Search This Blog

Tuesday, November 08, 2011

இந்தியாவில் அந்நியர்களின் வேட்டை - கி.பி. 1757 முதல் 1857 வரை


பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதித் தொடக்கத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதி முடிவு வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் பாரதம் அந்நியர்களின் வேட்டைக் காடாக விளங்கியது.பிரிட்டிஷ்-பிரெஞ்சு-டச்சு-போர்ச்சுகீசு நாடுகளின் நாடோடி வர்த்தகக் கூட்டங்கள், தங்கள் சரக்குகளை விற்கும் சந்தைக் கடையாக பாரத நாட்டைப் பயன்படுத்தின. வாணிகத்தில் ஏற்பட்ட போட்டி பொறாமை காரணமாக, அந்த நாடோடிகள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டதோடு, உள்நாட்டு மன்னர்களிடையேயும் சண்டை மூட்டிவிட்டுப் பாரதம் முழுவதையும் ‘குருக்ஷேத்திரம்’ ஆக்கினர். 


 ‘அரசுரிமை ‘ஏலம்’


1757ல் வடக்கே வங்கத்தில் நடந்த ‘பிளாசிப் போர்’ தொடங்கி, 1857ல் வடபாரதம் முழுவதிலும் நடைபெற்ற ‘சிப்பாய்ப் புரட்சி’ வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் சிறியவையும் பெரியவையுமாக எத்தனை எத்தனையோ பயங்கரப் போர்கள் நடைபெற்றன. அந்தப் போர்களிலே பாரத மன்னர்களின் தலைகளைப் பந்தாடினார்கள் பரங்கியர்கள். அரியாசனத் தமர்ந்து அரசாளும் உரிமையையும் தங்கள் வர்த்தகச் சரக்காக்கி ‘ஏலத்’தில் விட்டார்கள். இங்குமங்குமாகப் பரங்கியர்களை எதிர்த்துப் போரிட்ட ஒரு சில சுதேச மன்னர்கள், தங்கள் சகோதர மன்னர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு அந்நியர்களால் மிகக் கொடுமையாகப் பழிவாங்கப்பட்டார்கள்.இதற்கு பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், சகோதர மன்னர்களான புதுக்கோட்டை, எட்டயபுரம் அதிபதிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டதை சான்றாகக் கொள்ளலாம்.பாரதத்தில் புகுந்து, அதனை அடிமைப்படுத்த முயன்றவர்கள் பிரிட்டிஷ்-பிரெஞ்சு-டச்சு-போர்ச்சுகீசு எனப் பல நாட்டினராயினும், அவர்களிடையே நடைபெற்ற போட்டி – போராட்டங்களில் இறுதியாக வெற்றி பெற்றவர்கள் பிரிட்டிஷாரே ஆவர். சில சின்னஞ்சிறு பகுதிகள் நீங்கலாக, பாரதம் முழுவதையுமே பிரிட்டிஷார் கைப்பற்றிக் கொண்டனர்.

பாம்பின்வாய்த் தேரை!

பாம்பின் வாய்ப்பட்ட தேரை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கப்படுவதுபோல, ‘ஆங்கிலேயர் ஆதிக்கம்’ என்னும் மலைப்பாம்பின் வாய்ப்பட்ட பாரதம், கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கப்பட்டது. அதனை முற்றிலும் தன் வயிற்றுக்குள் கொண்டு செல்ல ஒரு நூற்றாண்டுக் காலம் பிடித்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக்  கம்பெனிக்கு. ஆம், ஒரு நூற்றாண்டுக் காலம் தன் சுதந்திரத்துக்காகப் போராடிய பிறகே பிரிட்டிஷ் பேரரசுக்குப் பாரதம் அடிமைப்பட்டது. இது, பாரத மக்கள் பெருமைப்படத்தக்க செய்தியாகும்.1857ல் துவங்கிய ‘சிப்பாய்ப் புரட்சி’ தோல்வியுற்ற பின்னர், பாரதம் முழுவதிலும் ‘சுடுகாட்டு அமைதி’ நிலவியது. அந்த அமைதி கால் நூற்றாண்டுக் காலம் நீடித்தது. அதன் பின்னரே, சட்ட ரீதியான முறையில் காங்கிரஸ் மகாசபையின் மூலம் பாரதத்தில் தேசிய எழுச்சி தோன்றியது.

