Search This Blog

Thursday, July 21, 2011

இதுதாண்டா ஜெ. போலீஸ்!

ஷாக் 10 - ஆயிரமாயிரம் புகார்கள்... அதிரடிக் கைதுகள்


டி உதவுற மாதிரி அண்ணன், தம்பிகூட உதவ மாட்டான்’ என்ற பழமொழிதான் ஜெயலலிதாவின் இன்றைய புது வழி! இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க-வை - இன்றும் மத்தியில் ஆளும் கட்சியின் கூட்டணி மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள தி.மு.க-வை - 'லப்டப்... லப்டப்...’ என்று திகைக்கவைக்க லத்தியே போதும் என்று முடிவெடுத்துவிட்டார் முதல்வர்.'இன்னும் 30 நாட்களில் போலீஸ் ராஜ்யம்’ ஆரம்பமாகப் போகிறது என்று ரெட் சிக்னல் காட்டுகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். இதற்கென இட்டுக்கட்டியோ... பொய்யாகப் புனைந்தோ, வழக்குகளை அவர் பாய்ச்சப்போவது இல்லை.

தி.மு.க-வினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, யார் யாரை எல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சீண்டி னார்களோ... அந்த நபர்களைவைத்தே திருப்பி அடிக்கவிடுவதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.சன் டி.வி. முதல் நில மோசடி வரையிலான ஜெ... மு.க... ரிலே ரேஸ் இதோ!

சன் நோக்கி 'கன்’! '


ன் டி.வி-க்கும் தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று கருணாநிதி சொன்னால்கூட, அதை ஜெயலலிதா ஏற்கத் தயாராக இல்லை. கருணாநிதிக்கான ஆக்சிஜனாக சன் டி.வி-யைத்தான் ஜெ. நினைக் கிறார். ஆட்சிக்கு வந்ததுமே அவர் அசைத்துப் பார்க்க நினைத்தது இவர்களைத்தான்.'போன தடவை, கருணாநிதி கைதைத் தமிழகம் முழுக்கப் பரப்பி, அனுதாபம் தேடவைத்தது இவர்கள்தான். எனவே, இந்தத் தடவை என்ன நடந்தாலும் தங்கள் மீடியா பலத்தால் இதையே செய்வார்கள். எனவே, அவர்களை முதலில் தட்டிவைக்க அம்மா நினைக்கிறார்'' என்கிறார் அமைச்சர்களில் ஒருவர். அதனால்தான், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனைப் புதுப்பிக்கப் பேசினார். டி.வி. தொழிலுக்கு கேபிள் உயிர் என்பது ஜெ. கணக்கு!

அடுத்து 'சன் இன் லா' குடும்பத்தின் பக்கமும் ஜெ. முகம் திரும்பியது. சினிமாக்காரர்கள் மொத்தப் பேரையும் சினம்கொள்ளவைத்ததாக சன் பிக்சர்ஸ் மீது புகார் கொடுக்கப் புற்றீசல் மாதிரி எத்த னையோ தயாரிப்பாளர்கள் புறப்பட்டார் கள். சேலம் கந்தன் ஃபிலிம்ஸ் செல்வராஜ் முதல் 'மாப்பிள்ளை’ ஹித்தேஷ் ஜபக் வரையில் சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்த பல படங்களுக்கு எஃப்.ஐ.ஆர். போடுகிறார்கள். இன்றைய தின நிலவரப்படி... சக்சேனா சிறையில் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. இது கலாநிதி மாறனையும் குறிவைக்கும் சுழலாகவே சுற்ற ஆரம்பித்து உள்ளது. கடந்த 13-ம் தேதி 'கலைஞர் கருணாநிதி நகர்’ காவல் நிலையத்துக்கு அவர் வந்திருக்க வேண்டும். 26-ம் தேதி வரை அவருடைய வக்கீல்கள் அவகாசம் கேட்டு உள்ளார்கள். '26-ம் தேதி வரை பார்ப்போம்’ என்கிறார் அந்தப் பகுதி டெபுடி கமிஷனர். அதற்குப் பிறகு? 

மதுர... குலுங்கக் குலுங்க! 


'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த அரை நாளில் அழகிரியிடம் இருந்து மதுரை மீட்கப்படும்’ என்று மதுரையில் நின்று சபதம் போட்ட ஜெயலலிதா, அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை டெல்லியில் இருந்து தொடங்கினார். அழகிரி மீதான 59 வழக்குகளுக்கான ஆவணங்கள், தமிழக அரசிடம் இருந்து டெல்லி மேலிடத்துக்குத் தரப்பட்டு உள்ளன. அதில் 17 வழக்குகள் அழகிரி நேரடியாகச் சம்பந்தப்பட்டவை என்கிறார்கள். மற்ற வழக்குகள் அழகிரியின் பெயரைச் சொல்லிக்கொண்டு, அடியாட் கள் நடத்திய அராஜகங்கள். அழகிரி முதலமைச்சர் என்றால், 'பொட்டு’ சுரேஷ் துணை முதல்வர் என்பதில் தொடங்கி, 'அட்டாக்’ பாண்டி வரை அத்தனை பேர் பெயரையும் ஜெயலலிதா மேடையில் வாசித்தார். இந்த நபர்களை வளைக்க கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் சிறப்புப்  படை போடப்பட்டு உள்ளது. முதல் வழக்கில் 'அட்டாக்’ பாண்டி கைதாகிவிட்டார். மதுரை தினகரன் நாளிதழ் தாக்குதல் தொடங்கி... வெளிச்சத்துக்கு வராத காரியங்கள் வரை எல்லாமே ரத்த சரித்திரம். 'மொத்தத்தையும் மதுரையில் ஸ்பெஷல் கோர்ட் போட்டு விசாரிக் கலாமா?’ என்ற யோசனை யில் இருக்கிறார் ஜெ.. 

கொலை கொலையாய்...


ன்னும் மர்மமாக இருக் கும் சில மரணங்கள்,  தி.மு.க. அமைச்சர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருக்கின்றன. அதில் முக்கியமானது திருச்சி இரட்டைக் கொலை. ரியல் எஸ்டேட் புரோக்கர் சகோ தரர்களில் ஒருவர் விஷம் குடித்தும் இன்னொருவர் உயிரோடு எரிக்கப்பட்டும் கொல்லப்பட்ட விவகாரத் தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவருடைய தம்பி ராம ஜெயம் இருவர் பெயரும் பரவிக்கிடக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவராகச் சொல்லப்படும் திருச்சி மாவட்டத் தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்... கஞ்சா வழக்கில் கைதாகி உள்ளார். இன்னும் பல தி.மு.க-வினரையே சுற்றிச் சுற்றி விசாரிக்கிறது போலீஸ். திருச்சி எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், தனது சொந்தத் தொகுதி என்பதால், இந்தக் கொலையை சீரியஸாகப் பார்க்கிறார் ஜெ.சேலம் குப்புராஜ் குடும்பத்தில் ஆறு பேர் கொலையானதில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் பாரப்பட்டி சுரேஷ் கைதானார். அவரை ஜெயிலுக்குச் சென்று சந்தித்து, சர்ச்சையில் சிக்கினார் ஆறுமுகம். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இப்போது துரித விசாரணையில் இறங்கி இருக்கும் நிலையில், ஆறு பேர் கொல்லப்பட்ட வீடு மர்மமான முறையில் எரிக்கப்பட்டுள்ளது எதிர்பாராத திருப்பம். தடயங்களை மறைக்க நடந்ததாகவே இதை சி.பி.சி.ஐ.டி. பார்க்கிறது.முன்னாள் அமைச்சர் ஈரோடு என்.கே.கே.பி.ராஜா, சிவபாலன் என்பவரைத் தாக்கிய வழக்கில் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்தாலும், மேலே கொண்டுசெல்ல இன்றைய அரசு முயற்சிக்கிறது. தஞ்சைப் பகுதி தி.மு.க. மாவட்டச் செயலாளர் கொலையிலும் மர்மம் இன்னும் விடுபட வில்லை. இப்படிப் பல முடிச்சுகளை அவிழ்க்க அவசர உத்தரவுகள் போட்டு இருக்கிறார் ஜெ!


மந்திரி... தந்திரிகள்!


ருமானத்துக்கு அதிக மாக சொத்துச் சேர்த்த வழக்கு, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அமைச்சர்கள் கே.என். நேரு, துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள் ளிட்ட பலர் மீது போடப்பட்டது. அடுத்து, ஆட்சி மாறியது. விசாரணைகள் முடிந்து தீர்ப்பும் வந்து சிலர் விடுதலை ஆனார் கள். இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டப்போகின்றன. மேலும், 2006-11 ஆண்டு கால ஆட்சியிலும் இதுபோல் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தவர்கள் பட்டியலைத் தயாரிக்கச் சொல்லி இருக்கிறார் முதல்வர்.மெகா கல்லூரிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சாராய ஆலைகள், மணல் குவாரிகள், தொழிற்சாலைகள் எனப் பட்டவர்த்தனமாக உருவாக்கிக்கொண்ட 9 அமைச்சர்கள் மீது முதல் வரிசையில் வழக்குகள் போடப்பட உள்ளன. அதற்கான ரெய்டு நாட்கள் குறிக்கப்பட உள்ளன.

