Search This Blog

Thursday, September 22, 2011

கருணாநிதியின் கோபம்... ஜெயலலிதாவின் பாசம்! - கலங்கி நெகிழும் அஜீத்


மராவதி’யில் ஆரம்பிச்ச ஆட்டம்... இப்போ 'மங்காத்தா’ என் 50-வது கேம். முதல் படம் செய்யும்போது ரொம்பச் சின்ன வயசு. சினிமாவுல ஒரு இடத்தைப் பிடிக்கணும்னு கடுமையா உழைச்சேன். இப்போ 40 வயசு. முன்பைவிட இப்போதான் அதிகமா உழைக்கிறேன். உடம்பில் நிறையக் காயங்கள். அதைவிட மனசுலயும் காயங்கள் அதிகம். சுமந்துக்கிட்டு ஓடிக்கிட்டே இருக்கேன்!'' - அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத். அவரே தயாரித்த காபி!

''கோடம்பாக்கத்தின் ஸ்டார் ஹீரோக்கள் 'எங்க படத்துல அஜீத் வில்லனா நடிப்பாரா?’னு விசாரிச்சுட்டு இருக்காங்களாமே! ஒரு ரேஞ்சுக்குப் பிறகு, ஹீரோக்கள் வில்லனா நடிக்கத் தயங்குவாங்க. ஆனா, அஜீத் வழி தனி வழியா?''  

''நான் 'மங்காத்தா’வில் முதல்முறையா வில்லனா நடிக்கலையே! 'வாலி’, 'வில்லன்’, 'வரலாறு’னு தொடர்ச்சியா நெகட்டிவ் ரோல் பண்ணிட்டுத்தான் இருக்கேன். இடையில சின்ன கேப் விழுந்துடுச்சு. சினிமாவுல மட்டும்தான் நெகட்டிவ். நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷத்தையும் பாசிட்டிவா கழிக்கிறவன் நான். நான் ஒண்ணும் வானத்துல இருந்து திடீர்னு குதிச்ச தேவகுமாரன் இல்லை. பாவமே செய்யாத பரிசுத்த ஆவியும் இல்லை. சாதாரண சராசரி மனுஷன். உலகத்துல இருக்குற எல்லாரையும் போலவே நானும் குறைகள் நிரம்பப்பெற்ற மனுஷன். அம்மா - அப்பாவுக்கு நல்ல மகனா, அண்ணனுக்கு ஆதரவான தம்பியா, ஷாலினிக்கு பெர்ஃபெக்ட் கண வனா, அனோஷ்காவுக்குப் பாசமான அப்பாவா, மாமனார் பெருமைப்படக் கூடிய மருமகனா நடந்துக்கிறேன்னு நம்புறேன். அவங்ககிட்ட கேட்டா... உண்மை தெரியும்!''

''அஜீத் படத்துக்கு மாஸ் ஓப்பனிங் இருக்கும்; ஆனா, கலெக்ஷன் கல்லா கட்டாதுனு ஒரு பேச்சு இருக்கும். 'மங்காத்தா’ அதை உடைச்சிடுச்சே...''

''இந்த இடத்துலதான் நான் ரொம்ப அலெர்ட்டா இருக்கணும். 'மங்காத்தா’ வெற்றி என் நீண்ட மௌனத்துக்குக் கிடைச்ச வெற்றி. சட்டமன்றத் தேர்தலப்போ வாய் திறந்து ஏதாவது பேசுவேன்னு நிறையப் பேர் எதிர்பார்த்தாங்க. அப்பவும் அதுக்கு அப்புறமும் நான் எந்தச் சத்தமும் போடலை. இப்போ 'மங்காத்தா’ பார்த்துட்டுப் பாராட்டுறாங்க. ஏத்துக்கறேன். அதேபோல, 'என்னடா, படத்துல அஜீத் எப்பவும் தண்ணி, தம்முனு இருக்கான்’னு வர்ற விமர்சனங்களையும் தலை வணங்கி ஏத்துக்குறேன். அஜீத் படம் ஓடினாலும் ஓடலைன்னாலும் அவன் எப்பவும் ஒரே மாதிரிதான்!''

''தத்துவ மழை பொழியுறீங்களே... உங்க தலைவர் ரஜினி பாணியில் ஆன்மிகத்திலும் ஈடுபாடு காட்ட ஆரம்பிச்சுடுவீங்களோ?''

''ஏற்கெனவே எனக்கு ஈடுபாடு உண்டே! தமிழ்நாட்டுல வேளாங்கண்ணி, நாகூர், நவக்கிரகக் கோயில்கள் ஒண்ணு விடாமப் போயிட்டு வந்திருக்கேன். கேரளாவில் குருவாயூர், சோட்டாணிக்கரை பகவதி அம்மன்; கர்நாடகாவுல சாமுண்டீஸ்வரி, மூகாம்பிகை கோயிலுக்கு எல்லாம் போயிருக்கேன். திருவான்மியூர்ல என்னோட வீட்ல இருந்து நாலு தடவை திருப்பதிக்கு நடந்தே போயிருக்கேன். என்னை யாரும் கண்டுபிடிச்சிடக் கூடாதுனு மாறுவேஷத்துல நண்பர்களோட ராத்திரியில் நடந்தேன். அஞ்சு நாள் நடந்தோம். ரஜினி சார் கொடுத்த இமயமலை பத்தின புத்தகம் படிச்சதுல இருந்து அங்கேயும் போகணும்னு ஆசையா இருக்கு. சீக்கிரமாக் கிளம்பிடுவேன்னு நினைக்கிறேன்!

'' 'விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுறாங்க’னு நீங்க பொது மேடையில் பேசிய பிறகு, கோபாலபுரத்துக்கு வரவழைத்து உங்கள் மேல் கோபம் காட்டினாராமே கருணாநிதி... உண்மையா?''

 ''ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!''

''முதல்வர் ஜெயலலிதான்னாலே எல்லாருக்கும் பயமும் பவ்யமும்தான். ஆனா, உங்க கல்யாணத்துக்கு வாழ்த்த வந்த ஜெயலலிதாவிடம் தைரியமாக் கை குலுக்கிப் பேசிட்டு இருந்தீங்க. உங்களை 'ஜெ-வின் செல்லம்’னு சொல்றாங்களே?''

''அப்படியா என்ன? அம்மா கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன். அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!''  

''உங்களைப்பற்றிய விமர்சனங்களை எப்படி எடுத்துக்குவீங்க?''

''என்னைத் திட்டுறது மூலமா சிலருக்குச் சந்தோஷம் கிடைக்குதுன்னா, அதுக்கு நான் எவ்வளவு கொடுத்துவெச்சிருக்கணும். அதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன். என் துயரம், சந்தோஷம் எல்லாத்துக்கும் காரணம் என் விதிதான்னு முழுசா நம்புறவன் நான். ஆனா, என்னைத் திட்டும் மனிதர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருது. ஏதோ 100 வருஷம் உயிரோட வாழப் போறோம்னு கற்பனை கோட்டை கட்டிக்கிட்டு வாழ்றாங்க. ராத்திரி தூங்கப் போனா காலையில உயிரோட எந்திரிப்போமானு யாருக்குமே தெரியாது. அந்த அளவுக்கு இங்கே உயிருக்கு உத்தரவாதமே இல்லாமப்போச்சு. அதுக்குள்ள ஆயிரத் தெட்டு சண்டைகள், பிரச்னைகள்.எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்.

என் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்பட்டவங்க... என்னைத் திட்டுறது மூலமா சந்தோஷம் அடைஞ்சவங்க எல்லாரும் 'அஜீத் நல்லவன்தான்டா. நாமதான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டோம்’னு ஒரு வார்த்தை சொல்வாங்க... சொல்லணும்! அப்பதான் என் ஆன்மா சாந்தி அடையும்!''


உற்சாகமாகத் தொடங்கி உருக்கமாக முடிக்கிறார் தல!


விகடன்   

No comments:

Post a Comment