மத உணர்ச்சி

பாரதம் ஒரு நூற்றாண்டுக் காலம் போராடியதென்றால் அதற்கு முக்கியமான காரணம், பாரத மன்னர்களின் அரசியல் உணர்ச்சியைவிட, மக்களின் மத உணர்ச்சியே ஆகும். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு அந்நிய நாட்டினராக இருந்ததோடன்றி, ஹிந்து-முஸ்லிம்-சீக்கியர்களுக்கு அந்நிய மதத்தினராகவும் இருந்தனர். அதனால், “அந்நிய நாட்டினருக்கு அடிமைப்படுகிறோம்” என்பதிலிருந்த வெட்கத்தைவிட, “அந்நிய மதத்தினருக்கு அடிமைப்படுகிறோம்” என்ற வேதனையே ஒரு நூற்றாண்டுக் காலம் போராடுவதற்கான ஆற்றலை பாரத மக்களுக்குத் தந்தது. ஆம், அன்றைய தேசியம் மதச்சார்புடையது. அதனால், பாரத மன்னர்களின் எதேச்சாதிகாரக் கொடுமைகளுக்கு உட்பட்டிருந்த மக்கள், அரசுரிமை பறிபோவதைவிட, அந்நிய மதத்தினருக்கு அடிமைப்படுவதையே பெருத்த அவமானமாக, அநீதியாக, அடிமைத்தனமாகக் கருதினர்.

இந்த உணர்வு காரணமாக, ஹிந்து-முஸ்லிம்-சீக்கிய மதங்களைச் சார்ந்த மக்களுள் மிகப் பெரும்பாலோர் ஒரே அணியில் நின்று போராடினர். இதனை 1857ல் நிகழ்ந்த ‘சுதந்திரப் புரட்சி’யின் வரலாறு புலப்படுத்தும்.1757க்கும் 1857க்குமிடையிலுள்ள ஒரு நூற்றாண்டில் அரசியல் துறையில் ஏற்பட்ட மாறுதல் மதத்துறையிலும் மகத்தானதொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அந்நாளில் மதம் வேறு, அரசியல் வேறு என்ற உணர்வு இந்திய மன்னர்களிடமோ, மக்களிடமோ இருக்கவில்லை. அதாவது, ‘சமயச் சார்பற்ற அரசு’ என்ற சித்தாந்தம் நடைமுறையிலில்லை. அரசியலும் மதமும் பின்னிப் பிணைந்து கிடந்தன.  கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அரசியலும் இதற்கு விதிவிலக்காக இல்லை.

மதமும் அரசியலும்

இந்தியாவில் அரசியல் ஆதிக்கம் பெற்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முயன்றனர். ஏன்? இந்தியாவையே கிறிஸ்தவ நாடாக மாற்றிவிடவும் திட்டமிட்டனர்.பிரிட்டிஷார் பாரதத்தில் காலூன்றுவதற்கு முன்பு, உள்நாட்டு மன்னர்கள், தத்தம் மதங்களைப் போற்றி வளர்த்தனர்; பிற மதங்களையும் மதித்து நடந்தனர்; மதாசாரியர்களைக் கௌரவித்து, அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு, அதன்படி ஆட்சி நடத்தினர். அரசவையிலே, சமயப் புலவர்கள் ‘ஆஸ்தானப் புலவர்களா’க இருந்தனர். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகையால் இந்த நிலைமை மாறியது.புதிதாக உருவெடுத்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அரசியல் ஆதிக்கம், கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியைக் கருதியதால், உள்நாட்டு மதங்களை, மதாசாரியார்களைப் புறக்கணித்து, அவமதித்தது. இதனால், ஹிந்து-முஸ்லிம்-சீக்கிய மதங்களைச் சார்ந்தவர்களிடையே வெறுப்பு வளர்ந்தது. அது, நாளடைவில் கிறிஸ்தவ ஆட்சிக்கு எதிரான வெறியாகவும் மாறியது.

