Search This Blog

Thursday, August 18, 2011

உண்மையான சாம்பியன்தானா இந்தியா?

லக சாம்பியன் இந்தியா இவ்வளவு சீக்கிரம் இப்படிக் கேவலமாக உதை வாங்கும் என இங்கிலாந்து அணியின் கேப்டன்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்!டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையைக் கையில் ஏந்தி ஐந்து மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில், டெஸ்ட் தொடரை இங்கிலாந்திடம் பறி கொடுத்து, தரவரிசை யில் நம்பர் 1 இடத்தையும் இழந்து நிற்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட்களில் ஒன்றில்கூட இந்திய பேட்ஸ்மேன்கள் முழுவதுமாக 100 ஓவர்கள் விளையாடவில்லை.ஒரு இன்னிங்ஸில்கூட 300 ரன்களைத் தாண்டவில்லை. 1999-ல் ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் 3-0 என இந்திய அணி படு தோல்வி அடைந்திருப்பது இப்போதுதான். உலக சாம்பியனுக்கு ஏன் இந்த அவமானம்?

விளையாடத் தயாராக இல்லை!


இந்தத் தோல்விக்கு முழுமுதல் காரணம், இந்திய கிரிக்கெட் வீரர்களின் மன நிலை. 'நிறைய விளையாடிவிட்டோம். ஓய்வு வேண்டும்.’ என்கிற காரணத்தையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் டோனி. உலகக் கோப்பை முடிந்தவுடன், ஐ.பி.எல், அதன் பிறகு மேற்கு இந்தியத் தீவுகள் தொடர். அப்படியே இங்கிலாந்து பறந்து டெஸ்ட் தொடர். இதில் மேற்கு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் கேப்டன் டோனி விளையாடாமல் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஓய்வுக்குப் பிறகு திரும்பிய டோனி, இதுவரை ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 297 ரன்களே எடுத்திருக்கிறார். வீரேந்திர ஷேவாக், கௌதம் கம்பீர் காயம் காரணமாகத் தொடரில் விளையாடவில்லை. சச்சின் டெண்டுல்கர் மேற்கு இந்தியத் தொடரில் முழுவதுமாகப் பங்கேற்கவில்லை. இந்திய அணியின் நம்பர் 1 வேகப் பந்து வீச்சாளர் ஜாகீர் கானும் மேற்கு இந்தியத் தொடரில் விளையாடவில்லை. இங்கிலாந்து தொடரில் விளையாட முழுத் தகுதியுடன் இருப்பதாக அணியில் இடம்பிடித்த ஜாகீர்கான், முதல் டெஸ்ட்டில் 13 ஓவர்கள் மட்டுமே பந்து வீசிவிட்டு, 'காயம்’ என ஒதுங்கிவிட்டார்!  

மேற்கு இந்தியத் தீவு தொடரில் ஓய்வு எடுத்தவர்கள், எப்படி ஓய்வு இல்லாமல் விளையாடுகிறோம் என்கிறார்கள். இங்கி லாந்து அணிக்கு எதிராக விளையாட இந்திய அணி தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளவில்லை. வெற்றி வந்தால், ஓ.கே. தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என்கிற ரீதியில்தான் இந்திய வீரர்கள் மெத்தனமாக ஆடினார்கள்! 

நூறாவது சதமா... இந்திய அணியின் வெற்றியா?

சச்சின் டெண்டுல்கரின் வெற்றிகளைவிட அவரது தோல்விகள்தான் அதிகம் கவனிக்கப்படும், விமர்சிக்கப்படும். இப்போதும் அதே கதைதான். இந்திய அணியின் படுதோல்வி ஒருபுறம் இருக்க, சச்சின் 100-வது சதம் அடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புடன் துவங்கிய தொடரில், அவருடைய டாப் ஸ்கோர் 56. மூன்று டெஸ்ட்களில் மொத்தம் 159 ரன்கள். மாஸ்டர் பிளாஸ்டரை 'மாஸ்டர் ஆஃப் லிட்டில்’ என ஒரு பிரபல பத்திரிகை கமென்ட் அடிக்கும் அளவுக்கு சச்சினின் ஆட்டம் இந்த முறை மோசம். அணி யின் பேட்டிங்கை வலுப்படுத்தி, ஒற்றை ஆளாகத் தூக்கி நிறுத்தியிருக்க வேண்டிய சச்சின், முதல் முறை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்த வீரர்போல ஆடியது இந்தியாவின் படுதோல்விக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று!

தேர்வாளர்களின் குழப்பம்!

திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்புத் தராமல் எதற்கு ரிஸ்க் என்று ஃபார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சீனியர் வீரர்களையே தொடர்ந்து விளையாடத் தேர்ந்தெடுக்கிறது ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்தியத் தேர்வுக் குழு. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் ராகுல் டிராவிட்டை மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு அழைக்க, 'அவர் இனி மேல் விளையாட மாட்டேன். இதுதான் கடைசி!’ என்று அறிக்கைவிடும் அளவுக்கு, திறமையான வீரர்கள் இல்லாமல் திண்டாடுவதுபோன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்திய தேர்வுக் குழு. விராத் கோலி, ரோகித் ஷர்மா, ராபின் உத்தப்பா, புஜாரி, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இளம் வீரர்களுக்குச் சரியான வாய்ப்பு அளிக்காமல் தொடர்ந்து புறக்கணிப்பதும், ஒரு போட்டியில் விளையாடவிட்டு நன்றாக ஆடவில்லை என்றதும் அணியில் இருந்தே தூக்குவதும் எந்த வகையில் நியாயம் என்பது இந்தியத் தேர்வாளர்களுக்கே வெளிச்சம்!   

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலியாவில் சந்திக்க இருக்கிறது இந்திய அணி. உலகக் கோப்பைத் தோல்விக்குப் பிறகு, இந்திய அணியைப் பழிக்குப் பழி தீர்க்கக் காத்திருக்கிறது ஆஸ்திரேலியா. டோனியின் திறமையான கேப்டன்ஷிப், சச்சின் டெண்டுல்கரின் மாஸ்டர் பேட்டிங், வீரேந்திர ஷேவாக்கின் அதிரடி ஆட்டம், ஜாகீர்கானின் யார்க்கர்கள் என ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள, இந்தியா மீண்டும் அசுர பலத்தோடு களம் இறங்க வேண்டும். இல்லை என்றால், ஆஸ்திரேலியாவிடமும் அவமானப்பட்டுத்தான் திரும்ப வேண்டும். 

சாம்பியன் பட்டத்தை எட்டிப் பிடிப்பது பெரிய விஷயம் அல்ல. அதைத் தக்கவைப்பதில் இருக்கிறது சாம்பியனின் சாமர்த்தியம்!   

விகடன்  

No comments:

Post a Comment