Search This Blog

Sunday, November 13, 2011

ஹர்கோபிந்த குரானா - நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி


அமெரிக்காவில் இருக்கின்ற மச்சசுசெட்டஸ்  இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் பயாலாஜி மற்றும் கெமிஸ்ட்ரி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பயோ கெமிஸ்ட்ரியில் முன்னணி ஆராய்ச்சியாளரான இவருக்கு 1968 ஆம் வருடம் மருத்துவத்துறைக்காக நோபல் பரிசு கிடைத்தது. அறிய கண்டுபிடிப்புகளுக்காக மருத்துவத்துறையில் அவ்வருடம் மூன்று பேருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. அதில் இவரும் ஒருவர்.தற்போது பாக் பகுதியில் இருக்கின்ற மேற்கு பஞ்சாபில் உள்ள சிறிய கிராமமான ராய்பூரில் 1922 வருடம் பிறந்தவர். இவரது பெற்றோருக்கு இவர் 5 வதாகப் பிறந்தவர். இவரது தந்தை கிராமத்தின் கணக்குப்பிள்ளை ஆவார். அச்சமயத்தில் இவரது கிராமத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 100 கும் குறைவு.


பாகிஸ்தானில் இருக்கின்ற முல்தானில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் 1943 இல் தனது பட்டப்படிப்பையும் 1945 இல் பட்ட மேற் படிப்பையும் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ-கெமிஸ்ட்ரியில் முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் அவரது மேற்படிப்பிற்காக நிதி உதவி செய்து அவரை இங்கிலாந்தில் இருக்கின்ற லிவெர்பூல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தது. அங்கு அவர் தனது ஆராய்ச்சிக்காக 1948 வருடம் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு சுவிட்சர்லாந்த் சென்ற அவர் பெடரல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் மேலும் தனது  ஆராய்ச்சிப் படிப்பினைத் தொடர்ந்தார். அச்சமயத்தில் அங்கே சந்தித்த எஸ்தர் என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.தனது ஆராய்ச்சியை மேற்கொண்ட குரானா 1952 ஆம் வருடம் அங்கிருந்து கனடா நாட்டில் வான்கூவரில் இருக்கின்ற பிரிட்டிஷ் கொலம்பியா ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார். 8 வருடங்கள் ஆராய்ச்சிகளை மேற் கொண்டு வந்த அவர் அங்கிருந்து 1960 ஆம் வருடம் அமெரிக்காவில் இருக்கின்ற விஸ்கான்சின் பல்கலைக் கழகத்திற்கு சென்றார்.


அங்கு அவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மரபணு சம்பந்தப்பட்ட ஆராச்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டதற்காக 1968 ஆம் வருடம் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.  அதைத் தொடர்ந்து அவர் 1970 ஆம் வருடம் மச்சசுசெட்டஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தனது இடைவிடாத ஆராய்ச்சியால் பல அறிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கியுள்ள குரானா அவர்கள் 2007 ஆம் வருடம் பணியிலிருந்து ஓய்வு பெரும் வரை அந்த நிறுவனத்திலேயே பணிபுரிந்து வந்துள்ளார்.எண்ணற்ற இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து அவர்களது ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டி வந்துள்ளார். ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவருக்கு பேராசிரியராக இருந்து பல மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதுதான் மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட அவரைத்தேடி மாணவர்கள் வந்து கொண்டே இருந்தனர். அவர் மாணவர்கள் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தார் மாணவர்களும் அவர் மீது பெரும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தனர்.

தோன்றிப் புகழோடு தோன்றுக என்கிற வள்ளுவரின் வாக்கினுக்கு ஏற்ப வாழ்ந்துவிட்டு சென்றுள்ள பாரதத் தாயின் புதல்வர் ஹர்கோபிந்த குரானாவிற்கு நமது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்திடுவோம்.89 வயதில் காலமாகியுள்ள  ஹர்கோபிந்த குரானவிற்கு மனைவி மற்றும் மகள் ஜூலியா மகன் தவே ஆகியோர் உள்ளனர்.தனது அயராத ஆராய்ச்சியினால் மனித குலத்திற்கு மாபெரும் தொண்டு செய்துவிட்டுச் சென்றுள்ள குரானாவின் மறைவு பற்றிய செய்திகளைக் நமது ஊடகங்களில் காணமுடியவில்லை.பயங்கரவாதி கள்ளக் கடத்தல்காரன் மாபியா கும்பலின் தலைவன் தாவுத் இப்ராஹீம் மரணப் படுக்கையில் கிடக்கிறான் என்றும் அவன் இறந்த பிறகு அவனது உடல் மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று அவன் தனது விருப்பத்தினை கூறியுள்ளான் என்று செய்திகளை போட்டு வருகின்றனர்.நாட்டில் எத்தனையோ பெண்களுக்கு அன்றாடம் குழந்தை பிறந்து கொண்டேதான் இருக்கின்றது.  ஆனால் ஐஸ்வர்யாராய்க்கு என்ன குழந்தை எப்போது பிறக்கப் போகிறது என்பதிலேயே கடந்த ஒரு வாரகாலமாக பொறுப்பான நமது ஊடகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.ஆனால் மனித குலத்திற்கு உண்மையான தொண்டினை செய்து விட்டுச் சென்றுள்ள விஞ்ஞானி ஹர்கோபிந்த குரானாவை மறந்து விட்டனர்.  ஆராய்ச்சியாளர்கள் உள்ளத்தில் என்றென்றும் அவரது நினைவு இருந்துகொண்டே இருக்கும். அவரது ஆன்மா சாந்தி அடைந்திட பிரார்த்தனை செய்திடுவோம்.



 ஹர்கோபிந்த குரானா பெற்றுள்ள நோபல் பரிசு குறித்து விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு.





No comments:

Post a Comment