Search This Blog

Saturday, June 25, 2011

அண்ணாவின் போராட்டம்...அம்மாவின் ஆட்டம்.....ஓ பக்கங்கள், ஞாநி


அண்ணாவின் போராட்டம்...

மறுபடியும் உண்ணாவிரதப் போராட்டம்தான் என்று அண்ணா ஹசாரே அறிவித்துவிட்டார். சென்ற முறை அவர் உண்ணாவிரதமிருந்த போது ஆங்கில டி.வி.சேனல்கள் உருவாக்கிய எழுச்சியை இந்தமுறை உருவாக்கவும் முடியாது. அவை செய்யப்போவதும் இல்லை. வேறு ஏதாவது புதுமையாகப் பரபரப்பாக நடந்தால் தான் அவை கவனிக்கும்.உண்ணாவிரதப் போராட்டம் என்ற வடிவமே செத்துப் போய் பல காலமாகிவிட்டது. சரியாகச் சொல்லப்போனால், காந்தியோடு அதுவும் செத்துவிட்டது. காந்தியின் உண்ணா விரதங்களை இப்போதைய உண்ணாவிரதங்களோடு ஒப்பிடுவதோ, ஒரே வகைப்படுத்துவதோ நியாயமே இல்லை

 காந்தி தம் உண்ணாவிரதங்களை வேறு யாருக்கோ எதிரான போராட்டமாக முன் நிறுத்தவில்லை. தம் கருத்தை ஆட்சியாளர்களோ, தம் கட்சியினரோ ஏற்காதபோது, தம் கருத்தைத் தெரிவிப்பதில் தம்மிடம்தான் ஏதோ பிழையிருக்கிறது என்று அவர் கருதினார். தம்மை சுயவிமர்சனம் செய்து கொள்ளவும், தம்மை தம் கருத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளவும் உண்ணாவிரதம் இருப்பதாகவே அவர் பலமுறை தெரிவித்திருக்கிறார். தம்மைத்தாமே வருத்திக் கொள்வதன் மூலம் மேலும் கருத்துத் தெளிவும் மன உறுதியும் அடைய முடியுமென்று அவர் நம்பினார்.

இப்போதைய உண்ணாவிரதங்கள் எல்லாம் ஒருவிதத்தில் மிரட்டல்கள்தான். தன்னைத்தானே உறுதி செய்வதற்கானவை அல்ல. ஐரம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் மட்டுமே கொஞ்சம் வேறுபட்டதாகத் தோன்றுகிறது.  எப்படி இன்றைய உண்ணாவிரதிகள் யாரும் காந்தி போன்றவர்கள் இல்லையோ, இன்றைய ஆட்சியாளர்களும் அவர் காலத்து ஆட்சியாளர்கள் போன்றவர்கள் அல்ல. உண்ணாவிரதம் இருந்து ஒருவர் செத்துப் போவதைப்பற்றித் துளியும் கவலைப்படாத மனமுடையவர்களாகவே ஆட்சியாளர்கள் கடந்த 60 வருடங்களாகக் காணப்படுகிறார்கள். ஆந்திரத்தில் பொட்டி ஸ்ரீராமுலு, ஈழத்தில் திலீபன், அண்மையில் ஹரித்வாரில் சுவாமி நிகமானந்தா ஆகியோர் சாகவிடப்பட்டார்கள். பல்வேறு தொழிற்சங்கங்கள் அவ்வப்போது கோரிக்கைகளுக்காக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கின்றன. யாரும் அதைக் கண்டுகொள்வதே இல்லை. ஈழத் தமிழர்களுக்காகச் சில மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த சாதனையைக் கருணாநிதி செய்திருக்கிறார். 

காந்தியின் உண்ணாவிரதப் போராட்ட வடிவம் மிகக் கடுமையாக இழிவுபடுத்தப் பட்டுவிட்டது. எனவே உண்ணாவிரதத்துக்கு பதிலாக மக்களைத் திரட்டும் வேறு வடிவங்களைப் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும். மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வோட்டு என்ற ஒற்றை அதிகாரம் இன்னமும் மக்களிடம் இருக்கிறது. சரியான பிரதிநிதிகளைத் தேர்வு செய்யாததால் வரும் விளைவுகளையே மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வேறு தீர்வுகள் தேடுவதில் அர்த்தமில்லை. சரியான பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதுதான் ஒரே தீர்வு.லோக்பால் சட்டம் நிறைவேறி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. இன்னொரு அதிகார மையத்தை உருவாக்குவதில்தான் அது முடியும். லோக்பாலாக யார் நியமிக்கப்படுவார், லோக்பால் குழுவாக யார் இடம் பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம்தான் அதாவது அரசியல் கட்சிகளிடம்தான் இருக்கும் என்பதை ஏற்கமுடியாது என்று அண்ணா ஹசாரே குழுவினர் சொல்லுகிறார்கள். அப்படியானால் வேறு யார் நியமிப்பது? பாராளுமன்ற ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளிடம்தான் அதிகாரமும் பொறுப்பும் தரமுடியும். சரியான பிரதிநிதிகளைத் தேர்தலில் அனுப்பி வைப்பது மக்களுடைய பொறுப்பு. 

இப்போதுள்ள சட்டங்களும் நீதித்துறையும் எல்லா ஊழல்களையும் முறை கேடுகளையும் விசாரித்து தண்டிக்கப் போது மானவைதான். ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்துக் கொள்வோம். தனியார் கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் முதல் இருபெரும் தி.மு.க. பிரமுகர்கள் வரை வழக்கின் முதல் கட்டத்திலேயே சிறையில் இருக்கிறார்கள். இது எப்படி நடந்தது? ஆயிரக்கணக்கில் மக்கள் குண்டு வீச்சில் செத்துக் கொண்டிருந்தபோது, மத்திய அரசை நிர்ப்பந்திப்பதற்காக ஒரு முறை கூட தில்லி செல்லாத கருணாநிதி, இப்போது மாதாமாதம் தில்லி சிறைக்குப் போய்வரும் நிலையை ஏற்படுத்தியது எது?  இதற்காக எந்தப் புதிய சட்டமும் போடப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் சட்டங்களின் அடிப்படையில்தான் நீதிபதிகள் உத்தரவு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

எனவே நமது அசல் பிரச்னை சட்டங்கள் போதாமை அல்ல. இருக்கும் போதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய மனிதர்கள் அதற்கான பொறுப்புகளில் இல்லாததுதான். ஓரிரு இடங்களில் சரியான மனிதர்கள் வரும்போது சட்டங்களின் முழு வீச்சும் கிடைக்கிறது.எனவே சர்வ அதிகாரம் உடைய ஒரு புதிய லோக்பாலை உருவாக்குவதைவிட முக்கியமானது, ஏற்கெனவே இருக்கும் அதிகாரப் பதவிகளில் எப்படிப்பட்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை சரி செய்வதுதான். விஜிலன்ஸ் கமிஷனராக விட்டல் இருந்தபோது செயல்பட்டதற்கும் தாமஸ் வரும்போது செயல்படுவதற்கும் இருக்கும் வித்தியாசம் தான் முக்கியமானது.எனவே இப்படிப்பட்ட நியமனங்களைச் செய்யும் நடைமுறையில் மாற்றங்களுக்காக நாம் போராட வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில், நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் பதவிகளுக்கான நியமனங்கள் எல்லாம் நாடாளுமன்றத்தின் சர்வகட்சி உறுப்பினர்களின் பொது விசாரணைக்குப் பிறகே செய்யப்படுகின்றன. ஒரு நீதிபதி கீழ் கோர்ட்டில் கொடுத்த தீர்ப்புகள் முதல் அவரது சமூகப் பார்வை வரை எல்லாம் அந்த விசாரணையில் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. 

நீதிபதிகள் முதல் துணை வேந்தர்கள், அரசு வக்கீல்கள் வரை அப்படிப்பட்ட வழிமுறைகளின்படியே நியமிக்கப்பட வேண்டும் என்பதற்கான சட்டத் திருத்தங்களுக்காகவே போராட வேண்டும். ஒரு கல்கி அவதாரம், ஒரு மகாத்மா காந்தி, ஒரு ஏசு கிறிஸ்து போல நம்மை உய்விக்க வருபவர் லோக்பால் என்ற மாயையைக் கைவிடவேண்டும்.

 அம்மாவின் ஆட்டம்.....

ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் கூட ஆகாத நிலையில் ஜெயலலிதா ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கக் கொஞ்சம் காத்திருக்கலாம் என்றே முதலில் நினைத்தேன்.கருணாநிதி அரைகுறையாகக் கட்டிய ‘தண்ணீர் தொட்டி’க் கட்டடத்தைக் கைவிட்டது, கிராம ஏழைகளுக்கு வீடு கட்ட பணம் தருவதாகச் சொல்லி அவர்களை மேலும் கடனாளியாக்கிய வீட்டு வசதித் திட்டத்தை மாற்றியது, தனியார் நிறுவன லாபத்துக்காக நடத்தப்பட்ட மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தை மாற்றுவது, ஏழைகளுக்கு என்று ஆரம்பித்து எல்லாருக்குமாக ஆக்கப்பட்ட அபத்தமான இலவச டி.வி. திட்டத்தை நிறுத்தியது எல்லாம் எனக்கு உடன்பாடானவைதான். மாற்றுத் திட்டங்கள் எப்படிப்பட்டவை என்று அவை வந்ததும்தான் விமர்சிக்க முடியும். பிரம்மாண்டமான அரசு விழாக்கள் நடத்த ஆரம்பிக்காமலிருப்பது, தான் செல்லும்போது போக்குவரத்தை சீர்குலைக்காமல் இருப்பது எல்லாம் பாராட்டுக்குரியவை.

பள்ளிக் கல்விக் கட்டணம் தொடர்பாக பெற்றோர், கல்வி நிறுவனங்கள் இரு சாராருக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் கல்விக் கட்டண நிர்ணயக்குழு விவகாரம் கருணாநிதியின் குளறுபடி. நீதிபதி கோவிந்தராஜன், நீதிபதி ரவிராஜ பாண்டியன் இரு குழுக்களுமே கருணாநிதி ஏற்படுத்தியவை. ஜெயலலிதா தம் பங்குக்கு இனி இன்னொரு குழுவை நியமித்துக் குழப்பலாம்.என்னால் புதிய ஆட்சியிடம் சகித்துக் கொள்ளமுடியாமல் இருப்பது, சமச்சீர் கல்வி விஷயத்தைக் கையாளத் தெரியாமல் போட்டுக் குழப்பி, குழந்தைகளையும் பெற்றோரையும் பள்ளிகளையும் சிக்கலில் ஆழ்த்தியிருப்பதுதான்.


நான் ஆரூடம் சொன்னது போலவே உச்ச நிதீமன்ற உத்தரவின்படி அரசு அமைத்த ஆய்வுக்குழு ஆட்சியாளர்களின் விருப்பத்தை ஆமோதிக்கக் கூடிய குழு. அதில் கல்வியாளர்கள் போதுமான அளவு இல்லை. பள்ளி உரிமையாளர்கள்தான் இருக்கிறார்கள். அதிலும் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்த ஆசிரியைக்கு, சரியாக ஊதியம் தராத வழக்கில் சிக்கியிருப்பவர். மெட்ரிக், ஸ்டேட், ஆங்கிலோ இண்டியன், ஓரியண்டல் என்ற நான்கு வழிகளையும் இணைக்கும் பொதுப் பாடத்திட்டத்தை ஆய்வு செய்வதற்கான குழுவில் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளி சார்புக்கு மட்டுமே இடம் தரப்பட்டிருக்கிறது. தமிழ் தெரியாத அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படித் தமிழ் மீடியப் பாடப் புத்தகத் தரம் பற்றி முடிவு செய்வார்கள்? பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் தமிழ் மீடியம்தான் அதிகம்.  என்னால் சகிக்கமுடியாத கொடுமை, செம்மொழி மாநாட்டு சின்னத்தை ஸ்டிக்கர் வைத்து ஒட்டி மறைப்பதும் புத்தகங்களில் சில பக்கங்களைக் கிழித்து மாணவர்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்திருப்பதும்தான். 

குமரிமுனை திருவள்ளுவர் சிலையும் அதன் கீழ் கருணாநிதி கையெழுத்தில் இருக்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகமும் ஏன் மறைக்கப்படவேண்டும்? சரியோ தவறோ, செம்மொழி மாநாடு தமிழக அரசு செலவில் நடத்தப்பட்டது. கருணாநிதி வீட்டுப் பணத்தில் அல்ல. அழகுணர்ச்சியே இல்லாமல் வடிக்கப்பட்ட வள்ளுவர் சிலையும் அரசுப் பணத்தில் வைத்ததுதான்.கருணாநிதிக்கு ஐஸ் வைப்பதற்காக அவர் தொடர்புள்ள பாடங்களை, பாடல்களை புத்தகத்தில் சேர்த்ததும், சூரியன் படத்துக்காக கலைஞர் டி.வி. சின்னத்தைப் படமாகப் போட்டதும் முந்தைய ஆட்சியின் மன்னிக்க முடியாத தவறு என்று அடித்துச் சொல்ல சமச்சீர்கல்வி ஆதரவாளர்கள் தயங்குவது ஏன் என்றும் புரியவில்லை.


