Search This Blog

Monday, June 13, 2011

எகிறும் கட்டுமானச் செலவு: சுருக்கி கட்ட ஐடியா


இன்றைய அவசர யுகத்தில் சொந்த வேலைகளை நாமே எடுத்துச் செய்ய நமக்கு நேரமுமில்லை; அதை சரியாக செய்து முடிக்கத் தேவையான அனுபவமும் இருப்பதில்லை.

 அதனால் கல்யாணத்தில் ஆரம்பித்து அனைத்து முக்கிய வேலைகளையும் கான்ட்ராக்டர் களிடம் விடும் வழக்கம் அதிகரித்து விட்டது. அதிலும் குறிப்பாக வீடு கட்டுவதாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு கான்ட்ராக்டரிடம் கொடுத்து விடுகிறோம்.

ஆனால், கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ஓடியாடினால் போதும், நமது வீட்டை நாமே கட்டிக் கொள்ளலாம், அதுவும் குறைந்த செலவில்! குறைந்த செலவில் வீடு கட்டுவது என்றவுடன் இரண்டாம் தரப் பொருட் களைப் பயன்படுத்தி தரம் குறைவாகக் கட்டுவது என எண்ணி விடாதீர்கள். நம்மைச் சுற்றிக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயர்ந்த தரத்துடன் குறைவான கட்டுமானச் செலவில் வீடுகளை எளிதாகக் கட்டலாம்.நமது மேற்பார்வையில் நாமே முன்னின்று கட்ட நினைத்தால் எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? என்னென்ன வகையான சிக்கல்கள் நமக்கு வந்து சேரும்? அதற்கு என்ன தீர்வு?

திட்டமிடுதல்!

எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல், வேலை ஆரம்பிக்கும்  முன்பே திட்டமிட வேண்டும். எந்தமாதிரி வீடு, எந்த இடத்தில் என்ன வசதி வேண்டும், நமது பட்ஜெட் எவ்வளவு? என எல்லாவற்றையும் திட்டமிடுவது முக்கியம். 

தண்ணீர், மின்சாரம்!

முதலில் கட்டுமானத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, தண்ணீர் மற்றும் மின்வசதி மிக அவசியம். தண்ணீர் வசதிக்கு போர்வெல் போட்டுக் கொள்ளலாம். நிரந்தர மின் இணைப்பை பெற்றால் நல்லது; இல்லை என்றால் தற்காலிக இணைப்பாவது வாங்கிக் கொள்ள வேண்டும்.

மூலப்பொருட்கள்!

தரமான மூலப்பொருட் களையே வாங்க வேண்டும். சிமென்ட், மணல், செங்கல் போன்றவற்றை மொத்தமாக ஆர்டர் செய்தால், நாம் சொல்கிற இடத்துக்கே கொண்டுவந்து தருவார்கள். செங்கல் சூளைகளில் ஆர்டர் கொடுக்கும்போது கூடுதலாக கொஞ்சம் அட்வான்ஸ் கொடுத்தால், பின்வரும் நாட்களில் விலை ஏறினாலும் பழைய விலைக்கே தருகிற வழக்கமும் உண்டு. வேலை தடையில்லாமல் நடக்க வேண்டுமெனில் மூலப் பொருட்கள் கையிருப்பில் இருந்து கொண்டிருக்க வேண்டும். வேலை தடைபட்டால்  வேலையாட்கள் வேறு இடத்திற்கு வேலை தேடி சென்றுவிடும் வாய்ப்புண்டு.

லேபர் கான்ட்ராக்டர்!

பொதுவாக நம்மால் வேலையாட்களைத் தேடி அலைய முடியாது என்பதால் லேபர் கான்ட்ராக்டர் ஒருவரை  (ஏறக்குறைய ஒரு மேஸ்திரி மாதிரி) வைத்துக் கொள்ளலாம். இந்த லேபர் கான்ட்ராக்டரை நியமிக்கும் முன், அவரைபற்றி நன்கு விசாரித்துவிட்டு வேலையை ஒப்படைப்பது நல்லது.

 செக்யூரிட்டி!
 
கட்டுமானப் பொருட்கள் திருடுபோக வாய்ப்புகள் இருப்பதால் இதனை தவிர்க்க நம்பகமான செக்யூரிட்டி ஒருவரை வேலைக்கு அமர்த்த வேண்டும்.
பொருட்கள் வாங்கிப் போட்டாச்சு, லேபர் கான்ட்ராக்ட் விட்டாச்சு என்று இருந்து விடாமல் தினசரி என்னென்ன வேலைகள் நடந்துள்ளது, எந்த வேலை முடியும் தருவாயில் உள்ளது, பொருட்கள் ஏதேனும் வீணாகிறதா என்பதைக் கண்காணித்து வர வேண்டும். வீடு கட்டி முடிக்கும் வரை இந்த வேலைகளை ஃபாலோ செய்வது அவசியம்.  

நேரம் காலம்!

மழைக் காலத்தில் வீட்டு வேலைகளில் பாதிப்பு ஏற்படும். இதனால் மழைக் காலத்தில் வீடு கட்டுவதைத் தவிர்க்கவும். தவிர, மணல், செங்கல் போன்றவை சரியாகக் கிடைக்காது, அவற்றின் விலையும் அதிகமாகவே இருக்கும். பொதுவாக, ஏப்ரல் டூ ஜூலை மாதங்களில் திட்டமிடலாம். 

எவ்வளவு மிச்சமாகும்?

பில்டர் வீடு கட்டித் தருவதை விட நாமே முன்னின்று நம் வீட்டைக் கட்டினால் நிச்சயம் 10-15% லாபம் கிடைக்கும்.

சிக்கல்கள்!

  • நமது அன்றாட வேலைகள்  பாதிப்படையாமல் சமாளிக்க வேண்டும்.
  • எலெக்ட்ரிஷியன், தளம் போடும் வேலைகளுக்கு நம்பகமான ஆட்களை நாமே தேட வேண்டியதிருக்கும்.
  • சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் பில்டருக்குக் கொடுக்கும் பணத்தைவிட அதிகமாக செலவாகிவிடும்.  
கட்டுமானப் பொருட்கள் வாங்கும்போது..!

மணல்:

1. ஈரமில்லாத உலர்மணலாக இருக்க வேண்டும். கற்கள், தூசிகள் இல்லாத குறுமணலாக இருந்தால் மணலை சலிப்பதற்கான நேரமும், ஆட்செலவும் குறையும். 2. லாரிகளிலிருந்து மணலை இறக்கும் முன் மணல் மீது கம்பியால் குத்திப் பார்க்க வேண்டும். மணல் மட்டத்தை விடவும் கம்பி குத்திய இடத்தில் மணல் கீழே இறங்கினால் நாம் கேட்ட அளவை விடவும் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். 3. முடிந்தவரை அருகாமையிலிருக்கும் இடங் களிலிருந்து மணல் வாங்கினால்,  லாரி வாடகை மிச்சமாகும்.

செங்கல்:

1. நன்கு வேக வைத்த செங்கல் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், செங்கல் நன்கு சிவக்க, உப்பு சேர்த்து சுடவைக்கும் ஏமாற்று வேலைகளும் நடக்கிறது. இக்கற்களால் வீடு கட்டும்போது சுவர்களில் உப்புத்தன்மை கூடும்.
இதனால் அதிகம் சிவந்த செங்கற்களை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. 2. சரியாக வேகாத செங்கற்கள் எனில் சுவர்கள் உறுதியாக இருக்காது. செங்கற்களின் உறுதியைச் சோதிக்க ஒரு எளிய வழி: அவற்றை தண்ணீரில் மூழ்கும்படி 24 மணி நேரம் வைத்திருந்து எடுத்தால் உறுதியில்லாத கல் மாவு போல பொடிப் பொடியாகி விடும். உறுதியான கல் அப்படியே இருக்கும். 3. சேம்பர் கல்லைவிட சூளைக்கல் விலை குறைவாகவே இருக்கும்.

ஜல்லி:

முக்கால் இஞ்ச் ஜல்லிகளோடு அரை இஞ்ச் ஜல்லிகளையும் கலந்து கொடுக்க வாய்ப்புள்ளது. எனவே, கவனம்.

கம்பி:

ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட பிராண்டட் கம்பிகளை வாங்குவது நல்லது.

சிமென்ட்:

1. சொந்த வீடு கட்டுபவர்களுக்கு அரசே குறைந்த விலையில் சிமென்ட் விற்பனை செய்கிறது. இதில், கறுப்பு சிமென்ட், வெள்ளை சிமென்ட் என இரு வகை உண்டு. உங்களுக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொள்ளலாம். 2. பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியுமெனில் சிமென்டை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். 3. தரைக்கு மேல் அரையடி உயரத்தில் பலகை வைத்து சிமென்ட் மூட்டைகளை வைக்கவும்.நேரடியாக தரையில் வைக்கக் கூடாது. 4. ஈரப்பதமுள்ள இடங்கள், உப்புக்காற்று வீசும் இடங்களில்  வைக்கும்போது காற்று புகாத தார்பாயைக் கொண்டு மூடவும். 5. மொத்தமாக வாங்கி அடுக்கும்போது ஒன்றன்மேல் ஒன்றாக அதிக உயரத்துக்கு அடுக்க வேண்டாம்.
  
மரம்:

1. கதவு, ஜன்னல் செய்வதற் கான மரங்களை வாங்க நீங்களே நேரடியாக செல்வது நல்லது. 2. உறுதியான, முடிச்சுகள் இல்லாத மரங்கள் அல்லது பலகைகள் வாங்கவும்.
3. புதிதாக வெட்டப்பட்ட மரங்களின் பலகைகளைவிட பழைய மரங்களில் பலகைகள் உறுதியானதாக இருக்கும்.
4. மரவேலைகள் அனைத்தையும் உங்கள் இடத்திலேயே செய்வதுபோல பார்த்துக் கொள்வது நல்லது. அத்தனை டிப்ஸ்களையும் சொல்லியாகி விட்டது! இனி நீங்களே களத்தில்  இறங்கி கலக்குங்கள்!




விகடன் 

No comments:

Post a Comment