Search This Blog

Sunday, August 07, 2011

என்ன ஆச்சு அமெரிக்க பொருளாதாரத்துக்கு..?


கடந்த வெள்ளிக்கிழமை காலை... இன்றாவது சந்தை ஏறுமா என்று  நகம்கடித்தபடி டி.வி. முன் உட்கார்ந்திருந்தவர்கள், அடுத்த சில மணி நேரத்திற்குள் வியர்த்து விதிர்விதிர்த்துப் போனார்கள். சமீபகாலத்தில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தை சரிந்ததே வியர்த்துக் கொட்டியதற்கு காரணம். ஒருகட்டத்தில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் அதிகமாக கீழே இறங்க, மீண்டும் 2008 வந்துவிட்டதோ என்று பதறிப் போனார்கள்.

என்ன காரணம்?

ழக்கம்போல தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டிய கதைதான். அமெரிக்க பொருளாதாரம் படுமோசமாக இருப்பதைத் தொடர்ந்து, அங்கு 'டபுள் டிப்ரஷன்’ வரும் என்கிற பீதி கடந்த வியாழக்கிழமை இரவு கிளம்ப, அமெரிக்க சந்தை கடுமையாகச் சரிந்தது. அதன் விளைவு, வெள்ளிக்கிழமை அன்று நம் சந்தை ரத்தக் களறியானது.நாமெல்லாம் நினைத்த வுடன் கடன் வாங்க முடியும். ஆனால், அமெரிக்க அரசாங்கம் ஓரளவுக்குமேல் கடன் வாங்க வேண்டும் என்றால், செனட்டிடம் அனுமதி வாங்க வேண்டும். ஏற்கெனவே 14.2 டிரில்லியன் டாலர்களுக்கு கடன் வாங்கிவிட்டது அமெரிக்கா. இதற்குமேல் கடன் வாங்க, அனுமதி வேண்டும். இல்லை என்றால், அரசாங்கத்தைத் தொடர்ந்து நடத்த முடியாது. முன்னால் போனால் கடிக்கும், பின்னால் வந்தால் உதைக்கும் என்கிற நிலை அமெரிக்காவுக்கு. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை செனட்டிடம், மேலும் கடன் வாங்க (கூடுதலாக 2 டிரில்லியன் டாலர்) அனுமதி பெற்றுவிட்டது. இன்றைய தேதியில் அமெரிக்க அரசிடம் இருக்கும் பணத்தைவிட ஆப்பிள் நிறுவனத்திடம் இருக்கும் பணம் அதிகம்! 

சிக்கலை ஏற்படுத்திய சீன ரேட்டிங்...

செனட்டிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் பிரச்னை ஆரம்பமானது. அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு ரேட்டிங் நிறுவனங்கள் இதுவரை உச்சபட்ச குறியீடு கொடுத்து வந்தன. ஒரு கட்டத்துக்குமேல் கடன் வாங்கும்போது அந்த பத்திரங்களுக்கு தரக் குறியீடு குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதுவரை அமெரிக்க தரக் குறியீட்டு நிறுவனங்களோ தன் நாட்டு கடன் பத்திரங் களுக்கான ரேட்டிங்கைக் குறைக்கவில்லை. ஆனால், சீனாவைச் சேர்ந்த தரக் குறியீட்டு நிறுவனமான டகாங் (Dagong Global Credit Rating) நிறுவனம் அமெரிக்க பத்திரங்களுக்கான தரக் குறியீட்டை ஏ+ குறியீட்டிலிருந்து வெறும் 'ஏ’-வாக குறைத்தது. தனது பொருளாதாரத்தை சீர்படுத்த இன்னும் பல ஆயிரம் கோடி டாலரை அச்சடிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு இருப்பதால் டாலரின் மதிப்பு மேலும் குறையும். இதனால், அமெரிக்கா தன் பலத்தை இழந்து நெருக்கடியில் சிக்கும் என்று ஒரு செய்தி காட்டுத் தீயாகப் பரவ ஆரம்பித்தவுடன், சந்தை சரிவுப் பாதைக்குத் திரும்பியது.

இனி என்ன?

அமெரிக்க பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய பங்குச் சந்தையில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்சந்தையின் போக்கு எப்படி இருக்கும், புதிய முதலீட்டை மேற்கொள்ள இது சரியான நேரமா?
''அமெரிக்க பொருளாதார பிரச்னை காரணமாக இந்திய சந்தையில் ஒரு நீஜெர்க் ரியாக்ஷன் நடந்திருக்கிறது. இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள எதுவுமில்லை''''கடந்த 10 வருடங்களில் சில போர்களில் ஏகப்பட்ட பணத்தைச் செலவழித்தது, இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு முக்கிய காரணம். ராணுவத்துக்கு நிறைய செலவழிப்பதை தவறு என்று சொல்ல முடியாது. எல்லா நாடுகளும் ராணுவத்திற்கு செலவு செய்யவே செய்கிறது. ஆனால், இப்படிச் செய்யும் போது பொருளாதார ரீதியான நெருக்கடி வந்துவிடுகிறது. இப்படி ஒரு பிரச்னை தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பது அமெரிக்காவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். என்றாலும், அதைத் தடுக்க பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் அமெரிக்கா வால் எடுக்க முடியவில்லை.
அமெரிக்காவுக்கு இந்த பிரச்னை என்றால், ஐரோப்பிய நாடுகளுக்கு பெருங் கடன் பிரச்னை. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கிய ஜப்பான், இயற்கை சீரழிவிலும் சிக்கித் தவிக்கிறது. இந்த நிலையில் இன்றைக்கு பெரிய பிரச்னை என்று எதுவுமில்லாமல் ஓரளவுக்கு வளரக்கூடிய பொருளாதாரம் என்றால், அது இந்தியாவும் சீனாவும்தான். எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம் சந்தையை விட்டால் வேறு வழியில்லை. அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்தே ஆகவேண்டும்.ஆனால், நம் நாட்டிலும் பிரச்னையே இல்லை என்று சொல்ல முடியாது. பணவீக்கம், ஊழல் போன்ற பிரச்னைகள் இருக்கவே செய்கிறது. ஆனால், இவை எல்லாம் சரி செய்து விடக்கூடிய பிரச்னைகளே. எனவே, சந்தை இப்போது இறங்கி இருப்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், இதனை ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்தி தரமான பங்குகளை வாங்கலாம்''
''கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த பொருளாதார நெருக்கடி உலக சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணமாகி விட்டது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சிறிது தாமதமாக சரிந்திருக்கிறது.  அமெரிக்க முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் வருமானத்தைதான் பார்த்தார்களே தவிர, அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை பார்க்கத் தவறிவிட்டார்கள். 2008-ம் ஆண்டு நடந்த வீழ்ச்சிக்கே இன்னும் விடை தெரியாமல் இருக்கும்போது, அடுத்து இப்போது ஒரு சிறிய வீழ்ச்சி. 20 வருடங்களுக்கு முன்பு நடந்த வீழ்ச்சியிலிருந்தும் அவர்கள் எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த வீழ்ச்சியிலிருந்தும் அவர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. தவறான பொருளாதாரக் கொள்கையை வைத்துக் கொண்டு, அதிலேயே பணத்தைக் கொட்டி சொத்துக்களின் விலையை உயர்த்தப் பார்க்கிறார்கள். இதன் விளைவு, பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டன.
இதனால்,  தற்போதைய நெருக்கடி சுபமாக முடியாது. இதைத் தடுக்க வேண்டுமென்றால், ஆட்சியாளர்கள் சில கசப்பு மருந்துகளை மக்களுக்கு கொடுத்துதான் ஆகவேண்டும். மக்களும் இதை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதைச் செய்யும் நாடுகளில்தான் முதலீடு பெருகும்.ஏற்கெனவே இந்திய சந்தை இறங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் இதை முதலீட்டுக்கான நேரமாகப் பார்க்கிறார்கள். உலகளவிலும், உள்நாட்டிலும் சாதகமான வினையூக்கிகள் தென்படாததால் பொறுமையை கடைப்பிடித்தால் மட்டுமே ஓரளவு லாபத்தைப் பார்க்க முடியும்.
 

No comments:

Post a Comment