கருணாநிதி-ஜெயலலிதா இந்தக் சண்டையில் இன்னொரு முக்கியமான குற்றவாளிகள் நம் கவனத்திலிருந்து தப்பிவிடுகிறார்கள். அவர்கள்தான் இரு ஆட்சியிலும் இருக்கிற ஜால்ரா அதிகாரிகள். பாடப்புத்தகங்களில் கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கும் விஷயங்களைச் சேர்த்தவர்கள் யார்? அதற்கு ஒப்புதல் தந்த அதிகாரிகள் யார்? ஆட்சி மாறியதுமே அரசு அறிவிப்புப் பலகை முதல் எல்லா இடங்களிலும் (கருணாநிதிக்கு ராசியான) மஞ்சளுக்கு பதில் (ஜெயலலிதாவுக்கு ராசியான)பச்சை வண்ணம் இடம்பெறச் செய்ய உத்தரவிடும் அதிகாரிகள் யார் யார்? இப்படியெல்லாம் மாற்றமுடியாது என்று ஏன் கருணாநிதியிடமோ ஜெயலலிதாவிடமோ எடுத்துச் சொல்லும் முதுகெலும்பு, அதிகாரிகளுக்கு இல்லை?

கருணாநிதி ஆட்சியில் அதன் சார்பாக அச்சிட்ட பாடப் புத்தகப் பக்கங்களைக் கிழிக்கத் தேவை இல்லை. அவற்றைப் படிக்க வேண்டாம் என்று மாணவர்களுக்கு உத்தரவு இட்டாலே போதும் என்று ஏன் ஒரு அதிகாரி கூட ஜெயலலிதாவிடம் சொல்ல முற்படுவதில்லை? அறிவுக் கூர்மையுள்ளவர் என்று ஆராதிக்கப்படும் ஜெயலலிதாவுக்கே ஏன் அது தோன்றுவதில்லை? எவ்வளவு பணமும் நேரமும் உழைப்பும் வீண்? வள்ளுவர் சிலைப் படத்தை பச்சை அட்டையால் மறைப்பது பெங்களூரில் மொழி வெறியர்களால், வள்ளுவர் சிலை கோணியால் மூடிக் கிடந்ததையே நினைவுபடுத்துகிறது. 


கொடுமையிலும் பெரும் கொடுமை இந்த ஸ்டிக்கர் ஒட்டும் வேலை, பக்கம் கிழிக்கும் வேலையெல்லாம் ஆசிரியர்களிடம் தரப்பட்டிருப்பதாகும். செயல்முறைக்கல்வி, விளையாட்டின் மூலம் கல்வி முதலிய நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு அறிமுகம் செய்த போதெல்லாம் அதைச் செய்யமாட்டோம் என்று எதிர்த்து வேலை நிறுத்தம் செய்து ஒழித்துக் கட்டிய தொழிற்சங்க வீரர்கள் எல்லாம் இப்போது எங்கே? ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு பக்கம் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன கேவலம்? இடதுசாரி கட்சிகளின் மாணவர்கள் சமச்சீர் கல்விக்கும் கட்டணத்துக்கும் தெருவில் போராடுகிறார்கள். இடதுசாரிக் கட்சிகளின் ஆசிரியர்களும், தி.மு.க. ஆசிரியர்களும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட வறட்டுப் பிடிவாத நடவடிக்கைகளும் அராஜகங்களும் அறவே இல்லாமல் ஆட்சி நடத்த எப்போது கற்பார் ஜெயலலிதா?

இந்த வார நகைச்சுவை:

அதிகாரபூர்வமான தேர்தல் செலவுக் கணக்கு:

ஸ்டாலின்: ரூ 3 லட்சத்து 32 ஆயிரத்து 709.

அவரை எதிர்த்த சைதை துரைசாமி: ரூ 6 லட்சத்து 11 ஆயிரத்து 659.

கருணாநிதி: ரூ 4 லட்சத்து 47 ஆயிரத்து 615. 97 பைசா.

ஜெயலலிதா: ரூ 9லட்சத்து 60 ஆயிரத்து 52.

தங்கபாலுவுக்குக் கட்சி கொடுத்தது: ரூ 10 லட்சம். அவர் செலவழித்தது: ரூ 4 லட்சத்து 4 ஆயிரத்து 809.
 

No comments:

Post a Comment