Search This Blog

Saturday, October 01, 2011

சென்னைக்குள் ரவுண்ட் வரும் சி.பி.ஐ.! - சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள்


சாணக்கியபுரியாம் டெல்லியின் சதிராட்டத்தில் இப்போது சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள். சிக்கலில் இருந்து சிதம்பரம் விடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதும், தயாநிதி மாறனை நோக்கியும் சி.பி.ஐ. பார்வை வலுக்கிறது என்பதும்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தகிக்கும் நிலவரம்! 

2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன் நடந்து வந்தாலும்... அந்த வழக்கின் வெளி விவகாரங்கள் அதிகமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்தான் இந்த வழக்கின் தட்ப வெப்ப நிலையைத் தீர்மானித்து வருகிறது. வழக்கின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். 'ஏலம் எடுக்கும் முறை வேண்டாம், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற விதிமுறையைத் தொலைத் தொடர்புத் துறை பின்பற்றியபோது, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நினைத்து இருந்தால் அதனைத் தடுத்திருக்க முடியும்!’ என்று நிதி அமைச்சகத்தின் ரகசியக் கடிதம் ஒன்றைத் தனது மனுவுக்கான ஆதாரமாக சுவாமி கொண்டுவந்தார். ''மத்திய நிதி அமைச்சக அதிகாரியே ஒப்புக்கொண்டதைவைத்துப் பார்த்தால்... சிதம்பரத்துக்குத் தெரியாமல் எதுவும் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை. எனவே, இந்த வழக்கில் சிதம்பரத்தையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்!'' என்று சுவாமி சொன்னார். இதை மத்திய அரசு வழக்கறிஞர் பி.பி.ராவ் கடுமையாக எதிர்த்தார். ''எப்போது பாட்டியாலா கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கிவிட்டதோ... அப்போதே சுப்ரீம் கோர்ட்டுக்கு இது தொடர்பாக மேற்கொண்டு விசாரிக்க உரிமை இல்லை!'' என்று அவர் வாதிட்டார். ஆனால், இதை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. எனவே, மேற்கொண்டு அனல்பறக்கும் விவாதங்கள் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடந்தன.


இதில் சிதம்பரம், தயாநிதி மாறன் ஆகிய இருவரது தலைகளும் அதிகமாக உருட்டப்பட்டன. சுவாமியின் மனுவுடன் தனது மனுவையும் இணைத்துக் கொண்டார் பிரசாந்த் பூஷண். ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான வழக்குகளைத் தொடர்ந்து போட்டு வருபவர் இவர்தான். ''முறையான பாதையில் சி.பி.ஐ. விசாரணை செல்லவில்லை. குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டிய பலரிடம் இன்னமும் விசாரணையே செய்யப்படவில்லை. இதில் இருந்து சி.பி.ஐ. விசாரணையில் நேர்மை இல்லை என்று தெரிகிறது. இந்த ஊழல் நடந்த காலகட்டத்தில் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறையை கவனித்து வந்தார். அவர் தனக்கு வசதியாக எந்தெந்த விதிமுறைகளை மாற்றினாரோ, அதை நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஏற்றுக்கொண்டுள்ளார். இது உண்மைதான் என்பது நிதி அமைச்சகத்தின் குறிப்பில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. இன்னொரு முக்கியமான தவறையும் சிதம்பரம் செய்துள்ளார்.உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்களது சேவையைத் தொடங்குவதற்கு முன்பே, தங்களது பங்குகளை விற்பனை செய்வதற்கு சிதம்பரம் அனுமதி வழங்கி உள்ளார். ஆனாலும் அவர் மீது சி.பி.ஐ. இன்னமும் விசாரணையைத் தொடங்கவில்லை. அவரது சாட்சியம்கூடப் பதிவு செய்யப்படவில்லை. சி.பி.ஐ. அமைப்பின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் இதற்குக் காரணம்!'' என்று பொரிந்து தள்ளினார் பிரசாந்த் பூஷண்.இதை கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்த சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மெது வாக எழுந்து சீல் இட்ட ஒரு கவரை நீதிபதியிடம் கொடுத்தார். தயாநிதி மாறனின் தலைவிதி அதில் இருந்தது.

அதை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வீ, ஏ.கே. கங்குலி ஆகிய இருவரும் படித்துக் கொண்டு இருக்கும்போதே வக்கீல் வேணுகோபால் தனது வாதங்களை வைக்கத் தொடங்கினார்.

''இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு உள்ள தொடர்பு குறித்த முதல் நிலை விசாரணை முடிந்துவிட்டது. அடுத்த சில நாட்களில் வழக்கு பதிவு செய்யப்படும். இதே வழக்கில் எஸ்ஸார் நிறுவனத்தின் மீது விசாரணை நடந்து வருகிறது. இது முடிய இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும். வழக்கில் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் வரிசையாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வோம்...'' என்று சொன்னார். இது புதன்கிழமை நடந்த அதிரடித் திருப்பமாக ஆகிப் போனது.சிதம்பரம் கதை என்ன ஆகும் என்று தீராத படபடப்பில் இருந்த மீடியாக்களுக்கு தயாநிதி மாறன் இரையை எடுத்துப் போட்டது சி.பி.ஐ...''பிரசாந்த் பூஷண், சி.பி.ஐ-யின் நடவடிக்கைகள் தொடர்பாக பலத்த சந்தேகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும், தங்களது நடவடிக்கையில் எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லை என்பதை விளக்கியாக வேண்டிய நெருக்கடி சி.பி.ஐ-க்கு வந்தது. தயாநிதி மாறன் மீது விரைவிலேயே எஃப்.ஐ.ஆர். போடப் போகிறோம் என்பதைச் சொல்வதன் மூலமாக, சுப்ரீம் கோர்ட் கோபத்தைக் கொஞ்சம் தணிக்கலாம் என்றும் சி.பி.ஐ. நினைத்து இருக்கலாம்...'' என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இன்னும் நான்கைந்து நாட்களுக்குள் தயாநிதி மாறன் மீது முழுமையான எஃப்.ஐ.ஆரை சி.பி.ஐ. பதிவு செய்துவிடும் என்றே டெல்லியில் பேசப்படுகிறது.ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு கைமாற்றிவிடுவதில் தயாநிதி மாறனின் பங்கு என்ன என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம். ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த சிவசங்கரன், மேக்ஸிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வாக்குமூலங்களை வாங்கிவிட்டது. தயாநிதி மாறனிடமும் முதல் கட்ட விசாரணை நடந்து முடிந்துவிட்டது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகு அதிகாரப்பூர்வமாக தயாநிதி மாறனிடம் வாக்குமூலங்களை சி.பி.ஐ. வாங்கப்போகிறது. எனவே, அடுத்த பத்து நாட்களில் கிடுகிடு திருப்பங்கள் அரங்கேறலாம் என்பதே டெல்லி வட்டாரம் தரும் தகவல்!
 
இந்த விவாதங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கும் போது டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் ஆறு பேரைக் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு வந்தது. 'எப்போதும் தயார் நிலையில் இருங்கள்’ என்று அவர்களுக்கு சி.பி.ஐ. மேலிடம் உத்தரவு இட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.தயாநிதி மாறன் விஷயத்தில் சி.பி.ஐ. இப்போது திடீர் வேகம் எடுத்திருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ப.சிதம்பரத்தைக் குறிவைத்து எதிர்க் கட்சிகளும் மீடியாக்களும் தாக்குதலைத் தொடங்கி உள்ளன. இது சோனியா, பிரதமர் மற்றும் மத்திய ஆட்சிக்கே பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது. இதைத் திசை திருப்புவதற்கு தயாநிதி அஸ்திரத்தை சி.பி.ஐ. விட்டிருக்கலாம் என்கிறார்கள். தயாநிதி மீது எஃப்.ஐ.ஆர்., விசாரணை, கைது என்று காட்சிகள் மாறினால், பிரதமர், சிதம்பரம் ஆகியோரைப்பற்றிப் பேசுவது குறையும் என்று நினைக்கிறார்கள்.
 
''தயாநிதி மாறன், ப.சிதம்பரம் ஆகிய தனி மனிதர்கள் எங்களுக்கு முக்கியம் அல்ல. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து சக்திகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்!'' என்று சுப்பிரமணியன் சுவாமியும் பிரசாந்த் பூஷணும் சொல்வதைப் பார்த்தால்... ப.சி-க்கும் தயாநிதி மாறனுக்கும் வந்திருப்பது சாதாரண சிக்கல் அல்ல!
 
விகடன் 


No comments:

Post a Comment