயே உறங்கினர். தங்கிப் படிக்கும் பள்ளி என்ற முறை அவர்கள் உருவாக்கியதே. அதனால்தான் இன்றும் சமையல் அறையை மடப்பள்ளி என்றும், படுக்கை அறையை பள்ளிஅறை என்றும் சொல்கிறோம். அவை, ஒரு காலத்தில் சமணப் பள்ளியின் பகுதியாக இருந்ததன் நினைவுதான் இதற்கான காரணம்.இப்படியான இந்தியாவின் அசலான கல்வி முறைகளை ஒழித்து, அதன் மீது உருவாக்கப்​பட்டதுதான் இன்று நாம் பயிலும் ஆங்கிலக் கல்வி முறை. சிறைச்சாலை போன்ற வடிவத்திலே வகுப்பறையை ஆங்கிலேயர்தான் வடிவமைத்​தனர். படிக்காத மாணவனை பிரம்பால் அடிக்க வேண்டும் என்பதும், ஐரோப்பாவில் இருந்து நமக்கு அறிமுகமானதுதான்.மாணவனின் எழுத்துத் திறனை மட்டும்வைத்து பரீட்சை வைப்பதைவிடவும், அவனது பேச்சு, எழுத்து, தனித்திறன் ஆகிய மூன்று தளங்களில் பரீட்சை நடத்தி அவனது அறிவைச் சோதனை செய்தது இந்தியக் கல்வி முறை.1931-ம் ஆண்டு வட்ட மேஜை மகாநாட்டில், ''இந்தியாவின் ஆயிரமாண்டு கால இந்தியக் கல்வி முறை ஒழிக்கப்பட்டு, புதிய கல்வி புகுத்தப்பட்டதால், முன்பைவிடவும் அதிகம் படிப்பறிவு இல்லாதவர்கள் உருவாகிறார்கள்'' என்று ஆதங்கப்பட்டுப் பேசினார் காந்தி. அதற்குப் பலத்த கண்டனம் எழுந்தது. ஆனால், அவரது ஆதங்கம் நியாயமானது என்பதை இன்றைய கல்விக் கொள்ளைகள் சுட்டிக்காட்டுகின்றன.
 
மெக்காலே கல்வி முறை அறிமுகமாவதற்கு முன், பாடசாலை, மதரஸா, குருகுலம் என்ற மூன்று வகையாக அடிப்படைக் கல்வி அமைப்புகள் இந்தியாவில் நடைமுறையில் இருந்தன. இந்தியாவில் சாதியக் கட்டுப்பாடு காரணமாக அடித்தட்டு மக்களுக்குக் கல்வி கிடைக்காமல் போனதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வெள்ளை அரசு, உயர் வகுப்பினரோடு சமமாக வேண்டும் என்றால்... அதற்கு ஆங்கிலக் கல்விதான் தேவை என்ற வாதத்தை முன்வைத்தது. அதை அன்றைய அடித்தட்டு சமூகமும் உண்மையென நம்பி ஏற்றுக்கொண்டது.ஆனால், பேயிடம் தப்பி பூதத்திடம் மாட்டிக்​கொண்ட கதை போல, ஆங்கிலக் கல்வி அறிமுக​மாகியதால் ஏற்பட்ட வளர்ச்சி ஒரு புறமும், நவீனத் தீண்டாமையாக விவசாயிகள் மற்றும் உழைப்பாளிகளைத் தீண்டத்தகாதவர்களை போல ஆங்கிலம் படித்தவர்கள் நடத்தும் முறை மறு பக்கமும்  உருவானது.ஆங்கிலக் கல்வியால் உருவான நன்மைகளை நாம் மறுக்க முடியாது என்றபோதும், அது உருவாக்கிய ஆங்கில மோகம் நம்மை ஆட்டிவைக்கிறது. தமிழில் கல்லூரிப் படிப்பை படித்தவர்கள்கூட தரக்குறைவானவர்களாக நடத்தப்படுவதும், ஆங்கிலம் பேசத் தெரியாத காரணத்தால் குற்றவுணர்ச்சி கொள்வதும், எளிய விண்ணப்பங்கள்கூட ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்படும் நிலை உருவானதும் ஆங்கிலம் மீதான அதீத மயக்கமின்றி வேறென்ன!அசோகர் வாழ்ந்தார், அக்பர் மொத்த இந்தியாவை அரசாட்சி செய்தார், ராஜேந்திர சோழன் சோழ சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினான் என்றெல்லாம் வரலாற்றில் வாசிக்கிறோம். 
 
 
அவர்கள் எந்த மொழியில் பேசினார்கள்? தாய்மொழி இல்லாமல் பிற மொழியில் பேசியா ஆட்சி செய்தார்கள்? அந்த உண்மையை ஏன் வரலாற்றில் இருந்து நாம் கற்க மறந்தோம்?எல்லா மொழிகளையும் போல ஆங்கிலமும் பயன்பாட்டுக்கான ஒரு மொழியே. தேவைப்படுகிறவர்கள் அதைக் கற்றுக்கொள்ளட்டும். சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளட்டும். வாழ்வை விருத்தி செய்துகொள்ளட்டும். ஆனால், ஒரு மொழி தனது அதிகாரத்தால் இன்னொரு மொழியை அழித்து ஒழிப்பதை மக்கள் மௌனமாக பார்த்துக்கொண்டு இருப்பதுதான் வேதனை தருவதாக இருக்கிறது.
 
விகடன் 
 
 




2 comments:

  1. தெரியாத தகவல்கள்!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் வலையில்:
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete