Search This Blog

Sunday, July 31, 2011

தங்கம் - பத்து கிராம் 25,000 ரூபாய்! - அதிர்ச்சியான ரிப்போர்ட்


''வரும் தீபாவளிக்குள் பத்து கிராம் தங்கத்தின் விலை இருபத்தைந்தாயிரத்தை தொட்டால் ஆச்சரியமில்லை!''-இப்படி ஒரு தகவல் மார்க்கெட்டில் பரவி பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கடந்த ஏழு மாதங்களில் 10 கிராம் தங்கம் 2,486 ரூபாய் உயர்ந்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டில் 6,439 ரூபாய் அதிகரித்து, பலரையும் ஏக்கப் பெருமூச்சுவிட வைத்திருக்கிறது. 


இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் முடிய பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் அடுத்தடுத்து வரும். முதலில் ஓணம், பிறகு தீபாவளி, அதன் பிறகு பொங்கல் என வரிசையாக வரும் பண்டிகை நாட்களின்போது தங்கம் வாங்குவது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. தவிர, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுக்கவே நிறைய திருமணங்கள் நடக்கும். நகைநட்டு இல்லாத திருமணங்களா! எனவே, அடுத்த மூன்று மாதங்களில் விலை 25,000 ரூபாயை எட்ட நிறையவே வாய்ப்பிருக்கிறது''

காரணம்

தங்கத்தின் விலை முன்பு மாதிரி ஒரே காரணத்தைக் கொண்டு தீர்மானிக்கப் படுவதாக இல்லை. அன்றைய தினத்தில் உலக அளவில் என்ன நடக்கிறதோ, அதைப் பொறுத்தே  விலையில்  ஏற்றம், இறக்கம் இருக்கிறது. அதனால் இந்த காரணத்திற்காகத்தான் விலை ஏறுகிறது என்று யாராலும் தெளிவாக யூகிக்க முடிவதில்லை.


ஒரு பொருளின் விலை தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகள் உயராது. ஆனால், தங்கத்தின் விலை கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் டெக்னிக்கலாக ஒரு விலை இறக்கம் வரவேண்டும். ஆனால், அந்த இறக்கம் தற்போது வராததற்குக் காரணம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்னைகளே! இந்த நாடுகளில் அரசு பாண்டு பத்திரங்களில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர் களுக்கு அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு அமெரிக்க அரசிடம் தற்போது பணம் இல்லை. இப்படி ஒரு நிலை அமெரிக்காவில் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும். புதிதாகப் பணத்தை அச்சடித்து வெளியிட்டால் டாலரின் மதிப்பு குறையும். அப்படி வெளியிடாவிட்டால் அமெரிக்க பொருளாதாரம் நொடிந்து போகும். அப்படி நொடிந்து போனால் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடையும். இதற்குப் பயந்தே பலரும் கையிலிருக்கும் டாலரை விற்று, தங்கத்தை வாங்குகிறார்கள். இதனால்தான் இப்போது தங்கத்தின் விலை ஏறுகிறது. 

பொதுவாக, உலகளவில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தங்கத்தின் தேவை குறைவாக இருக்கும். இதனால் விலையும் இந்த மாதங்களில் குறைவாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில்தான் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது! இப்படி புதுப்புது காரணங்களால் விலை உயர்ந்து, முந்தைய  காலங்களில் இருந்த நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இப்போதைய சூழ்நிலை யில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டு கடன் பிரச்னை சரியாகும் என்றால், தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த பிரச்னைகள் ஓர் இரவில் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. இன்றைய நிலையில் அமெரிக்க பிரச்னைகூட சரியாகிவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஐரோப்பிய கடன் பிரச்னை இப்போது தீர வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அமெரிக்க பிரச்னை சரியாகி டாலரின் மதிப்பு அதிகரித்து, ரூபாய் மதிப்பு குறையுமெனில் தங்கம் விலை குறைய வாய்ப்பி ருக்கிறது. அப்படி குறைந்தால் பத்து கிராம் தங்கத்தின் விலை 21,500 ரூபாய்க்குப் போக வாய்ப்பிருக்கிறது. ஆனால், பொருளாதாரப் பிரச்னை தொடர்ந்து இருந்து, நிலைமை இன்னும் மோசமாகும் பட்சத்தில் விலை அதிகரித்து 24,500 ரூபாய்க்கு மேல் போக வாய்ப்பிருக்கிறது.


ஞானசேகர் 
காம்டிரெண்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சர்வீஸஸ்
மும்பை

1 comment:

  1. நல்ல பதிவு.
    இனி மேல் எழுதித் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் போலும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete