Search This Blog

Sunday, October 09, 2011

பெவிலியனில் ஹர்பஜன்!


ஒருவழியாக, ஹர்பஜன் சிங்கை இந்திய அணியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இந்தச் செய்தி அரை டஜன் ஸ்பின்னர்களுக்கு இனிப்பாக இருந்திருக்கும். அஸ்வின், ஓஜா, மிஸ்ரா, சாவ்லா, ராகுல் சர்மா, இக்பால் அப்துல்லா போன்ற அடுத்தத் தலைமுறை ஸ்பின்னர்கள் ஹர்பஜனுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து, தேர்வுக்குழுவுக்கும் நம்பிக்கையூட்டி, ஹர்பஜனின் வெளியேற்றம் நிகழக் காரணமாக இருந்திருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக, ஹர்பஜனின் பந்துவீச்சு தன் அந்திமக் காலத்தில் இருந்ததை சாதாரண கிரிக்கெட் ரசிகன்கூட உணர்ந்திருந்தான். ஹர்பஜனின் நீக்கத்தில் ஓர் அரசியலும் இல்லை. அவரே முழுமுதல் காரணம். 

இந்திய அணியின் எல்லா வெற்றிகளிலும் மிகத் திறமையான ஸ்பின்னர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். 70களில் மறக்கமுடியாத ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இருந்தார்கள். பிஷன்சிங் பேடி, பிரசன்னா, வெங்கட்ராகவன், பி.எஸ். சந்திரசேகர். இந்த ஸ்பின் படையின் உதவியால் 1971ல், வலுவான இங்கிலாந்து மேற்கு இந்திய அணிகளைத் தோற்கடித்தது இந்தியா. சச்சின் தெண்டுல்கரின் கிரிக்கெட் பிரவேசத்துக்குப் பிறகு அணியில் நுழைந்தவர் அனில் கும்பிளே. அடுத்த இருபது வருடங்களுக்கு அவர் தன்னிகரற்ற நட்சத்திரமாக விளங்கினார். 90களின் இறுதியில் இந்திய அணிக்குள் நுழைந்த ஹர்பஜன், கும்பிளேவுக்கு அருமையான துணையாகச் செயல்பட்டார். கும்பிளே இடம்பெறாத ஒரு டெஸ்ட் தொடரில் (ஆஸியுடன்), தாம் யார் என்று உலகுக்கு நிரூபித்தார். கும்பிளேவின் ஆளுமையைக் கண்டு ஹர்பஜன் மனம் தளரவில்லை. கும்பிளேவைவிடச் சிறப்பாகப் பந்துவீசி அவரை மிஞ்சவேண்டும் என்று எண்ணினார். இந்த மனோபாவம் ஹர்பஜனுக்குப் பலன்களைக் கொடுத்தது. பல முக்கியமான சந்தர்ப்பங்களில் கும்பிளே பின்னுக்குத் தள்ளப்பட்டு ஹர்பஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 2003 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஹர்பஜன் ஆடினார்; கும்பிளேவுக்கு பெவிலியனில் தான் இடம் கிடைத்தது.  


