Search This Blog

Thursday, September 08, 2011

உள்ளாட்சித் தேர்தல் - தக்கவைப்பாரா ஜெ.? தலை நிமிர்வாரா மு.க.?

 மீண்டும் ஒரு திருவிழாவைப் பார்க்கத் தயாராகிவிட்டோம். நமக்குப் படம் காட்ட வரப்போகிறார்கள் கட்சித் தலைவர்கள். உள்ளாட்சித் தேர்தல் என்ற உள்காய்ச்சல் மெள்ள மெள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்படப் போகிறது. அக்டோபர் 24-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளின் புதிய பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு, புதிய நாற்காலியை அலங்கரித்தாக வேண்டும். ஆனால், அதற்கான தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகுதான் தேதியை அறிவிப்பார்கள் என்கிறது தலைமைச் செயலக வட்டாரம். காரணம், சட்டமன்றத் தேர்தலின்போது முதல்வர் அறிவித்த பல்வேறு இலவசத் திட்டங்கள் அன்றைய தினம்தான் பொதுமக்களுக்குத் தாரைவார்க்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், அவற்றைக் கொடுக்கத் தடை விழுந்துவிடும் என்பதால், செப்டம்பர் 15-ஐ தனக்கான செக் போஸ்ட் ஆக ஜெயலலிதா வைத்துள்ளார். எனவே, அதன் பிறகுதான் தேர்தல் தேதியை அறிவிப் பார்கள். எப்போது அறிவித்தாலும் சரி, அக்டோபர் 24-க்குள் தேர்தலை முடித்தாக வேண்டும் என்பதால், மாநிலத் தேர்தல் ஆணையம் தன்னுடைய வேலைகளில் தட தடக்கத் தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி களும் தங்களைத் தயார்படுத்தத் தொடங்கி வருகின்றன. அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் படலத் தைத் தொடங்கிவிட்டன. பளபளக்கும் கார்களில் பணப் பைகளுடன் வந்து இறங்கும் மனிதர்கள் ''மேயருக்கு எங்கே?'', ''முனிசிபல் சேர்மனுக்கு எங்கே?'' என்று தேடித் திரிந்து மனுக்களை வாங்குவதைப் பார்த்தால், ஜனநாயகத்தின் மீது உண்மையில் மதிப்பும் மரியாதையும் வரவே செய்கிறது!


இந்த வகையில் பார்த்தால், சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 95 பேரை கோடிக்கணக்கான மக்கள் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். மேயர், கவுன்சிலர், நகரசபைத் தலைவர், நகர பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் அரசியல் கட்சியின் வேட்பாளர்களைக்கொண்டதாக அமையும். ஊராட்சித் தலைவர் பதவி கட்சி சார்பற்ற வேட்பாளர்களைக்கொண்டதாக அமையும். கட்சி என்றாலும், அந்த அடையாளமற்று நின்றாலும் இந்தப் பிரதிநிதிகள் மக்களின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கக் கூடிய மனிதர்களாக இருக்கப்போகிறார்கள். முதல்வர், பிரதமர் நாற்காலியைத் தேர்ந் தெடுப்பதாக இது இல்லாமல் போனாலும், அனைத்துக் கட்சிகளும் இந்த உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றுவதில் சளைக் காமல் போராடும். இன்னும் சொன்னால், அந்தத் தேர்தலைவிட போட்டியும் தகராறும் இதில்தான் அதிகம். அடுத்தவருக்காகப் போடும் சண்டையை கட்சிப் பிரமுகர்கள் தனக்காகப் போடுவார்கள். போராடுவார் கள்!

ஆனால், அவர்கள் அனைவரையும்விட முதல்வர் ஜெயலலிதாவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும்தான் இந்தத் தேர்தலைப் பயத்துடனும் பீதியுடனும் எதிர்கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார்கள். மூன்று மாதங்களுக்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தலில், அனைவர் எதிர்பார்ப்பையும் மீறி அபரிதமான செல்வாக்குடன் ஆளும் கட்சி அரியணையைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. 'மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை’ என்று ஊடகங்கள் கணித்துச் சொன்னாலும் ஜெயலலிதா அத்தனை இடங்களையும் கைப்பற்றுவார் என்று யாரும் நினைக்கவில்லை. அப்படிப்பட்ட வெற்றியைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் துடிப்புடன் இருக்கிறார் அவர். சில வாரங்களுக்கு முன் நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ''நான் ஒருத்தி மட்டுமே ஒழுங்காகச் செயல்பட்டு ஆட்சிக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துத் தர முடியாது. என்னைப்போலவே அனைவரும் செயல்பட வேண்டும். நான் ஒருகட்ட டத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டுவேன். ஆனால், உங்களில் சிலர் ஒவ்வொரு செங்கல் லாக உருவுகிறீர்களா?'' என்று கொந்தளிப்புக் காட்டினார். கட்சிக்காரர்கள் யார் மீதும் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் தொடங்கி, ''சட்டமன்றத் தேர்தலில் நான் கொடுத்த வாக்குறுதியில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டேன் பார்த்தீர்களா?'' என்று பறைசாற்றுவது வரை ஜெயலலிதா தன்னுடைய ஒவ்வோர் அடியையும் கவனித்து வைத்தார். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கொஞ்சம் ஜெயித்தாலும், அதை கருணாநிதி பெரிதுபடுத்தி குளிர்காய்ந்துவிடுவார். அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது! என்பதும் ஜெயலலிதாவின் எண்ணம். 


இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்று தலை நிமிர வாய்ப்பு இருக்கிறதா என்ற யோசனையில் மூழ்கி உள்ளார் கருணாநிதி. ''ஆளும் கட்சியாக ஆக முடியலேன்னாக்கூடப் பரவாயில்லை. 60 இடங்களையாவது ஜெயிக்கணும்'' என்று சொல்லி வந்த கருணாநிதி, 24 இடங்களைத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்றார்.  அதைவிடச் சோகமாக, சட்டமன்றத்தில் எதிர்க் கட்சி அந்தஸ்தைக்கூட இழந்து சட்டமன்றத் தி.மு.க. குழுக்களில் ஒன்றாக ஆக வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டது. டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடக்கும் ஸ்பெக்ட்ரம் வழக்கும் தமிழகம் முழுக்க நடக்கும் நில மோசடி வழக்குகளும் மதுரையில் நடக்கும் கைதுகளும் தி.மு.க-வை வெளியில் தலைகாட்ட முடியாத விரக்தி நிலைக்குத் தள்ளி உள்ளது. இந்த நிலையில் அவர்களுக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் சமச்சீர்க் கல்வி விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா சறுக்கி, அதில் சுப்ரீம் கோர்ட் கொட்டி, மீண்டும் சமச்சீர்க் கல்வி செல்லும் என வந்த தீர்ப்புமட்டும் தான். அதற்கு மாநிலம் முழுவதும் பாராட்டு விழாக்களை தி.மு.க. நடத்தியது. இதை அடுத்து, ''உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட மாநகராட்சியையும் கணிசமான நகராட்சிகளையும் கைப்பற்றினால்தான் கட்சியின் செல்வாக்கைத் தக்கவைக்க முடியும்'' என்று சொல்ல ஆரம்பித்துள்ளார் கருணாநிதி. அதற்காகவே அனைத்து ஊர்களுக்கும் சென்று பொதுக்கூட்டங்களில் பேசவும் ஸ்டாலினுக்கு உத்தரவிட்டார் கருணாநிதி. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் ஏராளமான பொதுக்கூட்டங்களில் ஸ்டாலின் பேசியது இதனால்தான். ''இந்தத் தேர்தலிலும் தோற்றால், இனி எதையுமே பேச முடியாது!'' என்று இப்போதே சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள், தி.மு.க. முன்னணித் தலைவர்கள். ''என்னால் தேர்தல் பிரசாரத்துக்கு வர முடியாது. எல்லாத்தையும் நீதான் பார்த்துக்கணும்!'' என்று பொறுப்பு மொத்தத்தையும் ஸ்டாலின் தலையில் கட்டிவிட்டார் கருணாநிதி. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா எனத் தெரியவில்லை. அவர்கள் இருப்பதே நல்லது என்று கருணாநிதி நினைக்கிறார். பா.ம.க. அவர்களாகவே வெளியேறிவிட்டார்கள். மீதி இருப்பது திருமாவளவன் மட்டும்தான். காங்கிரஸ் - திருமா என்ற முரண்பட்ட தோழமையை அனுசரித்துப் போக முடியுமா என்ற தீராத யோசனையில் கருணாநிதி மூழ்கி உள்ளார். 

அதே நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரத் தயாராக உள்ளன. விஜயகாந்த், தனக்கு மரியாதையான இடங்கள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். எனவே, ஆளும் கட்சியை விமர்சிப்பதிலும் மௌனம் காட்டுகிறார்.கம்யூனிஸ்ட்டுகள், அரசின் சாதனைகளை விளக்கிச் சொல்லும் பிரசாரகர்களாகவே மாறி இருக்கிறார்கள். அப்படியே சரத்குமாரும். பாரதிய ஜனதா, பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தனித் தனியாக நிற்க இருக்கின்றன. இந்த நிலையில் மீண்டும் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும்தான் நேரடியான போட்டி! 

அக்டோபரின் அனல் அறுவடையை அள்ளிக் குவிக்கப்போவது எந்தத் தலைவர்?




விகடன்


No comments:

Post a Comment