Search This Blog

Sunday, July 03, 2011

குழப்பமே உன் பெயர்தான் வரியா? , அரசு உத்தரவு... அலறும் மக்கள்


ருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றாலே நம்மில் பலரும் பள்ளிக்கூடத்து குழந்தைகள் மாதிரி அழுவார்கள். வருடத்துக்கு ஒருமுறை அத்தனை ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு ஆடிட்டரிடம் போய், கணக்குக் காட்டி முடிப்பதற்குள் பலருக்கும் தலை கிறுகிறுத்துவிடும்.

இதுமாதிரி நினைக்கிறவர்களின் காதுகளுக்கு தேன் பாய்ச்சுகிற ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு. 'உங்கள் வரிக்கு உட்பட்ட  வருமானம் ஐந்து லட்ச ரூபாய்க்குள் இருக்கும் பட்சத்தில், இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை’ என்பதே அது. மத்திய நேரடி வரி வாரியத்தின் இந்த அறிவிப்பின்படி முடிந்த 2010-11-ம் நிதி ஆண்டில் (வரி கணக்கீட்டு ஆண்டு 2011-12) வரிக்கு உட்பட்ட வருமானம் ஐந்து லட்ச ரூபாய்க்குள் இருந்தால் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தேவையில்லை.

ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானத்தைக் கணக்கிடுவதற்கு முன் வரித் தள்ளுபடிகள் மற்றும் முதலீட்டுச் சலுகை கள் இருக்கின்றன. வருமான வரிச் சட்டம் 80-சி பிரிவின் கீழ் பி.எஃப்., பி.பி.எஃப்., ஆயுள் காப்பீடு பிரீமியம், வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் அசல், இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட், குழந்தைகளின் கல்விக் கட்டணம் போன்றவற்றுக்கு வரிச் சலுகை இருக்கிறது. மேலும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் 15,000-20,000 ரூபாய். வீட்டுக் கடனுக்கான வட்டி 1.5 லட்ச ரூபாய்க்கும் வரித் தள்ளுபடி இருக்கிறது. மேலே குறிப்பிட்டிருக்கும் முக்கிய முதலீடு மற்றும் செலவுகள் எல்லாம் சேர்த்தால் மொத்த வருமானம் சுமார் 7.5 லட்ச ரூபாய் இருந்தால்கூட, ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் ஐந்து லட்ச ரூபாய்க்குள் வந்துவிடும் என்பதால் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியது இருக்காது.  


ரிட்டர்ன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கும் மத்திய அரசு, முக்கிய நிபந்தனை ஒன்றையும் போட்டிருக்கிறது. அதாவது, வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் ஒரு நிதி ஆண்டில் பெறப்படும் வட்டி 10,000 ரூபாய்க்குள் இருந்தால் அதை மொத்த வருமானத்தோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவரத்தை பணிபுரியும் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அதற்கு வரிகட்ட வேண்டியிருந்தால் வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்.) செய்து அரசுக்கு கட்டிவிடுவார்கள். இந்த டி.டி.எஸ். விவரம் ஃபார்ம் 16-ல் குறிப்பிடப்படும். இதற்கு பணியாளர் அவரின் பான் எண்ணை பணிபுரியும் நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும். ஃபார்ம் 16-தான் வருமான வரி கணக்குக்கான ஆதாரம் என்பதால் அதனை நிறுவனத்திடம் கேட்டு வாங்கிக் கொள்வது அவசியம்.

வரிக்கு உட்பட்ட வருமானம் ஐந்து லட்ச ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும் வேறு சில காரணங்களுக்காக வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:
  1. அதிகமாகக் கட்டிய வரியைத் திரும்பப் பெற வேண்டும் (ரீஃபண்ட்) எனில்..!
  2. பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து ஃபார்ம் 16-ஐ பெறவில்லை எனில்..!
  3. பணியாளர் ஒருவர், ஒரு நிதி ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை பார்க்கும் பட்சத்தில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிதி ஆண்டில் சம்பாதித்த மொத்த வருமானத்தை குறிப்பிட்டு ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்!
  4. ஒரு நிதி ஆண்டில் வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் கிடைக்கும் வட்டி 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால்..!
  5. வரி பிடிப்பதற்காக வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி வருமான விவரத்தை பணிபுரியும் நிறுவனத்திடம் கொடுக்காதவர்கள்..!
  6. பங்குகள், ஃபண்டுகள், மனை, வீடு, தங்கம் போன்றவற்றின் விற்பனை மூலமான மூலதன ஆதாயம் இருக்கும் பட்சத்தில் வரி கட்ட வேண்டியதில்லை என்றாலும் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்!
  7. வீட்டு வாடகை வருமானம், பிஸினஸ் அல்லது தொழில் மூலமான வருமானம் இருந்தால் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.  
  8. வரிக் கணக்கு விவரம் தாக்கல் செய்யச் சொல்லி வருமான வரித் துறையினரால் ஏற்கெனவே நோட்டீஸ் பெற்றவர்கள், கட்டாயம் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

2011-12-க்கு (வரிக் கணக்கீட்டு ஆண்டு) முந்தைய ஆண்டுகளுக்கு வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியவர்கள்..!

''இந்த அறிவிப்பு அதிகம் பேருக்கு பலன் தராது என்றே சொல்ல வேண்டும்'' என்கிறார்கள் பெரும்பாலான ஆடிட்டர்கள். அவர்கள் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பதையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.'அனைத்துப் பணியாளர்களும் பணிபுரியும் நிறுவனத்திடம் சேமிப்புக் கணக்கு வட்டி விவரத்தை தெரிவிப்பார்கள் என்று சொல்ல முடியாது. மேலும், பெரும்பாலோருக்கு பல வங்கிகளில் சேமிப்புக் கணக்கு இருக்கும். அந்த வருமானத்தை எல்லாம் சேர்த்து மொத்தமாகக் கொடுப்பது என்பது சற்று கடினமான காரியமாக இருக்கும்.மேலும், பல நிறுவனங்களில் ஏற்கெனவே பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இதில் பணியாளர்களின் வங்கிச் சேமிப்பு வட்டி விவரத்தை சேர்த்து ஃபார்ம்-16 தயாரிப்பது, அரசுக்கு வரி கட்டுவது என்பது கூடுதல் பணிச் சுமையை ஏற்படுத்தும் '' என்றார்கள்.

ஒருவருக்கு வீட்டு வாடகை, மூலதன ஆதாய வரி இப்படி ஏதாவது ஒன்று ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நிச்சயம் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அரசு இந்த புதிய உத்தரவை இன்னும் எளிமைப்படுத்தி னால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment