Search This Blog

Tuesday, June 28, 2011

தாய்நாட்டுக்கு என்ன செய்றீங்க?

அமெரிக்காவில் வளரும் இந்தியக் கலைகள்

அமெரிக்காவில் பல்வேறு கணினி நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய கணினிப் பொறியாளர்கள் ஒன்றுகூடி வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் என்னும் நகரத்தில் 2006ஆம் ஆண்டு இண்டஸ் க்ரியேஷன்ஸ் என்னும் அமைப்பை ஏற்படுத்தி, கலையையும் கலாசாரத்தையும் தமிழ் நாடகங்கள் மூலமாகத் திறம்பட வளர்க்கிறார்கள். இவர்களின் கடவுள் வந்திருந்தார், ரகசிய ஸ்நேகிதியே, லண்டன் எக்ஸ்பிரஸ், அரண்மனை சிறு வயலில் போன்ற நாடகங்கள் இங்கு பிரபலம்.


 
இவர்கள் தயாரிக்கும் நாடகங்களில் அனைவருமே தாங்களாகவே முன்வந்து, மேடை நிர்வாகம், இசை, நடிப்பு, கதை அமைப்பு, நாடகத்தின் வசனம் காட்சிகளின் ஆக்கம், ஒப்பனை அரங்க வடிவமைப்பு, ஒலி ஒளி ஆகியவற்றை அந்தக் குழுவினரே திட்டமிட்டு, தங்கள் கைகளாலேயே உருவாக்கி நாடகத்தில் அவர்களே நடித்தும் முழுமையாக்குகிறார்கள்.

திறமையாகக் கதை சொல்லும் கலையை வளர்ப்பது. தினம் தினம் மிகுந்த வேலைப்பளுவோடு மென்பொருள் உருவாக்கிக்கொண்டிருக்கும் பொறியாளர்களின் மனதை மென்மையாக்கி இரண்டு மணிநேரம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதே இண்டஸ் க்ரியேஷன்ஸின் நோக்கம். இவர்கள் எங்கும் பயிற்சி எடுக்காமல் தாங்களாகவே கற்றுக் கொண்டு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

நாடகக் கலையை வளர்ப்பது மட்டுமல்ல, இந்த நாடகக் கலை மூலமாக ஈட்டும் பணத்தை இந்தியாவிலே இருக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். இதுவரை தொடர்ந்து ஐந்து நாடகங்களை மேடையேற்றி மகத்தான வெற்றி கண்டிருக்கிறார்கள். கதை, இயக்கத்தை மனோஜ் சிவகுமாரும் தயாரிப்புப் பொறுப்பை வெங்கட் கிருஷ்ணமாச்சாரியும் கவனித்துக் கொள்கின்றனர்.



 
 
அதுமட்டுமல்ல இவர்களின் நாடகத்தைக் காணவரும் மக்களின் மூலமாக இண்டஸ் க்ரியேஷன் புகழ்பரவி அண்டை மாநிலமான ஒரே கான்ஸி, போர்ட்லாண்ட் நகரத்தில் இவர்களை அழைத்து நாடகம் போடச் சொல்லி வேண்டுகின்றனர். அங்கேயும் சென்று நாடகங்களைப் போடுகின்றனர். இவர்களுடைய ஆறாவது நாடகமான சக்கர வியூகத்தை வரவிருக்கும் ஜூலை மாதம் 10ஆம் தேதி சியாட்டிலில் உள்ள கிர்க்லாண்ட் பெர்பாமென்ஸ் மையத்தில் அரங்கேற்றவுள்ளார்கள். அதற்கான ஒத்திகை மைக்ரோ சாஃப்ட் ரெண்ட்மொண்ட் வளாகத்தில் நடக்கிறது.
 
இந்தியாவில் படித்து முன்னேறி அயல் நாடுகளுக்குச் சென்றுவிடும் வாலிபர்கள் தாய் நாட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்கின்ற பலரின் கேள்விக்கு விடையாக இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்து தங்கள் பணிகளையும் திறம்பட செய்துகொண்டே தமிழையும், நாடகக் கலையையும் வளர்த்து அதன் மூலமாக இவர்கள், இதுவரை செலவு போக ஈட்டிய தொகை 50,000 டாலர்கள்.அதாவது இந்திய மதிப்பில் 22 லட்ச ரூபாய்கள். இப்படி இவர்கள் தங்கள் பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் தங்கள் உழைப்பு, நேரம் ஆகியவற்றை அளித்து ஈட்டிய இந்தப் பெருந் தொகையை இந்தியாவிலுள்ள தொண்டு நிறுவனங்களான ‘அசோசியேஷன் ஃபார் இந்தியாஸ் டெவலப்மென்ட்’, ‘சங்கரா கண் மருத்துவமனை’, ‘உதவும் கரங்கள்’ போன்ற பல நிறுவனங்களுக்கும் அனுப்பி இருக்கிறார்கள். இப்போ யாரும் கேட்க முடியாது ‘தாய்நாட்டுக்கு என்ன செய்றீங்கன்னு’ இந்த நினைப்பே சந்தோஷமாயிருக்கும் என்கின்றனர் இண்டஸ் க்ரியேஷன்ஸ் குழுவினர்.


1 comment:

  1. பாராட்டப் படவேண்டிய விஷயம்

    ReplyDelete