இன்று ஒரு ஸ்பின்னருக்கு இருக்க வேண்டிய விதவிதமான பந்துவீச்சு முறைகள் ஹர்பஜனிடம் இல்லை. இங்கிலாந்து அணியின் ஆஃப் ஸ்பின்னரான ஸ்வான் - ஹர்பஜன் பந்துவீச்சை ஒப்பிட்டால் இது புரியும். விக்கெட் எடுக்கும் வித்தைகளை ஹர்பஜன் மறந்துவிட்டாரோ என்று எண்ணும் அளவுக்கு ஒவ்வொரு மேட்சிலும் ஏமாற்றம் அளித்தார். அதேசமயம், தம் பந்துவீச்சில் உள்ள குறைகளை பேட்டிங்கில் ஈடுகட்டினார். சென்ற வருடம், இரண்டு டெஸ்ட் செஞ்சுரிகள் அடித்து தம் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொண்டார். இந்த அணுகு முறை நீண்ட நாள் பலன் அளிக்கவில்லை. அஸ்வின் அளித்த பெரிய நம்பிக்கையால் இன்று ஹர்பஜன் அவசியம் இல்லாமல் போயிருக்கிறார். 2010 ஐ.பி.எல். மற்றும் சாம்பியன் லீக்கில் அஸ்வின் ஒரு நட்சத்திரமாக உருவெடுத்தார். நியூசிலாந்துடனான ஒருநாள் தொடர் முழுக்கப் பங்கேற்றார் அஸ்வின். அத்தொடருக்கு கேப்டனாக இருந்த கம்பீர், ‘அஸ்வின்தான் தொடரின் பெரிய பலன்’ என்று சான்றிதழ் அளித்தார். அப்படியே உலகக்கோப்பையில் இடம் பெற்றார் அஸ்வின். இரண்டு மேட்சுகள் மட்டும்தான் ஆடினார். ஆடாத மேட்சுகளில் அவரைப் பற்றித்தான் எல்லோரும் வாய் ஓயாது பேசினார்கள். இன்று, அஸ்வினைப் பெரிதும் நம்பியிருக்கிறது இந்திய கிரிக்கெட்.

ஹர்பஜனுக்கு இதுவே இறுதியல்ல. மீண்டும் அணிக்குள் நுழையமுடியும்.  மூன்று உள்ளூர் அணிகள் ஆடுகிற சேலஞ்சர் போட்டியில், ஹர்பஜன் ஓர் அணியின் கேப்டன். இந்தப் போட்டியில் ஹர்பஜனின் பந்துவீச்சு கவனிக்கப்படும். மேலும், ஹர்பஜனுக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ள அஸ்வினும் ராகுல் சர்மாவும் சொதப்புகிற பட்சத்தில் மீண்டும் ஹர்பஜன் அழைக்கப்படலாம். இங்கிலாந்தில் ஒருநாள் போட்டிக்காக ராகுல் திராவிட் அழைக்கப்பட்டதுபோல. ஹர்பஜனின் நீக்கம் டெஸ்ட் வரை நீடிக்குமா என்று தெரியவில்லை. அடுத்த டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடப்பதால் ஹர்பஜனின் அவசியம் தேவையிருக்கலாம். அல்லது தேர்வுக் குழு அஸ்வின், ஓஜாவை நம்பி ஹர்பஜனை டெஸ்ட் அணியிலிருந்தும் நீக்கினால், அது பெரிய சர்ச்சைக்கு இடமளிக்கும். பந்துவீச்சிலும் அடுத்தத் தலைமுறையைத் தேடவேண்டிய அவசியம் இந்திய அணிக்கு இருக்கிறது. 2013ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியும், 2015ல் ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டியும் நடக்க உள்ளன. அதற்கான அணியை இப்போதே தேர்ந்தெடுத்து, தயார்படுத்த வேண்டும். அதற்கான அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஹர்பஜனின் நீக்கம். 

ஸ்வான், இன்றைய ஸ்பின்னர்களுக்கு பெரிய முன்னுதாரணம். வார்னேவுக்கு அடுத்ததாகப் போர்க்குணம் கொண்ட வீரராக மதிக்கப்படுகிறவர். 2001 டெஸ்ட் தொடரில், ஹர்பஜன் சிங்கிடம் அந்தக் குணம் இருந்தது. இப்போது, அப்படியொரு போர்க்குணம் கொண்ட ஸ்பின்னர் இந்திய அணிக்கு அவசியமாகிறார். யார் அவர்? அஸ்வின்? ராகுல் சர்மா? ஓஜா? அல்லது மீண்டும் ஹர்பஜனா? அடுத்தச் சில மாதங்களில் போர் வீரனைக் கண்டுகொள்ளலாம்.


1 comment: