Search This Blog

Wednesday, May 25, 2011

பத்ரிநாத் - இந்திய மைக் ஹஸ்ஸி!


‘இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற பத்ரிநாத்துக்கு எல்லாத் தகுதிகளும் உள்ளன’ என்று 2006ல் கிரேக் சேப்பலிடம் பாராட்டு பெற்றபோது பத்ரிநாத்தின் வயது 26. நான்கு வருடங்கள் கழித்து 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட்கள் எனக் குறைந்த அளவிலேயே இந்திய அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இப்போது 31 வயதை நெருங்கும் நேரத்தில் மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாகியிருக்கிறார், ‘இந்திய மைக் ஹஸ்ஸி’ என்றழைக்கப்படும் பத்ரிநாத். 


வேறு யாராக இருந்தாலும் நம்பிக்கை இழந்திருப்பார்கள். அவ்வளவு தடங்கல்கள் பத்ரிநாத்தின் வாழ்க்கையில். ஆனால் பத்ரிநாத் விடவில்லை. சென்ற வருடம் உள்ளூர்ப் போட்டிகளில் அவர்தான் ஹீரோ. பிராந்திய பேதம் இல்லாமல் எல்லோரும் பார்த்து ஆச்சர்யப்படும் பேட்ஸ்மேனாக உயர்ந்தார். சென்ற வருட ரஞ்சியில் பத்ரிநாத்தான் அதிக ரன்கள் எடுத்திருந்தார். பரபரப்பாக நடந்த அரையிறுதியில் இவரை அவுட் ஆக்க படாதபாடு பட்டது ராஜஸ்தான் அணி. ஐ.பி.எல். வந்தது. ஹஸ்ஸி, விஜய், ரைனா, தோனி ஆடுகிற அணியிலும் தனியாகத் தெரிந்தார். அதிரடியாக ஆடமாட்டார் என்கிற குற்றச் சாட்டையும் இந்த ஐ.பி.எல்.லில் உடைத்தார். முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் மேற்கு இந்தியத் தீவுடனான ஒருநாள் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறார் பத்ரிநாத்.  


பத்ரிநாத்தின் பூஸ்ட், மைக் ஹஸ்ஸி. 30 வயதுக்கு மேல் ஆஸ்திரேலிய அணியில் தேர்வாகி இன்று ‘மிஸ்டர் கிரிக்கெட்’ என்கிற பட்டத்தைப் பெற்றிருப்பவர் அவர். ஐ.பி.எல்.லிலும் இருவரும் ஒரே அணி என்பதால் ஹஸ்ஸியிடமிருந்து பல தைரியங்களைப் பெற்றிருக்கிறார் பத்ரி. 2008ல் இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்த போது, இலங்கைச் சுற்றுப் பயணத்துக்கான வீரர்கள் பட்டியலில் பத்ரியின் பெயர் இடம்பெறவில்லை. பொங்கி எழுந்தார் பத்ரி. மீடியா முன் தன் கோபங்களைக் கொட்டினார்.  


‘தேர்வாகாத நிலையில் இனி நான் என்ன செய்யமுடியும் என்று தெரியவில்லை. நான் தோற்றுவிட்டேன். மற்றவர்களுக்கு மத்தியில் என் நிலை என்ன; என்ன செய்தால் நான் தேர்வாக முடியும் என்பதைத் தேர்வாளர்கள் குறிப்பிட்டுச் சொன்னால் எனக்கு உபயோகமாக இருக்கும். ஒரு வாய்ப்பளித்து அதில் நான் தோற்றுப்போகிறேனா என்று மட்டும் பாருங்கள். என்னால் சர்வதேச அளவில் சாதிக்கமுடியாவிட்டால் ஓர் ஓரமாக ஒதுங்கிவிடுகிறேன்’ என்கிற ஆவேசப் பேச்சுக்கு பலன் கிடைத்தது. காயம் காரணமாக சச்சின் இலங்கை டூரிலிருந்து விலகிவிட, பத்ரிக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் ஒருநாள் போட்டியிலேயே மோசமான நிலையில் இருந்து அணியைக் காப்பாற்றி வெற்றி பெறச் செய்தார் பத்ரி. ஆனால் அடுத்து ஏற்பட்ட சிறு தோல்விகளால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.  

சிறப்பாக ஆடுபவர்களுக்கான எந்த உத்தரவாதமும் இந்திய கிரிக்கெட்டில் கிடையாது என்பதற்குச் சிறந்த உதாரணம் பத்ரி. பத்ரியைப் புறக்கணித்து கோலி, கம்பீர், மனோஜ் திவாரி போன்றோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் ஒரு பெரிய போராட்டத்துக்குப் பிறகே இப்போது அணிக்குள் நுழைந்திருக்கிறார். ‘சென்ற வருடம் அணியில் இருந்து நீக்கப்பட்டதோடு கான்ட்ராக்ட்டும் கிடைக்கவில்லை. இதனால் நான் மீண்டும் முதலிலிருந்து போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். அடுத்து நான் என் னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு உழைத்தேன். தோல்வியிலிருந்து தான் கற்றுக் கொள்ள முடியும் என்பார்கள். என் வாழ்க்கையில் அது உண்மையே’ என்கிறார் பத்ரி.


‘எந்த ஒரு நெருக்கடியிலும் பத்ரியை நம்பலாம். பத்ரியிடம் தென்படும் நம்பிக்கையான ஆட்டம் இந்திய அணியின் எதிர் காலத்துக்கு உகந்தது’ என்று பத்ரியின் தேர்வு பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி. வயது பற்றிப் பேசுபவர்களுக்கும் பத்ரி பதில் வைத்திருக்கிறார். ‘எல்லோரும் வயதைக் குறிப்பிடுவதற்குக் காரணம், உடல் தகுதியின்மைக்காகத்தான். ஆனால், எந்த ஓர் இளம் வீரரை விடவும் நான் மிகவும் ஃபிட்டாக இருக்கிறேன். இந்த விஷயத்தில் யாரும் என்னைக் குறைசொல்ல முடியாது.’ 

1 comment:

  1. அவ்வ்...
    ஒண்ணுமே புரியல்ல பாஸ்
    இதில நாங்க சீரோ பாஸ்

    ReplyDelete