கடவுள் சித்தம்


கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகிகள் சிலரும், இந்தியப் பாதிரிகள் சிலரும் வெளியிட்ட கருத்துக்கள், இந்தியர்களிடையே வளர்ந்திருந்த வெறுப்பை அதிகரிக்கச் செய்தது.“பரந்த இந்துஸ்தான் சாம்ராஜ்யத்தைக் கடவுளே நம்மிடம் ஒப்புவித்துள்ளார். இந்தியாவின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரையில் கிறிஸ்தவக் கொடி பறக்க வேண்டும் என்பதே அவரது கட்டளை. அந்தக் கட்டளை நிறைவேற ஒவ்வொரு ஆங்கிலேயனும் தன் முழுச் சக்தியையும் உபயோகிக்க வேண்டும். இந்தியாவை ஒரு கிறிஸ்துவ நாடாகச் செய்யும் விஷயத்தில் அணு அளவும் தயக்கமோ, தாமதமோ கூடாது.”இது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி டைரக்டர் போர்டின் தலைவர் மாங்கிள்ஸ் என்பார், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தாகும். 

கென்னடி என்ற ஓர் ஆங்கிலப் பாதிரியார் வெளியிட்ட கருத்து வருமாறு: 

“நமக்கு எவ்விதக் கஷ்டம் நேர்ந்தாலும், எவ்விதத் துரதிருஷ்டம் நேர்ந்தாலும் இந்தியாவில் நமது சாம்ராஜ்யம் இருந்துவரும் வரையில், அங்கு நமது முக்கியமான கடமை கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதுதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கன்னியாகுமரியிலிருந்து இமாசலப் பிரதேசம் வரையில் இந்துஸ்தானம் முழுவதும் ஹிந்து-இஸ்லாம் மதங்களைக் கண்டித்து, எல்லோரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவச் செய்ய வேண்டும். அதுவரையில் நம் முயற்சிகளை நாம் இடைவிடாது செய்துவர வேண்டும். அதற்காக நாம் எல்லாவித முயற்சிகளையும் கையாள வேண்டும். நமக்குள்ள சக்தி முழுவதையும் உபயோகிக்க வேண்டும். இந்தியா கீழ்த்திசையிலேயே கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரம்மாண்டமான கோட்டையாகிவிட வேண்டும். அதுவரையில் நமது முயற்சி சிறிதும் தளரக்கூடாது. நாம் விடாமுயற்சியுடன் இருந்து வருவோமானால், இறுதியில் கடவுள் நமக்கு வெற்றியைக் கொடுத்தே தீருவார்.”

ஆங்கிலமும் அதற்கே!


‘ஆங்கிலக் கல்வியால் நமக்குப் பல நன்மைகள் ஏற்பட்டன’ என்று  ஓயாது இன்றும் கூறப்படுகிறது.அந்தக் கல்விமுறையின் கர்த்தா லார்டு மெக்காலே ஆவார். அவர்,“நமது கல்வித் திட்டமானது, வழுவின்றிப் பின்பற்றப்படும் பட்சத்தில், இன்னும் முப்பதாண்டுக் காலத்துக்குள் வங்காளத்தில் ஓர் ஹிந்துவோ அல்லது முஸ்லிமோ இருக்கமாட்டான் என்பது என் உறுதியான நம்பிக்கை.” – ‘எரிமலை’, பக்-௪௪  என்று 1836ம் ஆண்டில் வங்காளத்தில் முதன்முதலாக ஆங்கிலக் கல்விமுறை ஆரம்பமானபோது கூறினார்.மெக்காலே மிகுந்த எச்சரிக்கையுடன், “இந்தியர்களெல்லாம் ஆங்கிலக் கல்வி முறையால் கிறிஸ்தவர்களாக்கப்படுவார்கள்” என்று சொல்லாமல், ‘ஹிந்துவோ அல்லது முஸ்லிமோ இருக்க மாட்டான்’ என்று கூறினார். ஆம், ஆங்கிலக் கல்வி, மதத்துறையில் ‘இரண்டுங் கெட்டான்’களைச் சிருஷ்டிக்கும் என்றார். இன்றும் நாம் காணும் காட்சி அதுதானே!  

