Search This Blog

Sunday, December 04, 2011

இந்திய ரூபாய்க்கு என்ன பிரச்னை?

இந்த நிதியாண்டு இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகவும் சவாலாக உள்ளது. ஜி.டி.பி. குறைவது,  உற்பத்தி வீழ்ச்சி, பணவீக்கம் அதிகரிப்பது, பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாயின் மதிப்பு வீழ்ந்தது என பல்முனை தாக்குதல்களில் அடிபட்ட புலி போல சுருண்டு கிடக்கிறது இந்தியப் பொருளாதாரம். இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ரூபாயின் மதிப்பு பெரிய அளவில் குறைந்ததுதான். கடந்த சில மாதங்களாக இந்திய ரூபாய் பற்றி தவறான செய்திகளே அடிபடுகிறது. காரணம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14.5 சதவிகிதம் வீழ்ந்ததே. 2009 மற்றும் 2010-களில் ஆண்டுக்கு ஐந்து சதவிகிதம் இந்திய ரூபாய் உயர்ந்தது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.
2008-ம் ஆண்டு இந்திய ரூபாய் 19 சதவிகிதம் சரிந்தது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், ரூபாயின் மதிப்பு வருடா வருடம் உயருவதும், குறைவதும் எப்போதுமே நடக்கிற நிகழ்வுதான். ஏன் டாலரின் மதிப்பு உயருகிறது?. இந்திய ரூபாய் சரிகிறது.? மிகவும் சிம்பிளாக சொன்னால், சப்ளை டிமாண்ட் தியரிதான். டாலர் அதிகமாக வாங்கப்படுகிறது. ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் விற்பதற்கு தயாராக இருக்கும் பொருள் சரிவை சந்திப்பது இயல்புதான்.ஆனால், டாலர் மட்டும் ஏன் உயருகிறது என்பது எல்லோருக்கும் வரும் கேள்விதான். உலக கரன்சி என்பதால் உலக நடப்புகளை வைத்துதான் டாலர் ஏன் உயருகிறது என்பதை கண்டிபிடிக்க முடியும். அதை கண்டுபிடிக்க முயலுவதைவிட எல்லா கரன்சிகளுக்கு எதிராகவும் மதிப்பிழந்துள்ள ரூபாய்க்கு என்ன பிரச்னை என்கிற கேள்விக்கு பதில் தேடுவோம்.எந்த ஒரு சொத்தும் அடிப்படைக் காரணங்களையும் மீறி உயர்வதைப் போல  சரியவும் செய்கிறது. இது ரூபாய்க்கும் பொருந்தும் அல்லவா? அதாவது, டாலரானது நியாயப்படுத்த முடியாத அளவுக்கு ரூபாய்க்கு எதிராக உயர்ந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதற்கு ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு பதில் இருக்கலாம். அதுதான் சந்தையை வழி நடத்துகிறது.
என்னுடைய பார்வையில் ரூபாய் சரிந்தது நியாயமாகதான் படுகிறது. அதற்கான காரணங்களும் இருக்கிறது. முதலாவது, எல்லா கரன்சிகளுக்கு எதிராகவும் ரூபாய் மதிப்பிழந் துள்ளது. தற்போதைய நிலைமையில், விலைவாசி உயர்வின் காரணமாக நம் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. பொருளாதார பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், கடந்த சில ஆண்டுகளாகவே பணவீக்கம் உயர்ந்துக் கொண்டே வருகிறது.சாதாரணமாக எல்லோரும் கரன்சியை அதன் வாங்கும் சக்திக்காக வைத்திருப்பார்கள். ஆனால், பணவீக்கம் மக்களின் வாங்கும் திறனை குறைத்துக் கொண்டே வருகிறது. ஆனால், சில வெளிநாடுகளில் மக்கள் தங்களது நாணயங்களை விற்று அந்நிய நாட்டு கரன்சியை வாங்கி வைத்துக் கொள்வார்கள். அப்படி செய்யும்போது அவர்களின் வாங்கும் திறன் குறையாது. இந்த வசதி இந்தியாவில் இல்லை. அதாவது,  அந்நிய நாட்டு நாணயத்தை ஒருவர் காரணமில்லாமல் அதிகளவில் வைத்திருக்க முடியாது.