Search This Blog

Thursday, June 23, 2011

சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா?

ழல் அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவோரின் சொர்க்கம்...  சுவிட்சர்லாந்து.  காரணம், வங்கி ரகசியத்தைப் பாதுகாக்கும் அந்த நாட்டின் சட்டம்!

 யார் யார் எல்லாம் சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம்?

எந்த நாட்டைச் சேர்ந்தவரும், சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம். ஆனால், 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். தற்போது 101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கி இருக்கிறார்கள்.நம் ஊரில் அடையாளம், இருப்பிடச் சான்று மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் விண்ணப்பத் தைப் பூர்த்திசெய்து கொடுத்து வங்கிக் கணக்கு தொடங்குவதுபோல, சுவிஸ் நாட்டில் தொடங்குவது அவ்வளவு எளிதல்ல. புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பில் வங்கிகள் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் பெயருக்குத்தான். பல கோடிகளைக் கொட்டும் நபருக்கு இந்தக் கெடுபிடிகள் எதுவும் இல்லை. புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கிக் கொடுப்பதற்காகவே, நிறைய நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன என்று கூறுகிறார்கள் 'அனுபவஸ்தர்கள்’.


''வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு முன்னர் வங்கி சேவையில் உங்களுக்கு உள்ள தேவைகள், உங்கள் பணம்பற்றிய தகவல், அடுத்த 12 மாதங்களில் எவ்வளவு பணம் முதலீடு செய்வீர்கள் என்பதுபோன்ற விவரங்களை அளிக்க வேண்டும். கணக்கு தொடங்க உங்களது பாஸ்போர்ட் போதுமானது. தபால் மூலம் அனுப்பி கணக்கு தொடங்க வேண்டி இருந்தால், உங்களுக்கு வங்கிக் கணக்கை ஆரம்பித்துக் கொடுக்கும் நிறுவனத்துக்கு பாஸ்போர்ட் நகலை அனுப்பினால் போதும். மேலும், உங்கள் இருப்பிடத்தை
உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, சமீபத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி ரசீது போன்றவற்றில் ஒன்றைக் கொடுக்கலாம். உங்கள் பொருளாதாரப் பின்னணி மற்றும் பணம் வரும் பின்னணிபற்றிய ஆவணங்களை அளிக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். நேரில் சென்று கணக்கு தொடங்குவதாக இருந்தால்,  மூன்று மணி நேரத்தில் முடித்துவிடலாம்'' என்கிறார்கள் அவர்கள்.

வங்கிக் கணக்கு தொடங்கக் குறைந்தபட்ச டெபாசிட் இவ்வளவு இருக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. 500 சுவிஸ் பிராங்க் இருந்தாலே வங்கிக் கணக்கைத் தொடங்கிவிடலாம். ஆனால், சில வங்கிகள் மட்டும் தொகையைக் கொஞ்சம் அதிகம் எதிர்பார்க்கின்றன. குறைந்தபட்சம் எவ்வளவு தெரியுமா? 10 லட்சம் சுவிஸ் ப்ராங். நம் ஊர் பணத்துக்குக் கிட்டத்தட்ட ரூ.53 கோடி!

சுவிஸ் வங்கி கணக்கு தொடங்க எவ்வளவு நாள் ஆகும்?

தபால் மூலம் கணக்கு தொடங்குவதாக இருந்தால், குறைந்தது 10 நாட்கள் ஆகும். இதற்கு முதலில் வங்கிக் கணக்கு தொடங்க உதவும் நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு அவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர், அவர்கள் விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்பிவைப்பார்கள். அதில் நீங்கள் கையெழுத்திட்டு, தகுந்த ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டும். அதை அந்த நிறுவனம் நீங்கள் விரும்பும் வங்கியில் கொடுப்பார்கள். நீங்கள் கணக்கு தொடங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ள, வங்கி தனியாக ஒரு கடிதம் அனுப்பும். அதை நீங்கள் நேரடியாக வங்கிக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு, வங்கி உங்களுடைய கணக்கை ஆரம்பிக்கும்.

பணத்தை எப்படி டெபாசிட் செய்வது?

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி தேர்ட் பார்ட்டி பேமென்ட் ப்ராசஸர் பணத்தை டெபாசிட் செய்யலாம். இதனால், பணத்தை யார் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியாது. இது தவிர, மணி ஆர்டர், பர்சனல் செக் போன்ற முறைகளையும் கையாளலாம்.

இந்தியாவில் கிளை உள்ளதா?

சுவிஸ் வங்கிக்கு எந்த நாட்டிலும் கிளைகள் இல்லை!

சுவிஸ் வங்கி ஏன் பிரபலமாக உள்ளது?

சுவிட்சர்லாந்து 1505-ம் ஆண்டு முதல் எந்த நாட்டுடனும் போரிடுவது இல்லை என்பதால், அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கிறது. சுவிஸ் தன்னுடைய பணப் பரிமாற்றத்துக்கு தங்கத்தைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. அதனால், உலக அளவில் மிகவும் நிலையான மதிப்பைக்கொண்ட பணமாக சுவிஸ் பணம் கருதப்படுகிறது. இன்டர்நெட் பேங்கிங், சுலபமான முதலீட்டு முறைகள் போன்ற சிறப்பான வங்கி சேவை, கிரிமினலாக இல்லாதவரை உங்களைப்பற்றிய தகவல் வெளியே போக வாய்ப்பே இல்லாத சூழல் ஆகிய காரணங்களால் அனைவராலும் சுவிஸ் வங்கிக் கணக்கு பெரிதும் விரும்பப்படுகிறது.

வாடிக்கையாளர் இறந்துவிட்டால், கணக்கு என்ன ஆகும்?

அவரது வாரிசுதாரருக்குப் பணம் கிடைக்கும். ஆனால், அவர்தான் வாரிசுதாரர் என்று நிரூபிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. பிரபல தலைவரோ, நடிகராகவோ இருந்து இறந்தால், அது அங்கு உள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். சம்பந்தப்பட்ட வங்கிக்கு எளிதில் அது தெரிந்துவிடும். மற்றபடி அவர்களுக்கு வங்கிக் கணக்கு உள்ள நபரின் இறப்பு தெரியப்போவது இல்லை. எனவே, வாரிசுதாரர் 10 ஆண்டுகளுக்குள் வந்து, தான்தான் சட்டபூர்வ வாரிசு என்று நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால், 10-வது ஆண்டின் முடிவில் அந்தக் கணக்கு செயலற்றதாகிவிடும்!ஆனால், இந்தப் பிரச்னைகள் எல்லாம் வராமல் இருக்க, வாரிசுகளிடம் சுவிஸ் வங்கிக் கணக்குபற்றிய விவரத்தைத் தெரிவிக்கும்படியும், அல்லது தன் மரணத்துக்குப் பிறகு வாரிசுதாரர் படிப்பதற்கு என்று ஒட்டப்பட்ட உறையில் எல்லா விவரங்களையும் எழுதி வைக்கும்படியும் தன்னுடைய வாடிக்கையாளர்களை சுவிஸ் வங்கி அறிவுறுத்துகிறது.

வங்கிக் கணக்கை ரத்து செய்ய முடியுமா?

எப்போது வேண்டுமானாலும் வங்கிக் கணக்கை ரத்து செய்துகொள்ள முடியும். அதிக அளவில் பணம் முதலீடு செய்யப்பட்டு இருந்தால், அதை எடுக்க ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படும். மற்றபடி எந்தச் செலவும் இன்றி சுவிஸ் வங்கிக் கணக்கை ரத்து செய்துகொள்ளலாம்!  
   
விகடன்  

No comments:

Post a Comment