மதம், அரசியல் கருவி!

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் ஒரு கருவியாய் கிறிஸ்தவ மதத்தைப் பயன்படுத்தினர் ஆங்கிலேயர். இந்தத் திருப்பணியில் வர்த்தக நோக்குடைய பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள், கல்வித் துறையில் ‘தொண்டு’ புரிந்த லார்டு மெக்காலே போன்ற அறிஞர்கள், சமயத் தொண்டர்களான பாதிரிகள் ஆகிய ஆங்கிலேயர் எல்லோரும் ஒரு மனத்துடன்-முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர்.கிறிஸ்தவப் பாதிரிமார்கள் இஸ்லாம் – ஹிந்து மதங்களுக்கு எதிராக நடத்தி வந்த பிரச்சாரப் போருக்குத் துணைபுரியும் பொருட்டு, “இந்தியர் யாரும் சொந்தத்தில் அச்சகம் நடத்தக்கூடாது” என்று தடை விதித்தது பிரிட்டிஷ் கம்பெனி. இந்தத் தடை 1835 ஆம் ஆண்டுவரை அமலில் இருந்தது. அச்சகத்தை நடத்தும் உரிமை ஆங்கிலேயருக்கு ஏகபோகமாயிருந்ததால், அச்சுப் பிரசுரங்களின் மூலம் தங்கள் சமய வளர்ச்சிக்குப் பாடுபடும் வாய்ப்பு இந்திய மக்களுக்கு இல்லாமலிருந்தது. தாங்களே படைத்துக் கொண்ட இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இந்தியர்களைக் கிறிஸ்தவர்களக மாற்ற முயன்றனர் பாதிரிகள்.

கொழுப்போ, கொழுப்பு!


இந்த நேரத்தில் ராணுவத்தினரிடையே, எரியும் தீயில் எண்ணெய் விட்டதுபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதனை, வீர சாவர்க்கர், கீழ்வருமாறு வருணிக்கிறார்:“கொழுப்புத் தடவப்பட்ட புதிய தோட்டாக்களை இந்திய சிப்பாய்கள் உபயோகித்துத் தீர வேண்டும் என்று கட்டளைகள் பிறந்தன. புதிய தோட்டாக்களை அபரிமிதமாக உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளும் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டன. தோட்டாக்கள் மிருதுவாகவும் வழுவழுப்பாகவும் இருப்பதற்காக ஒருவிதக் கொழுப்பை உபயோகித்தனர். அக்கொழுப்பை ஏற்கனவே கையால் அகற்றியதுபோல அகற்றக் கூடாதென்றும் அதைப் பல்லால் கடித்து அகற்றவேண்டுமென்றும் உத்தரவிட்டனர். எவ்விதம் பல்லால் கடித்து அதைச் சுலபமாக அகற்றலாம் என்பதும் சிப்பாய்களுக்குக் கற்பிக்கப்பட்டது.“அதிகாரிகள் தோட்டாக்களுக்கு ஆட்சேபகரமான கொழுப்பைத் தடவியதுடன், ‘மூடநம்பிக்கை காரணமாக அவைகளைக் கடிக்க மறுக்கும் சிப்பாய்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்’ என்றும் பயமுறுத்தினர்.”இந்த நிகழ்ச்சி, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியச் சிப்பாய்களிடையே மகத்தானதொரு ஆவேசத்தைக் கிளப்பி, மத உணர்ச்சி கலந்த அரசியல் புரட்சிக்கு அடிகோலிவிட்டது. அது காரணமாக வீறிட்டெழுந்த ‘சிப்பாய்ப் புரட்சி’ சுமார் ஓராண்டுக் காலம்  பெஷாவர் முதல் கல்கத்தா வரை உள்ள வட பாரதத்தின் பெரும் பகுதியில் நடைபெற்றது. அதில், ஹிந்து- முஸ்லிம்களான மன்னர்கள், ராணுவத் தளபதிகள், மௌல்விகள், புரோகிதர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருமே பங்குகொண்டனர்.   

