Search This Blog

Saturday, October 22, 2011

அறிஞர் போற்றுதும்! - ஓ பக்கங்கள், ஞாநி


அறிஞர்கள் போற்றப்பட வேண்டும் என்பதை எல்லாருமே ஒப்புக் கொள்வார்கள். யார் அறிஞர் என்பதிலும் போற்றுதல் என்றால் என்ன என்பதிலும்தான் ஏராளமான கருத்து வேறுபாடுகள் இருக்க முடியும். மனித வாழ்க்கையை மேலும் சிறப்பானதாக மாற்றியமைக்கத் தேவையான கருத்துகளைச் சொல்பவர்களும், அந்தக் கருத்துகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பவர்களுமே அறிஞர்கள் என்பது என் கருத்து. போற்றுதல் என்பது சால்வை போர்த்துதல் அல்ல. கட் அவுட், பிளெக்ஸ் போர்டு வைத்து பால் அபிஷேகம் செய்வதும் அல்ல. இப்படி ஒருத்தர் வாழ்ந்தார்; இன்னதைச் சொன்னார்; இன்னதைச் செய்தார் என்று ஓர் அறிஞரைப் பற்றி அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்குத் தெரிவிப்பதும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதும்தான் போற்றுதல்.அதனால்தான் நண்பர் துளசிதாசன் தான் முதல்வராக இருக்கும் திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி.பள்ளியில் அறிஞர் போற்றுதும் என்ற நிகழ்வை ஆண்டுதோறும் நடத்த யோசனைகள் தந்து உதவ வேண்டுமென்று என்னிடமும் நண்பர் எழுத்தாளர் தமிழ்ச் செல்வனிடமும் கேட்டபோது, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சென்ற வருடம் வாழ்நாள் விருதை எழுத்தாளர் அசோகமித்திரனுக்கும், இந்த வருடம் ஓவியர்-எழுத்தாளர் மனோகர் தேவதாசுக்கும் அளித்தார்கள். கூடவே படைப்பூக்க விருதுகளை இளம் எழுத்தாளர்களுக்கு அளித்தார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னால் எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவதென்பது பரவசமும் நெகிழ்ச்சியுமாக இருந்தது.இப்படிப்பட்ட நிகழ்வுகள் தமிழகப் பள்ளிகளில் நடப்பதென்பது இன்னமும் கனவு போலவே இருக்கிறது.


பள்ளிப் பருவத்தில் இளம் மனங்களுக்கு, பாடங்களைத் தவிர பள்ளிக்கூடம் பொதுவாக வேறு எதையும் அளிப்பதில்லை. ஆனால் வெளியிலிருந்து அவர்களுக்கு என்னென்னவோ கிடைக்கின்றன. மீடியா வெளிச்சம் போட்டுக் காட்டுவோரை மட்டுமே அறிஞர்களாக, முன் மாதிரிகளாக மாணவர்கள் அறிகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் மனத்துக்குள் கேள்விகள் எழுந்தாலும் அதையெல்லாம் கேட்க இடமில்லை, ஆளில்லை என்பதாகவே அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கிறது.  மீடியா எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் சரியாகவே செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அடுத்தடுத்த வாரங்களில் உலக அளவில் முக்கியமான இரு கணினி வல்லுநர்கள் இறந்துபோனார்கள். ஒருவரை உலகமே கொண்டாடியது. அவர்தான் ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனியை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் உருவாக்கி விற்பனைக்கு விடுத்த ஐ போன், ஐ பாட்கள் அன்றாட வாழ்க்கையையே பலருக்கு மாற்றியமைத்தன. வணிக சாமர்த்தியம் மிகுந்த தொழில்நுட்ப வல்லுநர் என்ற விதத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் பாராட்டுக்குரியவர்தான். ஆனால் அவர் புற்றுநோயில் மரணமடைந்ததும் உலகம் முழுதும் குவிந்த பாராட்டுகள், புகழுரைகள் அடுத்த வாரத்தில் புற்று நோயில் இறந்த டென்னிஸ் ரிச்சிக்குக் கிட்டவில்லை. ரிச்சி, ஸ்டீவ் ஜாப்சை விட உலகத்துக்கு முக்கியமானவர். இன்றைய கணினி உலகை இயக்கும் முக்கியமான தொழில் நுட்பங்களில் அடிப்படையானவை சீ லேங்வேஜும், யூனிக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டமும்தான். இரண்டையும் உருவாக்கியவர் ரிச்சி. அவரும் அவர் சகாவான கென் தாம்ப்சனும் இரு தொழில்நுட்பங்களையும் உருவாக்கியதால்தான் கணினி இப்போதுள்ள எளிமையை அடைய முடிந்தது. பள்ளிக்கூடங்களில் கம்ப்யூட்டர் படிக்கும் மாணவர்களுக்குக் கூட டென்னிஸ் ரிச்சியின் பெயர் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் ரிச்சி, அவர்களால் நிச்சயம் அறியப்பட வேண்டியவர். 


