Search This Blog

Saturday, July 09, 2011

திருத்துமா தீர்ப்புகள்? -சமச்சீர் கல்வி:சில யோசனைகள், ஓ பக்கங்கள், ஞாநி

 
இப்போது இந்தியாவை ஆள்வது அரசாங்கங்களா, நீதிமன்றங்களா என்று குழம்பும் அளவுக்கு நீதிமன்றங்களின் பங்கு பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அரசு நிர்வாகம் இயல்பாகச் செய்ய வேண்டிய பல விஷயங்களை நீதிமன்றங்கள் உத்தரவு போட்டு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு ஸ்பெக்ட்ரம் ஊழல். இந்த மோசடியை பத்திரிகைகள் அம்பலப்படுத்தியும் ஆண்டுக் கணக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மன்மோகன் சிங் மெத்தனமாக இருந்து வந்தார். உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு வந்த பின்னர், அந்த நீதிமன்றமே சி.பி.ஐ. விசாரணையை நேரடியாகத் தன் கண்காணிப்பில் எடுத்துக் கொண்ட பின்னர் தான், பல பெரும் புள்ளிகள் - அரசியல்வாதிகள் முதல் தனியார் நிறுவன அதிகாரிகள் வரை - கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
 
உச்ச நீதிமன்றம் இதைச் செய்யாமல் இருந்திருந்தால், நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ராசா தொடர்ந்து அமைச்சராக இருப்பார். கனிமொழியும் கூட அடுத்த வாய்ப்பில் அமைச்சராகியிருக்கலாம். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தி.மு.க.வே கூட ஜெயித்து ஆட்சி அமைத்திருக்கலாம். உச்ச நீதிமன்றம் கறாராக சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதனால்தான், இந்த மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பே ஏற்பட்டது. அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கறாரான உத்தரவுகளைப் போட்டு வருகிறது. கடுமையாகத் தன் கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாயாவதி அரசுக்கெதிராகவும் சட்டிஸ்கர் பி.ஜே.பி. அரசுக் கெதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் வந்திருக்கக்கூடிய உத்தரவுகள் முக்கியமானவை.
 
சட்டிஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளை அழிப்பதற்காகப் பொதுமக்களிலிருந்தே ஓர் ஆயுதப்படையை சட்டிஸ்கர் அரசு 2005ல் உருவாக்கியது. அமைதி அணி வகுப்பு என்ற பொருளில் இதற்கு ‘சல்வா ஜுடும்’ என்று பெயர் சூட்டியது. ஆறு வருடங்களாக இந்தப் படை செய்துவரும் அட்டூழியங்கள், மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் பற்றி சிவில் உரிமை ஆர்வலர்கள் பலமுறை அம்பலப் படுத்தியிருக்கிறார்கள். இப்படி அரசின் கூலிப்படையை அம்பலப்படுத்திய கோபத்தில்தான் டாக்டர் விநாயக் சென்னை, சட்டிஸ்கர் அரசு கைது செய்து ஜாமீனே தராமல் வருடக் கணக்கில் சிறை வைத்தது. அவருக்குக் கடைசியில் ஜாமீன் வழங்கியதும் உச்ச நீதிமன்றம்தான்.


இப்போது சட்டிஸ்கர் அரசின் சல்வா ஜுடும் படையே இந்திய அரசியல் சட் டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதர்சன் ரெட்டியும் எஸ்.எஸ்.நிஜ்ஜாரும் அறிவித்து அதைக் கலைக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள். சுமார் 5 ஆயிரம் பேரைக் கொண்ட இந்தப் படையினரிடமிருந்து உடனடியாக எல்லா ஆயுதங்களையும் கைப்பற்றச் சொல்லப்பட்டிருக்கிறது. படிப்பறிவு இல்லாத ஏழை ஆதிவாசி இளைஞர்களை இப்படிப் படை திரட்டியது தவறு என்று நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படைக்குச் சம்பளம் கொடுக்க மத்திய அரசு பணம் கொடுத்ததையும் உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. மாவோயிஸ்ட்டுகளின் வன்முறையை ஒழிக்க, அரசு, அரசியல் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘சமூகப் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம்தான் மாற்றம் ஏற்பட முடியும்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
 