பணவீக்கம் அதிகரிப்பதினால் மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. அப்போது அந்த கரன்சியின் மதிப்பும் குறைகிறது. (உதாரணமாக, ஒரு ரூபாய் சாக்லேட் இரண்டு ரூபாய் ஆகிறது என்றால் அந்த பொருளின் விலை உயர்ந்தது என்று சொல்வதை விட அந்த ரூபாயின் மதிப்பு குறைகிறது என்றுதான் அர்த்தம்!).இந்த பணவீக்கம் நாட்டின் பொருளாதாரத்தை எப்படி சீர் குலைக்கிறது என்று பார்ப்போம். தற்போதைய நிலையில் பொருளின் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். காரணம், இப்போது வாங்காவிட்டால் அந்த பொருளின் விலை இன்னும் ஏறிவிடுமே என்று நினைப்பதால்தான்! தொடர்ந்து வருமானம் உயர்ந்தால்தான் இது நடக்கும். நமது சம்பள உயர்வு வருடத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒருமுறை என நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், பொருட்களின் விலையோ தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும்போது மக்களால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் பொருட்கள் வாங்குவதை தள்ளிப் போட்டுவிடுகிறார்கள்.
இன்னொரு பக்கம் முதலீட்டு செலவுகள் அதிகரிப்பதால் தொழில் முனைவோர்களும், பிஸினஸ்மேன்களும்  உற்பத்தியைப் பெருக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதன் காரணமாக உற்பத்தி குறைந்து பற்றாக்குறை அதிகரித்து, பணவீக்கம் உயருகிறது. இப்படி பணவீக்கம் அதிகரிக்கும்போது உள்நாட்டு முதலீட்டாளர்களும் சரி, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சரி, இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குவார்கள். அந்நிய முதலீடு வராத பட்சத்தில் பணத்தின் மதிப்பு குறையும்இன்னொரு பக்கம் ஏற்றுமதியாளர் களின் லாபம் உற்பத்திப் பொருட்களின் விலை ஏற்றத்தால் குறைந்து கொண்டி ருக்கும். சர்வதேச சந்தையின் போட்டி காரணமாகப் பொருளின் விலையை உயர்த்த முடியாது. அதனால் ஏற்றுமதியாளர்கள் தங்களின் லாபம் அதிகரிக்க ரூபாயின் மதிப்பு சரிவதை ஆதரிப்பார்கள்.இன்னொரு கோணத்தில் பார்த்தால், பணவீக்கம் காரணமாக உள்நாட்டு பொருட்களை விட வெளிநாட்டு பொருட்கள் விலை குறைவாக இருப்பதுபோல தோன்றும். அதனால் அதிகளவுக்கு இறக்குமதி செய்வோம். அப்போது வெளிநாட்டு கரன்சியின் தேவை அதிகமாக இருக்கும். இப்படி பணவீக்கம் காரணமாக எல்லா கோணத்திலிருந்தும் ரூபாய் அடி வாங்கி அதன் மதிப்பு சரிவடையும்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவடைய ஆரம்பிக்கும்போது அந்நிய கரன்சியில் கடன் வாங்கி இருக்கும் நிறுவனங்கள் கடனின் அசல் தொகை ரூபாயின் மதிப்பில் உயர்வதால் தங்கள் கடனை வேகமாக திருப்ப முயல்வார்கள். இதனால் அந்நிய கரன்சிகளுக்கான டிமாண்ட் எகிறி, ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடையும். இதனால் நிறுவனங்களின் லாபம் குறைய, அயல்நாட்டுக் கடன்/முதலீட்டின் வரத்து குறையும். இது பொருளாதாரத்தை இன்னும் சிக்கல் நிறைந்ததாக ஆக்கும்.