பினாமிகள் ஜாதகம்...

ருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பினாமிகள் பெயர்கொண்ட முதல் பட்டியல் தயாராகி உள்ளது. 100 கோடிக்கு மேல் சம்பாதித்தவர்கள் என்ற அடிப்படையில் தயாராகும் இந்தப் பட்டியலில், சென்னை, மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் பெயர்களும் அடக்கம்.தி.மு.க. வேஷம் போட ஆரம்பித்த கான்ட்ராக்டர்கள் முதல் இவர்களிடம் பணம் வாங்கி வட்டிக்குவிட்ட கோடீஸ்வர மார்வாடிகள் சிலர் வரை இந்தப் பட்டிய லில் வருகிறார்கள். தேர்தலுக்கு முந்தைய மாதத்திலேயே இவர்களில் சிலர் வெளி நாடுகளுக்குச் சென்று செட்டில் ஆகி விட்டார்கள். அறிவாலயத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்த நபர் ஒருவரும் இந்தப் பட்டியலில் வருகிறார். விரக்தியில் இருக்கும் தி.மு.க. புள்ளிகள் மூலமாகவே இவர்கள் ஜாதகம் திரட்டப்பட்டு வருகிறது!

பணப் பாதை அடைப்பு! 

திர்க் கட்சியாக இருக்கும்போதே ஜெயலலிதா கண்காணித்தது இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தைத்தான். கருணாநிதி முதல்முறை முதல்வராக இருந்த காலம் முதல் இன்று வரை அவருக்கும் இந்தக் குழுமத்துக்குமான தொடர்புகளை வெளிப்படையாக ஜெ. போட்டு உடைத்து வந்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத் தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியது முதல் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலமாகச் செய்வது வரை அனைத்துமே இந்த குரூப்தான் செய்து வருகிறது. ''அரசுப் பணம் இந்த குரூப் மூலமாக வெளியே போய்... மீண்டும் கருணாநிதி குடும்பத்துக்கு வருகிறது. அதைவைத்துத்தான் இவர்கள் படம் எடுக்கிறார்கள்'' என்றார் முதல்வர். எனவே ஜெ. செய்த முதல் காரியம், புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானத்தை நிறுத்தி விசாரணை கமிஷன் போட்டார். இனி இ.டி.ஏ-வுக்குப் போட்ட பணமும் கிடைக்காது. வர வேண்டியதும் வராது. கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு 750 கோடி வரை இதுவரை தரப்பட்டு வந்த பிரிமியம் இனி கிடைக்காது. இந்த ஒரு திட்டத்துக்காகவே அந்த நிறுவனம் வேலைக்கு எடுத்த 1,200 பேரை ஜூலை 6-ம் தேதி வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இவர்களைப்போலவே 'லம்ப்பாக’ லாபம் அடைந்த நிறுவனங்களைக் கண்டுபிடித்து பணப் பாதையை அடைக்க நினைக்கிறார் ஜெ.

லோக்கல் மனிதர்களுக்குக் கொக்கி! 
 
ந்திரிகள் வி.ஐ.பி-க்களைத் தாண்டி குறிப்பிட்ட ஏரியாவில் செல்வாக்காக இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அதிக ஆபத்தாக ஜெ. பார்க்கிறார். நிலபுலன்கள், கைவச கரன்சி மூலமாகக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்த இரண்டாம்  கட்ட மாவட்டப் பிரமுகர்கள்... அடுத்து வரும் ஆண்டுகளில் செல்வாக்குப் பெற்று, கட்சிப் பதவிகளைப் பிடிக்கப்போகிறார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில்கூட இவர்கள்தான் முக்கியப் பங்கு வகிப்பார்கள். இவர்கள் மீதான புகார்கள் தூசி தட்டப்படுகின்றன.'உங்கள் ஊர் லோக்கல் தி.மு.க. பொறுப்பாளர்கள் செய்யும் முறைகேடுகளை தலைமைக் கழகத்துக்கு எழுதுங்கள்’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஜெ. சொல்லி... மலையளவு கடிதங்கள் குவிந்தன. இந்தக் கடிதங்களை ஆதாரமாக வைத்து இவர்களுக்குக் கொக்கி போடப் போகிறார்கள்.
 