மூன்று சட்டிஸ்கர் கிராமங்களுக்கு நேரில் சென்று சல்வா ஜுடுமின் அத்து மீறல்களைப் பற்றித் தகவல் சேகரித்த சுவாமி அக்னிவேஷ் முதலான சமூக ஆர்வலர்கள் மீது சல்வா ஜுடும் படை தாக்குதல் நடத்தியது பற்றித் தனி விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.உத்தரப்பிரதேசத்தில் தில்லிக்கு அருகில் இருக்கும் நொய்டா பகுதியில் விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொகுசு வீடுகள் கட்ட கொடுக்கும் விதத்தில் மாயாவதி அரசு உத்தரவுகள் பிறப்பித்ததை இன்னொரு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கங்குலியும் ஜி.எஸ்.சிங்வியும் கண்டித்திருக்கிறார்கள். ஏற்கெனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் அரசு உத்தரவுக்கு எதிராக அளித்த தீர்ப்புக்கு இடைக் காலத் தடை தரமுடியாது என்று நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்.
 
 
ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பான வக்கீல், வீடற்றோருக்கு வீடு கட்டவே இந்த நிலம் எடுக்கப்பட்டதாகச் சொன்னதும் நீதிபதிகள் பொங்கி வெடித்திருக்கிறார்கள். “நீச்சல் குளம், மசாஜ் நிலையம், டென்னிஸ் கோர்ட், பியூட்டி பார்லர் இவற்றோடு இந்த வீட்டு வளாகம் இருக்கும் என்று உங்கள் கம்பெனி விளம்பரங்களில் அறிவித்திருக்கிறீர்களே, எல்லாம் ஏழைகளுக்காகவா ?” என்று நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள். விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தினால், அது சமூகத்தில் இருக்கும் அனைவரின் மேம்பாட்டுக்காகவும் பயன்படுவதற்காக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் இப்போது இந்தக் கையகப்படுத்தும் சட்டமே ஏழைகளை ஒடுக்குவதற்கானதாக ஆகிவிட்டது என்று நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படிப் பல வழக்குகளில் உச்ச நீதி மன்றத்தின் அண்மைக்கால உத்தரவுகள் அரசாங்கங்களின் அராஜகங்களுக்கு எதிராக மக்களுக்கு நிவாரணம் தருபவையாக அமைந்து வருகின்றன. இதே போல அரசியல் சட்டத்தின் கீழ் சுதந்திரமாக இயங்கும் அதிகாரத்துடன் அமைக்கப்பட்ட கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கைகள்தான் பல ஊழல்களை வெளிப்படுத்தி வருகின்றன. ஸ்பெக்ட்ரமுக்கு அடுத்தபடியாக பெட்ரோலியம் லைசன்ஸ் விவகாரத்தில் ரிலையன்சுக்கு சாதகமாக கிருஷ்ணா கோதாவரி படுகை லைசன்சுகளை வழங்கியது பற்றிய அறிக்கையில் அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவின் செயல் கண்டிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பதவியிலிருந்து தாமாகவே இப்போது விலகிக் கொள்ள முரளி தியோரா முன்வந்திருப்பதற்கு இந்த அறிக்கைதான் காரணம். காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் சுரேஷ் கல்மாடி சிறைக்குப் போகவும் தணிக்கை அறிக்கையே காரணம்.
 
 
ஒரு சில நீதிபதிகள், ஒரு சில அதிகாரிகள் நேர்மையாகக் கறாராகச் செயல்படுவதால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. புதிய சட்டங்கள் இல்லாமலே இந்த மாற்றங்கள் சாத்தியமானதற்குக் காரணம், ஒரு சில நீதிபதிகள்தான். கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.எச்.கபாடியா பதவி ஏற்ற பிறகே பெரும் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. ஸ்பெக்ட்ரம் வழக்கில் நீதிபதிகள் சிங்க்வியும் கங்குலியும் தான் தொடர்ந்து சி.பி.ஐ.யை கடுமையாக விசாரணையில் ஈடுபடச் செய்து வருகிறார்கள். உண்மையில் இது ஆரோக்கியமான நிலை அல்ல. கபாடியா தலைமை நீதிபதியாவதற்கு முன்னர் கே.ஜி. பாலகிருஷ்ணன் அந்தப் பொறுப்பில் இருந்தார். அப்போது உச்ச நீதிமன்றம் இப்படிச் செயல்படவில்லை. இன்று பாலகிருஷ்ணன் மீதே கடுமையான சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. பதவி நீக்கம் செய்யப்படுவதற்காக மாநிலங்களவையில் தீர்மானத்துக்குள்ளாகியிருக்கும் நீதிபதி தினகரன், இனியும் தன் வழக்கை இழுத்தடிக்க முடியாது என்று இப்போது உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு அப்படி இழுத்தடிப்பது நடந்துகொண்டேதான் இருந்தது.