உலக அளவிலான அறிஞர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு சமூகத்திலும் அந்த சமூகம் மறக்கக் கூடாத அறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் மீடியா வெளிச்சமும், அதிகார கவனிப்பும் அவர்களுக்குக் கிட்டாமல் போய்விடுகின்றன. தமிழகத்தையே எடுத்துக் கொள்வோம். இந்த வருடம் நான்கு அறிஞர்களின் நூற்றாண்டு வருடம். நால்வருமே வெவ்வேறு விதங்களில் தமிழ்ச் சமூகத்துக்குப் பங்களிப்பு செய்தவர்கள்.ஆனால் நான்கு பேரைப் பற்றியும் மீடியா உலகமும் அதிகார உலகமும் இன்னமும் கண்டுகொள்ளவே இல்லை.ஏ.கே.செட்டியார் எனப்படும் ஏ.கருப்பன் செட்டியார் தமிழின் முன்னோடி ஆவணப் படத் தயாரிப்பாளர். பயண இலக்கிய எழுத்தாளர். காந்தியைப் பற்றி காந்தி வாழ்ந்த காலத்திலேயே டாக்குமெண்டரியை உருவாக்கியவர். அதற்காக பிரிட்டன், தென் ஆப்ரிக்காவுக்கெல்லாம் சென்று படச் சுருள்களத் திரட்டினார். 19 வயதிலிருந்து உலகம் சுற்றத் தொடங்கிய வாலிபனாகிய ஏ.கே செட்டியார் தன் பயண அனுபவங்களைத் தொகுத்து எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் ஒளிப்பதிவு படித்தார். சுமார் 40 ஆண்டு காலம் குமரி மலர் என்ற பத்திரிகையை நடத்தியிருக்கிறார். செட்டியாரின் பயண இலக்கிய நூல்கள் ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும் இருக்க வேண்டியவை. அவரது காந்தி படம் எல்லா பள்ளிகளிலும் காட்டப்பட வேண்டும்.மு.வரதராசன் எனப்படும் மு.வ கல்வியாளர், எழுத்தாளர். ஐம்பதுகளில் கல்வி பரவலாகத் தொடங்கியபோது வாசிப்புப் பழக்கம் படித்தவர்கள் மத்தியில் பெருக நாவல்களும் தொடர்கதைகளும் காரணமாக இருந்தன. அப்போது நல்ல தமிழும் நல்ல சிந்தனையும் நாவல்கள் மூலம் பரவ வேண்டுமென்ற நோக்கோடு மு.வ நாவ லாசிரியரானார். தமிழறிஞராகவும், கல்வி நிர்வாகியாகவும் புகழ்பெற்றவர் மு.வ. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இன்று வரை மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாறு நூலையும், திருக்குறள் உரையையும் மிஞ்சக்கூடிய நூல்கள் அத்துறைகளில் வரவில்லை.


காமராஜரை கல்வித்தந்தை என்று புகழ்பவர்கள் எல்லாரும் நிச்சயம் கல்வித் தாய் என்று புகழவேண்டியவர் நெ.து. சுந்தரவடிவேலு. தமிழகத்தில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் காமராஜரின் யோசனை. செயல்படுத்தியவர் நெ.து.சு. பட்டி தொட்டியெங்கும் பள்ளிக் கல்வி பரவியது நெ.து.சு கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோதுதான். பள்ளிக் கல்வியில் திறமையாகச் செயல்பட்டதைப் போலவே சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் நெ.து.சு செயல்பட்டார். பள்ளிப் படிப்புடன் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்வோர் உயர்கல்வி பெறுவதற்காக மாலை நேரக் கல்லூரிகளை அறிமுகப்படுத்தினார். ஆசிரியர்களுக்குமறு பயிற்சி எனப்படும் ரிஃபிரஷர் கோர்சைக் கொண்டு வந்தார். ஊழல் அரசியல்வாதியும் ஊழல் அதிகாரியும் கைகோத்தால் என்ன ஆகும் என்பதை இப்போதெல்லாம் பார்க்கிறோம். நல்ல அதிகாரியும் நல்ல அரசியல்வாதியும் கைகோத்துக் கொண்டால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டியவர்கள் நெ.து.சுவும் காமராஜரும்.மேற்கண்ட மூவருடனும் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதில்லை. ஆனால் நான்காமவரான புரிசை கண்ணப்பத் தம்பிரானுடன் பழகும் வாய்ப்பு கிட்டியது நிச்சயம் பெரும்பேறுதான். தெருக்கூத்தின் பீஷ்மராக விளங்கிய கண்ணப்பத் தம்பிரானின் ஆட்டத்தை 1976லிருந்து அவர் இறக்கும் காலம் வரையிலும் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன். ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறைக்கு கண்ணப்ப தம்பிரான் செய்த பங்களிப்பு கலைத் துறையின் முக்கிய மைல்கல். மரபான தெருக்கூத்திலிருந்து நவீன நாடக வடிவத்துடன் இசையும் அம்சங்கள் எவை, விலகும் அம்சங்கள் எவை என்பதை நவீன நாடகக்காரர்கள் புரிந்துகொண்டதை விட அதிகமாகப் புரிந்துவைத்திருந்தவர் கண்ணப்பத் தம்பிரான். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் காளி நாடகத்தில் தம்பிரான் நடித்தது எனக்கு இன்னமும் மனத்தில் இருக்கிறது. கூத்து நடிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அதே சமயம் கூத்தின் அம்சங்களை நவீன நாடகத்தின் தேவைக்கு ஏற்ப கையாண்டதாக இருந்தது அவர் நடிப்பு. நோபல் எழுத்தாளர் மார்க்வெசின் படைப்பு, பாரதியின் பாஞ்சாலி சபதம் என்று வெவ்வேறு படைப்புகளை, கூத்து வடிவத்தில் செய்துபார்க்கும் துணிவும் திறமையும் கண்ணப்பத் தம்பிரானுக்கு இருந்தன. 

இந்த நான்கு பேரும் தமிழகத்தின் முக்கிய அறிஞர்கள். ஆனால் இந்த நூற்றாண்டு சமயத்திலேனும் அவர்களை நினைவுகூர தமிழகத்தில் என்ன நடவடிக்கைகள் உள்ளன? கண்ணப்பத் தம்பிரானின் வாரிசுகள் புரிசையில் அவர் பெயரில் கூத்துப் பள்ளி நடத்திவருகிறார்கள். அங்கே நூற்றாண்டைக் கொண்டாடி, பல குழுக்கள் பங்கேற்ற நாடக விழா நடத்தினார்கள். எங்கள் பரீக்‌ஷாவும் பாதல் சர்க்காரின் நாடகத்தை நிகழ்த்தியது. நெ.து.சுந்தரவடி வேலுவின் வாரிசு லெனின் ஒரு விழா நடத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார். மு.வ.வின் வாரிசுகளும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். ஏ.கே.செட்டியாருக்கு வாரிசுகள் இல்லை. என்ன அவலம்! இந்த அறிஞர்களின் வாரிசுகள் மட்டும்தான் அவர்களின் நூற்றாண்டை நினைவுகூர்ந்து ஏதாவது செய்யவேண்டும் என்ற நிலை எவ்வளவு அவமானத்துக்குரியது? அரசாங்கமும், பல்கலைக்கழகங்களும் கலை அமைப்புகளும் பள்ளிக்கூடங்களும் அல்லவா இவற்றைச் செய்யவேண்டும்? மறைந்து விட்ட அறிஞர்களை நினைவுபடுத்திக் கொள்ள இயலாத ஒரு சமூகம், வாழும் அறிஞர்களை எங்கே எப்படிப் பராமரிக்கும்? இந்த வறண்ட சூழலில்தான் திருச்சி பள்ளி முயற்சி சிறு துளிராகத் தெரிகிறது.அரசு நினைத்தால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு கல்லூரியிலும் இந்த வருடம் இந்த நான்கு அறிஞர்களின் நூற்றாண்டு விழாக்களையும் கொண்டாடலாம். ஒரே ஒரு நாள். ஒரு சில மணி நேரங்கள்தான். தமிழில் இயங்கும் அத்தனை தொலைக்காட்சிகளும் நினைத்தால் இந்த ஆண்டு முழுவதும் இந்த அறிஞர்களை தமிழர்களுக்கு நினைவூட்டலாம். வாரம் ஒரு முறை ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான். தமிழ்ப் பத்திரிகைகள் நினைத்தால் அட்டைப்படங்களாக இந்த அறிஞர்கள் இடம்பெறலாம். நாங்கே நான்கு இதழ்களில் மட்டும்தான். ஆனால் லட்சக்கணக்கான தமிழர்களின் மூளைகளில் ஒரு முக்கியமான மரபு பதிவாகும். அறிஞர் போற்றுதும்!

இந்த வாரக் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிக்கச் செல்லாத எல்லா படித்த முட்டாள்களுக்கும். 

இந்த வார வேண்டுகோள்!

அப்துல் கலாமுக்கு

வணக்கம்.

கூடங்குளம் அணு உலை தொடர்பாக மக்களின் அச்சத்தைப் போக்க உங்களை அங்கே மத்திய அரசு அனுப்பப்போவதாக செய்திகள் வந்திருக்கின்றன.தயவுசெய்து நீங்கள் போகவேண்டாம். உங்கள் மனசாட்சிக்குத் தெரியும் - அணு உலைத் தொழில்நுட்பம் என்பது பாதுகாப்பானது அல்ல என்பது. உங்களுக்கு நேரடியாகவே தெரியும் கல்பாக்கத்திலும் இதர உலைகளிலும் என்னென்ன விபத்துகள் நடந்தன, அவை எப்படி மூடி மறைத்து மழுப்பப்பட்டன என்பதை விஞ்ஞான ஆலோசகராக நீங்கள் அறிவீர்கள்.குடியரசுத்தலைவர் பதவியில் இருந்தபோதும் இப்போதும் குழந்தைகளைச் சந்திக்கிறீர்கள். உற்சாகப்படுத்துகிறீர்கள். கனவு காணச் சொல்கிறீர்கள். அது போதும். அத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். கூடங்குளம் மக்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. அமைதியான அணு ஆபத்து இல்லாத வாழ்க்கைக் கனவு அது. அதைக் குலைத்துவிடாதீர்கள்.நீங்கள் இலக்கிய ரசிகர். “நல்லது செய்தலாற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்கிறது இலக்கியம். நீங்கள் இதுவரை என்ன நல்லது செய்தீர்களோ தெரியவில்லை. தயவுசெய்து கெட்டதைச் செய்துவிடாதீர்கள்.
 



No comments:

Post a Comment