Search This Blog

Tuesday, July 19, 2011

இருசக்கர வாகன ஓட்டிகளின் அல்லல் தீர...

 
நாள்தோறும் பெருகும் இருசக்கர வாகனங்களை, மாநிலம் முழுவதும் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், தங்களுடைய வாகனங்களுக்குரிய ஆவணங்களை முறைப்படுத்த முடியாமல், அடிக்கடி அபராதம் கட்டி அவதியடைந்து வருகின்றனர்.இருசக்கர வாகனத்தை சாலையில் ஓட்ட, சாலைவரி, காப்பீடு, ஓட்டுநர் உரிமம், புகை பரிசோதனை, முன்பக்க விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுதல் உள்ளிட்டவைகள் அவசியம்.
 
இத்தகைய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டுதல்,அதிவேகமாக ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக காவல் துறை அதிகாரிகளிடம் பலமுறை சிக்கிக்கொண்டு, அபராதம் கட்டுவதோடு அல்லல்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ள வாகன ஓட்டிகள் ஏராளம்.காவல் துறையினர் சமூக அக்கறையில் வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனரா அல்லது தினந்தோறும் மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு எண்ணிக்கையில் கணக்கு சொல்வதற்காகவா என்பது ஒருபுறம் இருந்தாலும், அபராதம் விதித்தல் மட்டுமே, வாகன ஆவணங்களைச் சரிப்படுத்த உதவாது.
 
 
நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்துவதே அதற்கு உதவும் என்பதை அரசு அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.சோதனையிடும் இடத்தில் முகவரியை மாற்றிக்கொடுத்து விட்டுச் செல்லும் சிலரால், பின்பு அபராதத் தொகையை அந்தக் காவல் துறை அதிகாரிகளே கட்டவேண்டிய இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.எனவே, அபராதம் வசூலிப்பதை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல், உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகள், உடனடியாக அவற்றைப் பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு கூட்டு முயற்சி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
 
வாகன ஓட்டிகளுக்கு இருக்கும் பிரச்னைகள்: இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி வாகனங்களை மாற்றுவதால்,ஆர்.சி. புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்ய விரும்புவதில்லை.காப்பீடு செய்ய முகவரை நாட வேண்டியுள்ளது. அலுவலகத்தில் சென்று காப்பீடு செய்ய வேண்டுமானால் வாகனத்தை நேரில்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஒருநாள் வேலை பாதிக்கப்படுகிறது.இதேபோன்று ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமானால், பழகுநர் உரிமம் பெற ஒருநாள், நிரந்தர உரிமம் பெற ஒரு நாள் என இரண்டு நாள்கள் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. அதோடு எட்டு போட்டால்தான் உரிமம் வழங்குவார்கள் என்கிற அச்சம் கிராம மக்களிடம் அதிகம் உள்ளது.   
 
 
மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணிகள் என்றாலே இடைத்தரகர்களைத்தான் நாடவேண்டிய கட்டாயம் நடைமுறையில் நிலவி வருகிறது. இதனால் கூடுதல் செலவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஆவணங்களைப் பெறுவதில் பலர் தவறி விடுகின்றனர்.அதிகாரிகளிடம் சோதனையில் சிக்கும் ஒவ்வொரு முறையும், எவ்வளவு தொகையாயினும் அபராதம் கட்டும் வாகன ஓட்டிகள், வேலை இழப்பு ஏற்படுதல் மற்றும் கடினமான நடைமுறைகளாலேயே ஆவணங்களை முறைப்படுத்தாமல் விட்டு விடுகின்றனர்.
 
போதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது சரியான நடவடிக்கைதான் என்றாலும்,மதுக்கடையுடன் மதுக்கூடத்தையும் ஒருங்கே அமைத்துவிட்டு, பின்பு போதையுடன் வாகனத்தை ஓட்டினார் என்று வழக்குப் பதிவது எந்த விதத்தில் நியாயம்?காவல் துறையினர், காப்பீட்டு நிறுவனங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் ஆகியன இணைந்து செயல்படுவதன் மூலமே இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காணமுடியும்.  
 
இத்துறையினர் இணைந்து, போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய நகரங்களில் மாதந்தோறும் முகாமிட வேண்டும். முகாமில் உடனடி காப்பீடு வழங்குதல், பழகுநர் உரிமம் மற்றும் நிரந்தர உரிமம் வழங்குதல், புகை பரிசோதனை செய்தல் உள்ளிட்டவைகளை நடைமுறைப்படுத்தினால், அனைத்து வாகன ஓட்டிகளின் ஆவணங்களும் முறைப்படுத்தப்பட்டுவிடும். மேலும் மதுக்கூடத்தை அறவே அகற்ற அரசு நடவடிக்கை எடுத்தால் போதையுடன் வாகனம் ஓட்டுவதும் குறையும். 
 
வை. ராமச்சந்திரன் 

No comments:

Post a Comment