கபாடியா, கங்குலி, சிங்வி, நிஜ்ஜார் போன்ற நீதிபதிகள் இல்லையென்றால் என்ன ஆகும் என்பதே நம் கவலைக்குரிய விஷயம். கபாடியா அடுத்த வருடம் செப்டெம்பரில் ஓய்வு பெற்றுவிடுவார். அதற்குள் ஸ்பெக்ட்ரம் வழக்கு முடியுமா, தொடர்ந்தால் இதே தீவிரத்துடன் இருக்குமா என்பதே என் கவலை/என் கேள்வி. அடுத்து வரும் தலைமை நீதிபதி பால கிருஷ்ணனைப் போல இருந்தால் என்ன செய்வது? தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளும், அவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் ஒழுங்காக நடக்கவில்லையென்றால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏதாவது செய்தால்தான் உண்டு என்ற நிலைமை எவ்வளவு மோசமானது? அந்த நீதிபதிகளும் இப்போதுள்ளவர்களைப் போல செயல்படவில்லையென்றால், வேறு தீர்வு என்ன ?நம்முடைய பிரச்னை சரியான அமைப்புகள், சட்டங்கள், வழிமுறைகள் இல்லை என்பதே அல்ல. அவற்றில் பொறுப்புகளில் இருக்கும் தனி மனிதர்கள் சரியானவர்களாக இல்லை என்பதுதான். இருப்பதில் சுமாரானவர்களை அல்லது இருக்கும் வெவ்வேறு மோசமானவர்களை மாறி மாறித் தேர்வு செய்து அனுப்புவதை மட்டுமே நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
 
முற்றிலும் சரியான மனிதர்களை குழந்தையிலிருந்தே உருவாக்காமலும், அப்படி உருவாக்கியவர்களை பொறுப்புகளுக்கு அனுப்பாமலும் இருப்பதுதான் நம்முடைய அடிப்படைத் தவறு. அதன் விளைவுகளையே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
 
ஸ்டாலின் ஏமாற்றினார்!
 
 
இந்தியாவிலேயே ப்ளஸ் டூவில் புகைப்படப் பாடம் கற்றுத் தரும் ஒரே பள்ளியான சென்னை சூளைமேடு மாநகராட்சிப் பள்ளியில் அந்தப் படிப்பை மூட முடிவு செய்ததை மாற்றக் கோரி அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த அக்டோபரில் எழுதினேன். உடனே மேயர் மா.சுப்ரமணியன், ஸ்டாலின் உத்தரவின்படி அந்தப் படிப்பு தொடரப்படுவதாக எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். அதற்குப் பூச்செண்டு வேறு கொடுத்தேன்.ஆனால் இப்போது ஜூனில் அந்தப் பாடப் பிரிவுக்கு மாணவர்களை அனுமதிக்கச் சென்றபோது அது மூடப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். சென்றமுறை ஒரு மிஸ்ட் ஃபோன் காலுக்கு பல முறை எனக்கு ஃபோன் செய்த மேயர், இந்த முறை நான் பல முறை ஃபோன் செய்தும் எடுக்கவில்லை.  அந்தப் பாடப் பிரிவைத் தொடரும்படி கோரி முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்துக்கு ஜூன் 30 அன்று ஒரு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளேன். இதுவரை பதில் வரவில்லை.
 
சமச்சீர் கல்வி:சில யோசனைகள்!
 