குடும்ப டார்கெட்! 


 டந்த முறை முதல்வராக வந்ததும்... ஒருநாள் நள்ளிரவில் கருணாநிதியைத் தூக்கியதுபோன்ற சம்பவம் இனி தேவை இல்லை என்று நினைக்கிறாராம் ஜெ. 
ஆனால், அவருடைய குடும்பப் பிரமுகர்கள் 10 பேருக்கு நிச்சயம் தலைவலி காத்து இருக்கிறதாம். ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கலாநிதி மாறன், அழகிரியின் மருமகன்களான வெங்கடேசன், விவேக், ஸ்டாலின் மகன் உதயநிதி, அழகிரி மகன் துரை தயாநிதி... என்று பெயர்களும் சொல்லப்படுகின்றன. இதில் இடம் பெற்ற கனிமொழி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி, சிறையில் இருக்கிறார். தயாநிதியும் சர்ச்சைச் சுழலில் சிக்கிவிட்டார். மீதியுள்ள எட்டு பேருக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளனவாம்.

வளைக்கப்பட்ட மண்ணும் மனிதனும்... 

 தி.மு.க-வை முடக்க ஜெ. கண்டுபிடித்த அபார வழிதான், நில மோசடி வழக்குகள். போலீஸ், வருவாய் மற்றும் பத்திரப் பதிவு அதிகாரிகள், உள்ளூர் ரவுடிகள் மூவரையும் துணைக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் தட்டிப்பறிக்கப்பட்ட நிலங்கள் ஏராளம். அதிகாரத்தில் இருப்பதால் புகார் சொல்ல முடியாமல் தவித்தவர்கள், ஆளும் கட்சி மாறியதும் துணிச்சலாக வெளியில் வந்தார்கள். மே 13 முதல் ஜூலை 1-ம் தேதி வரை மட்டும் தமிழகம் முழுவதும் 1,449 புகார்கள் வந்தன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் தி.மு.க. பிரமுகர்கள். இந்த நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கவே சிறப்புப் பிரிவைப் போட்டுவிட்டார் ஜெ. 'நிலம் அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நிலத்தை இழந்தவர்களுக்கு நிலம் கிடைக்கும்’ என்று கொடுத்த வாக்குறுதி, பலருக்கும் பால் வார்த்தது. தி.மு.க-வினருக்கோ வேர்த்தது. கோவை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஆனந்தன், திருச்சி கோ.அபிஷேகபுரம் அறிவுடை நம்பி தொடங்கி, கொடைக்கானல் நகர சபைத் தலைவர் முகமது இப்ராஹிம் என கைதுப் பட்டியல் நீள்கிறது. தி.மு.க-வினர் கதறலை அதிகப்படுத்தி இருப்பதும் இது தான்.

வதந்திகளை நம்புங்கள்! 

 புருக்குள் கல்லைப் போட்டால், உள்ளே இருக்கும் பூச்சிகள் எல்லாம் வெளியே வரும் என்பார்கள். அது மாதிரியே... இவரைக் கைது பண்ணப் போறோம்... அவரை அமுக்கப்போறோம்... என்பது மாதிரியான வதந்திகளைக் கிளப்பிவிட்டு, அதனால் வெளியே வரும் தகவல்களை ரிக்கார்டு செய்ய ஆரம்பித்து உள்ளது போலீஸ்.தி.மு.க. புள்ளிகளைச் சுற்றி வந்த கரும்புள்ளிகள் அத்தனை பேரைப்பற்றியும் இப்படிப்பட்ட வதந்திகள் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதனால் அவர்கள் திகிலடைந்து இருக்கிறார்கள்.அறிவாலயத்துக்கும் கருணாநிதிக்கும் 'கைது’ வதந்திகள்தான் அதிகமாக வருகின்றன. இதைக் கேள்விப்பட்டு சூடான கருணாநிதி,  'தி.மு.க. வக்கீல்கள் என்ன ஆனார்கள்?’ 'வழக்கறிஞர் அணி என்ற ஒன்று இருக்கிறதா?’ என்று கொந்தளித்துள்ளார்.ஆளும் கட்சியாக இருக்கும்போது கான்ட்ராக்டர்கள் அணியை மட்டும் நம்பினால், எதிர்க் கட்சியாக ஆகும்போது வக்கீல் அணியைத்தான் நாட வேண்டி இருக்கும்!

விகடன் 

No comments:

Post a Comment