அரசியார் பிரகடனம்


மக்களின் மத உணர்ச்சி புண்படுத்தப்பட்டதை உணர்ந்த பிரிட்டிஷ் சக்கரவர்த்தினியான விக்டோரியா ராணியார், புரட்சியை ஒடுக்கும் உள்நோக்குடன் ஒரு பிரகடனம் வெளியிட்டார்.அதில், “கிழக்கிந்தியக் கம்பெனியால் கைப்பற்றப்பட்ட சமஸ்தானங்கள் போக, எஞ்சியுள்ள சமஸ்தானங்களின் ‘சுதந்திர அந்தஸ்து’ அங்கீகரிக்கப்படும். பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்களின் மத விஷயங்களில் தலையிடாது. கல்வி, திறமை, யோக்கியப் பொறுப்புள்ளவர்கள் யாராயினும், சாதி-மத வேற்றுமையின்றி அவர்களுக்கு உத்தியோகம் வழங்கப்படும்” என்று உத்தரவாதம் கொடுத்தார். இந்தப் பிரகடனத்திற்குப் பிறகு, மதமும் அரசியலும் கலந்து நிகழ்ந்த ‘சுதந்திரப் புரட்சி’ பிசுபிசுத்துவிட்டது.1757 ஆம் ஆண்டு முதல் 1857ஆம் ஆண்டு வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் பாரத மக்கள் அரசுரிமையை இழந்ததோடு, மத உரிமைகளையும் இழக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இரையாயினர். பிரிட்டிஷ் அரசியாரின் பிரகடனத்தால் பாரதத்தின் நிர்வாகம் கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் கைக்கு மாறியது. அதனால், மதத் துறையில் இந்திய மக்களின் நிலைமை மாறியதென்றாலும், அரசியல்-பொருளாதாரத் துறைகளில் அடிமைத்தனம் முன்னிலும் மோசமாக உறுதியடைந்தது.இந்தச் சூழ்நிலைக்கு மற்றொரு வரலாற்றுப் பின்னணியும் உண்டு. அதனை உருவாக்கிய பொறுப்பு, பாரதத்தின்மீது படையெடுத்த இஸ்லாமிய மன்னர்களுடையதும், இஸ்லாமிய மதத்தினுடையதுமாகும். அந்த வரலாற்றுப் பின்னணியை இங்குச் சுருக்கமாகவேனும் கூறுவது அவசியமாகும்.  