நான் எழுதியபடியே நடந்திருக்கிறது. 
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஜெயலலிதா அரசு அமைத்த சமச்சீர் கல்வித் திட்ட ஆய்வுக்குழு ஜெயலலிதா அரசு ஏற்கெனவே எடுத்த முடிவுக்கு சாதகமான பரிந்துரையையே வழங்கும் என்று சொன்னேன். வழங்கியிருக்கிறது. இந்தப் பரிந்துரையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரிக்கும் வாய்ப்பில்லை. அதிகபட்சம் அரசுக்கு சமச்சீர் கல்வி பற்றி சில யோசனைகளைச் சொல்லிவிட்டு, சமச்சீர் கல்வித்திட்டத்தை இந்த ஆண்டு அரசு ரத்து செய்தது செல்லுபடியாகும் என்ற ரீதியிலேயே தீர்ப்பு வழங்கிவிட்டு, உயர் நீதிமன்றம் ஒதுங்கிக் கொள்ளும் வாய்ப்பே அதிகம். ஆய்வுக்குழுவின் பரிந்துரையை நிராகரித்துவிட்டு இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்தும்படி உத்தர விடும் வாய்ப்பு மிகக் குறைவு.ஜெயலலிதா அரசு என்ன செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் ஒரு பக்கம் சொல்லும். என் பங்குக்கு நான் கொஞ்சம் சொல்கிறேன். 
 
 
1. அடுத்த ஜூனிலிருந்து பொதுப் பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்க வேண்டும். அதை உருவாக்க, இப்போது உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க, பாடவாரியாகக் குழுக்களை அமைக்க வேண்டும். 

2. புதுப் பாடத்திட்டத்துடன் சேர்த்து, புதுத் தேர்வு முறையும் அமலுக்கு வர வேண்டும். மனப்பாட அடிப்படையில் இல்லாமல், சுயமாக எழுதுவதை மதிப்பிடும் முறையில் எப்படித் தேர்வு முறையை மாற்றுவது என்பதை ஆராய இன்னொரு குழு அமைக்க வேண்டும்.
 
 3. இந்தக் குழுக்களில் பள்ளி உரிமையாளர்களை, ஜால்ராக்களை நியமிக்காமல், நிஜமாகவே வகுப்புக்குச் சென்று பாடம் எடுக்கும் ஆசிரியர்களையும் தேர்வுத்தாள் திருத்தும் ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். இந்தக் குழுக்களின் பரிந்துரைகள் ஆறு மாதங்களில் தரப்படவேண்டும். அவற்றை இணையத்தில் வெளியிட்டு அடுத்த மூன்று மாதங்களுக்குள் கருத்துகள் பெற்று, திருத்தங்கள் செய்து முடிக்கப்பட வேண்டும். 
 
4. அரசுப் பள்ளிகளில் எல்லா ஆசிரியர் பதவிகளையும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும்.  
 
5. பாடம் ஒழுங்காக நடத்தாத ஆசிரியர்கள் பற்றி ரகசியமாக புகார்கள் தர பெற்றோருக்கும் மாணவருக்கும் மாதாமாதம் வாய்ப்புத் தரவேண்டும். ஒரு வாரத்துக்குள் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளூர் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.
 
6. மைதானம், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள் உடனே மூடப்பட வேண்டும். அந்த வசதிகள் ஓராண்டுக்குள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
 
7. தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓர் ஊக்க ஊதிய உயர்வு தரவேண்டும்.
8. ஒவ்வொரு வருடமும் கடைசியில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது அதே தேர்வை அந்தந்தப் பாட ஆசிரியர்களும் எழுத வேண்டும். 80 சதவிகித மதிப்பெண் எடுக்காத ஆசிரியர்களுக்கு ஓராண்டு இன்கிரிமெண்ட் வெட்டப்பட வேண்டும். தொடர்ந்து மூன்று வருடங்கள் சரியான மதிப்பெண் எடுக்காத ஆசிரியர் வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இதுபோல இன்னும் 24 யோசனைகள் உள்ளன. அடுத்த ஓராண்டில் மேற்கண்ட எட்டையும் நிறைவேற்றினால், மீதி யோசனைகள் தெரிவிக்கப்படும்.

No comments:

Post a Comment