Search This Blog

Sunday, November 06, 2011

கல்லடிபடும் சச்சின்!


சோயிப் அக்தர் சச்சினை விமர்சித்து எழுதின புத்தகம், இப்போது டாப் செல்லர். இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஜெயவந்த் லீலே தன்னுடைய I Was There என்கிற புத்தகத்தில் சச்சினைத் தாக்கி, சில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில், சச்சினைப் பற்றி லீலே சொன்னதெல்லாம் தினமும் பத்திரிகையில் வந்து கொண்டிருப்பதால் அந்தப் புத்தகமும் அதிக கவனத்துக்கு ஆளாகியிருக்கிறது. லீலே சொல்லும் குற்றச்சாட்டுகள் என்ன?


‘1999ல் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டில் தோற்றுப்போனவுடன் தன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் சச்சின். ராஜினாமா கடிதத்தை என்னிடம் கொடுத்தபோது நான் பதறிப் போய்விட்டேன். தொடரில், இன்னுமொரு ஒரு டெஸ்ட் ஆடவேண்டி இருந்தது. ரவி சாஸ்திரி, ராஜ்சிங் துங்கர்புரிடம் பிரச்னையைச் சொன்னேன். அவர்களும் சச்சினிடம் பேசினார்கள். ஆனால் சச்சின் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. வேறுவழியில்லாமல் சச்சினின் மனைவி அஞ்சலியிடம் பேசி நிலைமையை எடுத்துச் சொன்னோம். அவர் சச்சினிடம் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறச் செய்தார். அடுத்த டெஸ்டிலும் இந்திய அணி தோற்றது.ஒரு தேர்வுக்குழுக் கூட்டத்தில், மும்பை பந்துவீச்சாளர் நிலேஷ் குல்கர்னியைப் பரிந்துரைத்தார் சச்சின். ஆனால், அவர் பந்துவீசி சச்சின் பார்த்தது கிடையாது. அந்த ரஞ்சி டிராபி சீஸனில், மும்பை அணியிலிருந்து குல்கர்னியை நீக்கியிருந்ததையும் சச்சின் அறிந்திருக்கவில்லை. யாரோ ஒருவர் தவறாகச் சொன்னதை நம்பி ஏமாந்து போனார்.1999ல் மேட்ச் பிக்ஸிங் உச்சத்தில் இருந்த நேரம். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்ச் ஒன்றில், இந்திய அணி, நியூசியை ஃபாலோ ஆன் செய்தது. இதனால், தாம் மீண்டும் பந்துவீசப் போவதாக நடுவர்களிடம் சச்சின் அறிவித்தார். ஆனால், இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கபில் மறுத்துவிட்டார். இறுதியில், ஜெயிக்கவேண்டிய டெஸ்ட் டிராவாகிப் போனது. வயதில் மூத்தவர்களுக்கு சச்சின் மிகுந்த மரியாதை அளிப்பார். அவர்கள் சொல்வதை அமல்படுத்துவது தனது கடமை என நினைத்தார். இப்படி நிறைய பேரின் ஆலோசனைகளை கேட்டதனால்தான், கேப்டனாக பிரகாசிக்க முடியவில்லை.’


இது போதாதென்று, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல், ‘ஃபியர்ஸ் ஃபோகஸ்’ என்ற நூலில் சச்சினைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்.‘மலேசியாவில், 2006-ல் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சச்சின் சரியாக விளையாடவில்லை. இதையடுத்து ஒரு நாள், 2 மணி நேரத்துக்கும் மேல் என்னுடன் உரையாடினார். அவர் தனது அப்போதைய ஆட்டம் குறித்தும், காயங்கள் குறித்தும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். அவர் மீது கோடிக்கணக்கானோர் வைத்திருந்த எதிர்பார்ப்பின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். சில சமயங்களில் அவர் பலவீனமாக இருப்பார். அணியுடன் பயணம் செய்யும் போது தனது ஹெட் ஃபோனைக் கூட வைத்துக் கொள்ளமாட்டார். முழு கவனமும் விளையாட்டு பற்றியே இருக்கும். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனிடம் கூட மக்கள் இந்த அளவுக்கு எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 1989 முதல் மக்களின் எதிர்பார்ப்பை அவர் சுமந்தே வந்துள்ளார். அவருக்கு நண்பர்களும் நிறைய பேர் கிடையாது.’2007 உலகக் கோப்பையில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருந்தது பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்ட சேப்பல், ‘இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மாஃபியா கும்பல் போலச் செயல்பட்டு இளம் வீரர்களை மிரட்டுகிறார்கள்,’ என்று பேசியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுத்த சச்சின், ’உலகக் கோப்பை போட்டியின்போது வீரர்கள் யாரிடமும் அவர் பேசவே இல்லை. நாங்கள் ஏதாவது கருத்து கூறினால் அதை ஏற்க மறுத்தார். பயிற்சியாளரே இப்படி நடந்து கொண்டால், எப்படி வீரர்களால் சிறப்பாக விளையாட முடியும்,’ என்று கூறினார். அதற்குத்தான் இப்போது மலேசியா தொடரைக் கையில் எடுத்திருக்கிறார் சேப்பல். 


இப்படி கிரிக்கெட் புத்தகம் எழுதுபவர்களெல்லாம் ஏன் சச்சினைக் குறி வைக்கவேண்டும்? புத்தக வெளியீட்டின்போது, சச்சின் குறித்த கருத்துகளை மட்டும் ஏன் மீடியாவுக்கு அளிக்கவேண்டும்? இதற்கெல்லாம் ஒரே பதில். புத்தகம் அதிக கவனம் பெறவேண்டும். அதிக காப்பிகள் விற்கவேண்டும். ஜெயவந்த் லீலே போன்றவர்கள் ஒரேநாளில் தன் வாழ் நாள் புகழை அடைவார்கள். நிச்சயம் சச்சின் யார்மீதும் மானநஷ்ட வழக்கு போடமாட்டார். சச்சினைப் பற்றி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால், அதில் தகவல்கள் மிகச்சரியாக இருக்க வேண்டும். மேலும், ஒரு கிரிக்கெட் வீரர் என்பவர் ரோபோ கிடையாது. எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமல் வாழ்வதற்கு. அவர் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யும்போதுதான் ரசிகர்களின் கடும் கோபத்துக்கு ஆளாகிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் சச்சின் நிராகரித்து மௌனம் காப்பதுதான் சரியான பதிலடியாக இருக்கிறது.


No comments:

Post a Comment