Search This Blog

Thursday, May 12, 2011

மின்பற்றாக்குறை - உத்திர பிரதேசம் ஆகும் என் தமிழகம் ?


வாழ்க்கையே வெறுத்துப் போகிறது.. கரண்ட் இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் நரகமாகிவிடுகிறது. தலைநகர் சென்னையில் ஓரளவுதான் மின்வெட்டு. ஆனால் இதற்கே தலைநகர் வாசிகள் தவியாய்த் தவிக்கின்றனர்.சென்னை தவிர பிற மாவட்டங்கள் நாளொன்றுக்கு 2 முதல் 5 மணிநேர மின்வெட்டால் அவஸ்தைப்படுகின்றன. விவசாயிகளோ 75 சதவிகித மின் வெட்டால் விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர். தொழிற்சாலைகளோ 40 சதவிகித மின்வெட்டால் நலிந்து வருகின்றன.

இவ்வளவு மோசமான நிலை ஏன் ஏற்பட்டது?

கடந்த 20 ஆண்டுகளாகவே மின் உற்பத்திக்கான நிதி தமிழகத்தில் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டு வந்தது. இதனால் பெரிய அளவில் எந்த ஒரு மின் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. தொழிற்சாலைகள், ஐ.டி.பூங்காக்கள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், குடும்பங்கள்... என மின்சாரப் பயன்பாடு பல்கிப் பெருகி வந்த காலகட்டத்தில், இரு கழக ஆட்சிகளுமே மின் உற்பத்தியை மிகவும் அலட்சியம் செய்து, பல்வேறு கவர்ச்சித் திட்டங்களிலேயே காசை அள்ளி இறைத்தன. மின்பற்றாக்குறை ஏற்படும்போதெல்லாம் மத்திய அரசின் தொகுப்பிலிருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக மின்சாத்தைக் கேட்டு வாங்கிச் சமாளித்து வந்தனரேயன்றி, சுயமுயற்சி எடுக்கவில்லை. 

இதோடு தனியாரிடமிருந்து மிகக் கூடுதல் பணத்தில் மின்சாரம் வாங்கிச் சமாளித்துவிடலாம் எனவும் அரசு நம்பியது. இதற்காகத் தனியாருக்குப் பல சலுகைகள் தந்து, மின்வாரியத்தின் மொத்த செலவில் மூன்றில் ஒரு பங்கை வீணாக்கியதுதான் கண்ட பலன். இன்றுவரை தனியாரால் தமிழகத்தின் மின் தேவையில் பத்து சதவிகிதத்தைக்கூட தர முடியவில்லை. இதனால் தமிழக மின்வாரியம் தற்போது வரலாறு காணாத வகையில் 42,000 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. 

தி.மு.க 2006-ல் ஆட்சி பொறுப்பேற்றபோது தமிழக மின்வாரியம் 10,031 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து கொண்டிருந்தது. ஐந்தாண்டு கால ஆட்சிக்குப் பிறகு 2011-ல் அதன் உற்பத்தித் திறன் 10,214 மெகாவாட் மட்டுமே. அதாவது 183 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே தி.மு.க. அரசால் அதிகரிக்க முடிந்தது. அதாவது 2 சதவிகிதம்கூட மின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. ஆனால் மின் தேவையோ 30 சதவிகிதம் அதிகரித்துவிட்டது. இதனால் 3000 மெகாவாட் மின் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் தற்போது தத்தளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மின்தேவை சுமார் 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்பது அனுபவ ரீதியான பாடமாகும். எனவே இனி எந்த அரசானாலும் மின் உற்பத்திக்கு அதிக நிதி ஒதுக்கி அக்கறை காட்ட வேண்டுமேயல்லாது இருக்கிற நிதியை எல்லாம் இலவசத் திட்டங்களுக்கு வாரி இறைக்கக் கூடாது

100 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அனல்மின் நிலைய வகையில் ரூ.600 கோடி முதலீடு தேவைப்படுகிறது. அதே சமயம் புனல் மின் நிலையம் எனும் நீர் மூலமான மின் உற்பத்திக்கு இரு வகை நன்மைகள் உள்ளன. இதற்காகக் கட்டப்படும் அணைகள் விவசாய உற்பத்திக்குப் பயனளிக்கும், மின் உற்பத்திக்கும் கைகொடுக்கும். காற்றாலை மூலமான மின் உற்பத்தியிலோ மிகக் குறைவான முதலீடே தேவை. ஆனால் இதில்கூட தமிழக அரசு முனைப்புக் காட்டவில்லை. காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வோர் கணிசமாகத் தனியார்களே!

தமிழக மின்வாரியம் ஊழலில் புரையோடிக் கிடக்கின்றது. அனல் மின்சாரத்துக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதில் அபரிமிதமான ஊழல். மின் உற்பத்தி நிலையப் பராமரிப்பிலோ அதிக அலட்சியம். பதவி உயர்வு, இடமாற்றம், வேலைக்கு ஆள் எடுப்பது என எல்லாவற்றிலும் லஞ்சம்! அதோடு ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறையால் மின்வாரியமே ஒரு வகையில் ஸ்தம்பித்துள்ளது. டிரான்ஸ்ஃபார்மர்கள் வாங்குவதில் பெரும் தில்லுமுல்லுகள் நடக்கின்றன. தரமற்ற டிரான்ஸ்ஃபார்ம்கள் தீவிரவாதிகளைப் போல் திடீரென வெடித்து மக்கள் உயிரைக் குடிக்கின்றன. தீவிரவாதிகளைக்கூட தண்டிக்க முடிந்த நமது நாட்டில் மக்கள் வரிப்பணத்திலேயே அவர்கள் உயிருக்கு உலை வைக்கும் லஞ்ச மின்வாரிய அதிகாரிகளைத் தண்டிக்க முடியாதிருப்பது சோகத்திலும் சோகம்.

“இந்தியாவிலேயே மின் உற்பத்தியில் மிகச் சிறந்த இலக்கை அடைந்துள்ளது தமிழகம்” என ஜவாஹர்லால் நேரு, காமராஜர் ஆட்சியில் சொன்னார். மக்கள் நலனில் அக்கறையுள்ள நேர்மையான ஆட்சியாளர்களால்தான் மின்பற்றாக்குறைக்கு மின்னலைப் போல் தீர்வு பிறக்கும்.
சாவித்திரி கண்ணன்
 

No comments:

Post a Comment