கஜினி பாதை

  
 கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானத்தில் இருந்து பாரதத்தின்மீது முதன்முதலாகப் படை எடுத்தான் கஜினி முகம்மது. அவன் தொடர்ந்து பதினேழு முறை பாரதத்தைத் தாக்கினான். அவற்றில் ‘சோமநாதபுரப் படையெழுச்சி’ இந்தியக் கலாசாரத்தின்மீது விழுந்த பயங்கரத் தாக்குதலாகும். சோமநாதரின் விக்கிரகத்தை உடைத்துப் பெரும் பொருள் திரட்டிக்கொண்டு தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் கஜினி முகம்மது. இப்படிச் செய்வது எல்லா மதங்களையும் சார்ந்த மன்னர் பெருமக்களின் ‘யுத்த (அ) நாகரிக’மாகும். ஆயினும், இஸ்லாமியனான கஜினி முகம்மதின் வெறிச்செயல் ஹிந்துக்கள் நிறைந்த பாரதத்தில் மதரீதியான பெரும் போருக்கு வித்தாகிவிட்டது.பாரதத்தின் தெய்வீகக் கலாசாரத்திற்குக் கஜினி முகம்மது தந்த அடி, ஹிந்து சமயவாதிகளை விழித்தெழச் செய்தது. கஜினி முகம்மது காலம் தொடங்கி அடிக்கடி பாரதத்தின்மீது ஏற்பட்ட இஸ்லாமியரின் படையெடுப்புகள், பாரத மக்களின் அரசியல் உரிமைகளை மட்டுமல்லாமல், மதவழிப்பட்ட கலாசார உரிமைகளையும் தாக்குபவையாக இருந்தன.

கவிஞரின் கண்ணீர்!

இப்படி, இஸ்லாமிய-கிறிஸ்தவ சமுதாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ராணுவ ரீதியில் பாரதக் கலாசாரத்தின்மீது படையெடுத்துப் போரிட்ட காலத்தில், மக்கள் பட்ட அல்லல்களைக் கண்ணீரால் கவிதைத் தீட்டிக் காட்டுகின்றார் பாரதியார்.பிரிட்டிஷ் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்த காலை, பாரதத் தாய் வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் பாவனையில் கவிதை எழுதியுள்ளார் பாரதியார். அந்த கவிதையிலே,

“செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன்
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில”
என்று கூறி, மொகலாயர் படையெடுப்பாலும், அவர்தம் ஆட்சியாலும் பாரத மக்களுக்குற்ற அல்லல்களை உரைத்து, பிரிட்டிஷாரின் வருகையால் அந்தப் பழைய கொடுமைகள் அகன்றன என்பதனை,
“மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,
அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின.
போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்
அமைதிபெற்று உய்வ ராயினர். எனவே,
பாரத தேவி பழமைபோல் திருவருள்
பொழிதர லுற்றனள். பொருள் செயற்குரிய
தொழிற்கணம் பலப்பல தோன்றின; பின்னும்
கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன.
யாற்றினில் பெண்களை எறிவதூஉம் இரதத்து
உருளையில் பாலரை உயிருடன் மாய்த்தலும்
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,
எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால்.
ஆயினும் என்னை? ஆயிரம் கோடி
தொல்லைகள் இன்னும் தொலைந்தன வில்லை.”

என்று பாடி, இஸ்லாமியர் படையெடுப்பால் விளைந்த கேடுகளுள் சில பிரிட்டிஷாரால் நீக்கப்பட்டனவாயினும், பல கேடுகள் இன்னும் நிலைத்தே நிற்கின்றன என்கின்றார். பிரிட்டிஷாரின் வருகையால் விளைந்த நன்மைகளைக் கூறிய அவர், அவர்களுடைய ஆதிக்க வெறியால் ஹிந்து-முஸ்லிம் மக்களுக்கு விளைந்த புதிய கேடுகளையும் கூறுவாராகி,

“நல்குர வாதி நவமாம் தொல்லைகள்
ஆயிரம் எனைவந் தடைந்துள நுமரால்,”

என்று பாடுகின்றார்.

4 comments:

  1. வரலாற்று அலசல் என்றாலும் மதங்களை ஒழிக்க வேண்டிய கால கட்டத்தில் மழை காகிதம் நமுத்து காணப் படுகிறது

    ReplyDelete
  2. பேச்சுக்கு மதம் இல்லை என்று சொல்லலாம். ஆனால், நிஜத்தில் சாத்தியம் இல்லை சார்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. சரியாக சென்னீர்கள் நண்பா, தொடர்ந்து படித்து வருகிறேன்,
    மிக நல்ல பல கட்டுரைகள்

    ReplyDelete