சரி, இப்போது நம் நாட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பொதுமக்களுக்கு சில பொருட்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ மத்திய, மாநில அரசுகள் கொடுத்து வருகிறது. இதனால் உற்பத்தியா ளர்கள் நஷ்டம் அடைகிறார்கள். அவர்களுக்கான இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் தருகின்றன. இந்த பணத்தை மத்திய, மாநில அரசுகள் ஏதாவது ஒரு வகையில் திரும்ப பெற்றுத்தானே ஆகவேண்டும்.இதற்கு அரசாங்கத்துக்கு இரண்டு வழிகள்தான் இருக்க முடியும். முதலாவது, கூடுதலாக வரி விதிப்பதன் மூலம் வருமானத்தைப் பெருக்கலாம். அல்லது ரிசர்வ் வங்கியிடம் சொல்லி அதிக பணத்தை அச்சடித்துக் கொள்ளலாம்.இரண்டுமே நல்ல முடிவல்ல. வரிகளை உயர்த்துவதன் மூலம், மக்கள் தங்களது வருமானத்தை மறைக்கப் பார்ப்பார்கள்; சில பிஸினஸ்மேன்கள் நஷ்ட கணக்கை கூட காண்பிப்பார்கள். இரண்டாவது, கரன்சி அச்சடிப்பதால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாகி இன்னும் அதிகமாகச் செலவு செய்வார்கள். இதனால் பொருட்களின்  விலை மீண்டும் அதிகரிக்கும். அரசு இலவசங்களை கொடுப்பதால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கிறது. இதனால் பணவீக்கம் அதிகரிக்க,  ரூபாயின் மதிப்பும் குறையும்.மத்திய அரசு இதெல்லாம் தெரிந்தும் குறுகிய கால நோக்கோடு தேர்தல் வெற்றிகளுக்காக வரி வருமானத்தைவிட அதிகமாகச் செலவு செய்கிறது. இதனால் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்து பொருளாதார சரிவுதான் ஏற்படும்.  
சமீபத்தில் தமிழக அரசாங்கம் போக்குவரத்து, பால் கட்டணங்களை உயர்த்தியது. இதற்கு பல தரப்பினரிட மிருந்தும் கண்டனம் வந்தது. பெரும் பாலான பத்திரிகைகள், அரசியல் கட்சிகள், பல அமைப்புகள் கட்டண உயர்வை கண்டித்து வாபஸ் வாங்கச் சொல்லி வற்புறுத்தின.  கடந்த பத்து வருடங்களாக டிக்கெட் விலையை உயர்த்தாமல் எப்படி ஒரு அரசு நிறுவனம் நடத்த முடியும் என்று தெரியவில்லை. அதே சமயம், அரசாங்கம் வீண்செலவுகளைக் குறைப்பதன் மூலமும், அமைச்சர்கள், அதிகாரிகள் போன்றோர்களை எல்லாவற்றிற்கும் பொறுப்பெடுத்துக் கொள்ளச் செய்வதன் மூலமும் விலை உயர்த்தாமல் சமாளிக்கலாம். ஆனால், நாமோ அமைச்சர்களை பொறுப்பேற்கச் செய்யாமல், இலவசங்களை வாங்கி சந்தோஷப்படுகிறோம்.  அந்நியன் படத்தில் கிளைமேக்ஸில் ஒரு வசனம் வரும். நம்முடைய பிரச்னைகளுக்கெல்லாம் காரணம், தவறு செய்யும் அரசியல்வாதிகளோ,  தவறு செய்யும் அரசு அதிகாரிகளோ, அல்லது தவறு செய்யும் தலைவர்களோ அல்ல. நம் அனைத்து பிரச்னை களுக்கும் நாம்தான் காரணம். ஆனால், நாம் நம்மை தவிர மற்ற அனைவரையும் குற்றவாளி களாக்குகிறோம். இலவசம் என்னும் மாயவலையில் விழுந்து நாம் மட்டும் சீரழியவில்லை. நம்முடைய அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையும் குட்டிச்சுவராக்குகிறோம். இன்று நாம் அடையும் இலவசங்கள் நம் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அடகு வைத்துதான் பெறுகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.எப்போது நம்முடைய எண்ணங் களை மாற்றப் போகிறோம்.? ரூபாயின் சரிவுக்கு யார் காரணம்..? நாம்தான்! நம் எண்ணங்கள் மாறும்போது இந்திய அரசியல் மாறி இருக்கும். இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்திருக்கும்.

விகடன் 

1 comment: