Search This Blog

Monday, August 29, 2011

ரிலையன்ஸின் கே.ஜி.பேஸின், ஏர் இந்தியா - 2000 கோடி & 200 கோடி ஊழல் கதை ஆரம்பம் - சீக்ரெட் அஃப் சி.ஏ.ஜி.

இரண்டு மிக முக்கியமா அறிக்கைகளை சி.ஏ.ஜி., அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க போகிறது. ஒன்று, ரிலையன்ஸின் கே.ஜி.பேஸின் சம்பந்தப்பட்டது. இன்னொன்று, ஏர் இந்தியா பற்றியது. 2ஜி போல், காமன்வெல்த் போல் இந்த இரண்டு வழக்குகளும் மீடியாவில் இனி விலாவாரியாக அலசப்படப் போகின்றன. 200 கோடி ஊழல், 2000 கோடி ஊழல் என்று பெரிய தொகைகளைப் பற்றிப் பேசப் போகிறார்கள். ஊழலில் மூழ்கிக் கிடக்கும் காங்கிரஸ் அரசே வெளியேறு என்று பி.ஜே.பி., நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப் போகிறது. எனக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அடக்கமாக அறிக்கை விடப்போகிறார். அண்ணா ஹசாரேவுக்கான மேலும் சில ஆயிரம் மெழுகுவர்த்திகள் ஒளிவீசப் போகின்றன.

 காங்கிரஸுக்கு இப்போதைக்கு ஒரே ஒரு எதிரிதான். சி.ஏ.ஜி. ஆயிரத்தெட்டு அரசு அமைப்புகளில் இதுவும் ஒன்று. ஆனால், 2ஜி மூலம் தான் திடீரென்று ஓவர் நைட்டில் பாப்புலர் ஆகிவிட்டது.காதில் பால் பாயிண்ட் பேனா செருகிக் கொண்டு யாரோ சில ஆடிட்டர்கள் அரசாங்கத்தின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதாக நாம் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம். யார் அவர்கள்? இரண்டே வார்த்தைகளில் சொல்வதானால், அரசாங்கத்தின் ஆடிட்டர், சி.ஏ.ஜி.

நம் வருமானத்தையும் செலவையும் ஒழுங்காகப் பதிவு செய்து கணக்குக் காட்டுகிறோமா என்பதைக் கண்காணிப்பதற்கு வருமான வரி அலுவலகம் இருக்கிறது. இந்த வரிகளை வசூலிக்கும் அரசாங்கத்தின் கணக்கு வழக்குகளை யார் சரிபார்ப்பது? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் அஃப் இந்தியா (சி.ஏ.ஜி.) தலைமை கணக்குத் தணிக்கையாளர். சி.ஏ.ஜி., இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்களின் வரவு, செலவுகளைத் தணிக்கை செய்கிறது. அரசு உதவி பெற்று இயங்கும் பல்வேறு நிறுவனங்களும் தணிக்கைப் பட்டியலில் அடங்கும் .

சி.ஏ.ஜி.யாக நியமிக்கப்படுபவர் இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பிரிவின் தலைவராக இருப்பார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டில் நிதி நிர்வாகம் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கவே இவர் தலைமையில் ஒரு குழு இயங்குகிறது. ஒவ்வொரு மாநிலமாக, ஒவ்வொரு யூனியனாக, அரசு சார்ந்த ஒவ்வொரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளையும் சி.ஏ.ஜி. ஆராய வேண்டும். உள்ளூர் மட்டுமின்றி அரசாங்கத்தின் வெளிநாட்டுச் செலவுகளையும் கண்காணிக்க வேண்டும். விரிவாகத் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக, சி.ஏ.ஜி. மேற்கொள்ளும் தணிக்கைகள் மூன்று பிரிவுகளில் அடங்கும். முதலாவது, அன்றாட பரிவர்த்தனைகள் தணிக்கை. அரசாங்கத்தின் கடன், வைப்புத் தொகை, பட்டு வாடா, வர்த்தகம் போன்றவற்றைத் தணிக்கை செய்வது இதில் அடங்கும். இரண்டாவது, அரசாங்கத்தின் வரவு, செலவு கணக்குகளைத் தணிக்கை செய்தல். மூன்றாவது, அரசாங்கத்தின் கையிருப்பு கணக்குகளைச் சரிபார்ப்பது. 

சி.ஏ.ஜி.யின் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று பிரதம மந்திரி சிபாரிசு செய்கிறார் என்றாலும், நியமன அதிகாரம் ஜனாதிபதிக்கே. நியமிக்கப்பட்டவரை பதவி நீக்கம் செய்வது சுலபமல்ல. உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் இம்பீச்மெண்ட் முறையே இங்கும் இயங்கும். சம்பந்தப்பட்டவர் குற்றம் இழைத்திருக்கிறார். எனவே, அவரை நீக்கலாம் என்று மாநிலங்கள் அவையில் பெரும்பாலானோர் வாக்களித்து, பிறகு தீர்மானம் மக்கள் அவைக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கும் வாக்கெடுப்பு எதிராக வந்தால் மட்டுமே அவர் நீக்கப்படுவார். ஓர் அரசாங்கம் தனது சொந்த விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் சி.ஏ.ஜி. தலைவரை சேர்க்கவோ நீக்கவோ கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. 

பிரிட்டன் இந்தியாவை ஆண்டபோது உருவாக்கப்பட்ட அமைப்பு இது. அவர்கள் சென்ற பிறகும் கேள்வியின்றி நாம் இதனைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். சி.ஏ.ஜி.யின் கண்காணிப்பினால் அரசு, நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கத் தாமதப்படுத்துகிறது. அரசு நிர்வாகம் குறித்தும் வரவு செலவுகள் குறித்தும் சி.ஏ.ஜி.யால் புரிந்து கொள்ளவே முடியாது. எனவே சி.ஏ.ஜி.யைக் கலைத்து விடலாம்- இது சி.ஏ.ஜி.க்கு எதிரானோர் வாதம். அரசு தன் வருமானத்தை எப்படி ஈட்டுகிறது என்பதும் மக்களின் வரிப்பணத்தை எப்படிச் செலவு செய்கிறது என்பதும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சி.ஏ.ஜி., அரசுத் துறைகளைத் தணிக்கை செய்தால்தான் ஊழல் கண்டு பிடிக்கப்படும். இன்னும் சொல்லப் போனால், சி.ஏ.ஜி.க்கு தற்போது வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். சி.ஏ.ஜி. தேவை என்பவர்களின் வாதம் இது.  

ஆனால், 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் 2008ல் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை சி.ஏ.ஜி. ஆதாரங்களுடன் பட்டியலிட்டபோது இவ்வளவு பெரிய ஊழலா என்று இந்தியா மட்டுமல்ல உலகமே வாய் பிளந்தது. எதற்கு அநாவசியமாக ஒரு துறை என்று கேள்வி கேட்டவர்கள் அதற்குப் பிறகு வாய் திறக்கவில்லை.ஆனால், 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் 2008ல் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை சி.ஏ.ஜி. ஆதாரங்களுடன் பட்டியலிட்டபோது இவ்வளவு பெரிய ஊழலா என்று இந்தியா மட்டுமல்ல உலகமே வாய் பிளந்தது. எதற்கு அநாவசியமாக ஒரு துறை என்று கேள்வி கேட்டவர்கள் அதற்குப் பிறகு வாய் திறக்கவில்லை.சீனாவில் சி.ஏ.ஜி. போன்ற தணிக்கை அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புக்கு சீன அரசாங்கம் கூடுதல் அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. உதாரணத்துக்கு, கணக்கு வழக்குகளில் ஊழல் இருப்பது தெரிய வந்தால், தணிக்கை அதிகாரி, சம்பந்தப்பட்ட நபர்களை வரவழைத்து விசாரணை மேற்கொள்ளலாம். உண்மைகளை நேரடியாக வெளிக்கொண்டு வரலாம். இப்படிப்பட்ட அதிகாரத்தை இந்திய சி.ஏ.ஜி.க்கும் அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வாதிடுகிறார்கள். 

இருக்கும் அதிகாரமே அதிகம் என்று உள்ளுக்குள் முணுமுணுத்துக் கொண்டாலும் வெளிப்படையாக சி.ஏ.ஜி.யைப் பாராட்டுவதைத் தவிர வேறுவழியில்லை காங்கிரஸுக்கு. சி.ஏ.ஜி. இயங்க ஆரம்பித்து 150 ஆண்டுகள் நிறைவான தையொட்டி இந்த ஆண்டு சிறப்பு நாணயம் வெளியிட முடிவு செய்திருக்கிறது அரசு. அதிலும் ஏதாவது ஊழல் செய்து அதையும் சி.ஏ.ஜி.யே கண்டுபிடித்து அறிக்கை தயாரிக்க வேண்டிய அவசியம் நேராமல் பார்த்துக் கொண்டால் சரி!  

 ஏர் இந்தியா பற்றி சி.ஏ.ஜி.

ஐம்பது புதிய விமானங்களை போயிங் நிறுவனத்திடம் இருந்து ஏர் இந்தியா வாங்கியிருக்கிறது. ஏற்கெனவே இழப்பில் ஓடிக் கொண்டிருக்கும் நிறுவனம். கிட்டத்தட்ட 40,000 பணியாளர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதச் சம்பளம் பாக்கி. ஏப்ரல் முதல் ஊக்கத் தொகை கொடுக்கப்படவில்லை. இதுவரை, 40,000 கோடி கடன்பட்டிருக்கிறது. “இந்நிலையில் திடீரென்று ஏன் 50 புதிய விமானங்கள்?” என்று சி.ஏ.ஜி.கேட்டதற்கு, “லாபத்தைக் கூட்டுவதற்குத்தான் விரிவாக்கம் செய்கிறோம்,” என்று பதில் சொல்லியிருக்கிறது ஏர் இந்தியா. “உங்கள் கணக்குப்படியே பார்த்தாலும் 35 விமானங்கள் போதுமே?” “பல்க் டிஸ்கவுண்ட் தருவதாகச் சொன்னார்கள் வாங்கிவிட்டோம்,” என்கிறது ஏர் இந்தியா. ‘200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று அறிவித்துள்ளது சி.ஏ.ஜி. விரிவான பின்னணி தகவல்கள் விரைவில் வெளிவரும்.  

சி.ஏ.ஜி. தலைவர் விநோத் ராய்

ஜனவரி 2007ல் கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரலாகப் பதவியேற்றார். முன்னதாக, நிதியமைச்சகத்தின் செயலாளராக இருந்தபோது, வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வாகம் செய்து வந்தார். கேரள அரசின் நிதித்துறையில் பிரின்ஸிபில் செகரடரியாக இருந்திருக்கிறார். வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளிலும் இயங்கியிருக்கிறார். சர்வதேச அளவிலும் பல முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார். உதாரணத்துக்கு, தணிக்கை அதிகாரிகளைக் கொண்டிருக்கும் ஐ.நா.வின் பேனலில் விநோத் ராய் அங்கம் வகிக்கிறார். தில்லி ஸ்கூல் அஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முது நிலைப் பட்டமும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். 

 முக்கியமான சி.ஏ.ஜி. அறிக்கைகள்:

ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் தொகை மதிப்பிடப்படவில்லை.· காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் ஸ்பான்சர்ஷிப் மூலம் எதிர்பார்த்த வருமானம்: 960 கோடி ரூபாய். கிடைத்தது, 375 கோடி. டிக்கெட் விற்பனை (எதிர்பார்த்தது) : 100 கோடி, கிடைத்தது 39 கோடி. அரங்கம் பராமரிப்புச் செலவு, 76 கோடி. நிஜ செலவு, 671 கோடி. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் இழப்பு 1,76,000 கோடி.

சி.ஏ.ஜி. 1989லேயே கவனம் பெற்று விட்டது. போஃபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து ஓர் சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிடப்பட்டது. அதை வெளியிட்டு, அப்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானவர், டி.என்.சதுர்வேதி. பதவிக் காலம் முடிந்த பின்னர் இவர் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டார். பின்னர், கர்நாடக ஆளுனராகவும் இருந்தார்.  

 

No comments:

Post a Comment