Search This Blog

Saturday, May 21, 2011

நான் நிரந்தர எதிர்க்கட்சி! - ஓ பக்கங்கள், ஞாநி

இனி என்ன செய்யப் போகிறீர்கள்? விமர்சிப்பதற்கு கருணாநிதியும் தி.மு.க.வும் ஆட்சியில் இல்லையே,எழுதுவதை நிறுத்திவிடுவீர்களா என்றெல்லாம் சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.

நேர்மாறாக, தி.மு.க. மறுபடியும் ஆட்சியைப் பிடித்திருந்தால் ஒருவேளை அரசியல் விமர்சனம் எழுதுவதை நிறுத்தியிருப்பேன். நாம் என்ன எழுதி என்ன பயன், அந்தக் கருத்துகள் மக்களிடம் துளி சலனத்தையும் உண்டு பண்ணவில்லையே என்ற விரக்தி ஏற்பட்டிருக்கும்.

தி.மு.க. ஆட்சி எனப்படும் ஒற்றைக் குடும்ப ஆட்சியைத் தொடர்ந்து விமர்சித்ததற்காக கடந்த ஐந்தாண்டுகளில் இரு பெரும் பத்திரிகைகளிலிருந்து என் ‘ஓ’ பக்கங்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு பத்திரிகை தேர்தலுக்குச் சற்று முன்பாகத்தானே உஷாராக அணி மாறியது. என்னைக் கண்டித்து கனிமொழியின் ஆதரவாளர்கள் பல லட்சம் செலவில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கலைஞருக்குச் சொன்னதற்காகக் கண்டனம். இப்போது அவரே தனக்கு மக்கள் நல்ல ஓய்வுகொடுத் திருக்கிறார்கள் என்கிறார். மக்கள் என்பதற்கு தமிழில் குழந்தைகள் என்றும் அர்த்தமுண்டு!


நான் சொன்னபோதே அவர் ஓய்வெடுத்திருந்தால் ஸ்பெக்ட்ரம் முதல் பல அடுக்கடுக்கான சிக்கல்கள் வராமல் தி.மு.க. தப்பித்திருக்கும். ஸ்டாலின்கூட ஒருமுறையேனும் முதலமைச்சர் ஆகியிருந்திருப்பார். கட்சி இப்போது வாங்கிய அளவுக்கு, பலத்த அடி வாங்கியிருக்காது.தொடர்ந்து விமர்சித்ததற்காகப் பலமுறை முரசொலியில் ஜெயலலிதாவை ஆட்சிக்கு வரவழைக்கத் துடிக்கும் பார்ப்பனப் பதர் என்று கட்டுரைகள் எழுதினார்கள். கார்ட்டூன்கள்கூட போட்டார்கள்.தேர்தல் முடிவு வருவதற்கு பத்து நாள் முன்பு கூட, என்னை திட்டி முழுப் பக்கக் கட்டுரை எழுதினார் கரை வேட்டி எழுத்தாளர் இமையம்.

அதெல்லாம் எவ்வளவு அபத்தமானவை என்பதை தேர்தல் முடிவுக்குச் சில தினங்கள் முன்னால் என்னைத் திட்டி ஜெயா டி.வி.யில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட கட்சிப் பிரமுகர் பழ.கருப்பையாவின் அறிக்கை காட்டியது. தலைமையின் கவனத்தை ஈர்ப்பதற்காகக் கட்சிப் பிரமுகர்கள் ஆவேச அறிக்கைகள் விடுவது வாடிக்கையானதுதானே. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.  பதவி ஏற்பதற்கு முன்பாகவே என்னைத் தாக்கும் அறிக்கையை ஒளிபரப்பி நான் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்காகப் பாடுபட்ட பார்ப்பனப் பதர் அல்ல என்று காட்டியிருப்பதற்காக, ஜெயா டி.வி.க்கு நன்றி.

பழ.கருப்பையாவின் அறிக்கையில் ஒரு பகுதி மட்டுமே  கடிதமாக வெளியாயிற்று. ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பான முழு அறிக்கையில் அவர் நான் ஏன் ஸ்பெக்ட்ரம் பற்றி எழுதவில்லை, ஏன் அழகிரிக்காக நடத்தப்பட்ட தினகரன் அலுவலகத் தாக்குதல் கொலைகள் பற்றி எழுதவில்லை என்றெல்லாம் கேட்டிருந்தார். அதைப் பற்றியெல்லாம் நான் தொடர்ந்து எழுதி வந்திருப்பதனால்தானே முரசொலி என்னைத் தாக்குகிறது. அவ்வளவு ஏன்? கருப்பையா தம் முகம் வரும் நிகழ்ச்சியைத் தவிர வேறு எதையும் ஜெயா டி.வி.யில் கூடப் பார்ப்பதில்லை என்று தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் பற்றியும் கனிமொழி, அழகிரி பற்றியும் பலமுறை ஜெயா டி.வி. என் பேட்டிகளை ஒளிபரப்பியதுகூட அவருக்குத் தெரியவில்லையே!  

அறிவுஜீவி என்று அறியப்படுகிற பழ. கருப்பையா, ‘ஒருவரின் வாழ்க்கை சரித்திரம் பற்றி எழுத அவரோடு நெருங்கிப் பழகியிருக்க வேண்டும். வாஸந்தி அப்படி ஜெயலலிதாவுடன் பழகியவரில்லையே’ என்கிறார். காந்தியின் வாழ்க்கை பற்றி எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்களில் பெரும்பாலானவை காந்தி செத்து பல ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர்களால் எழுதப்பட்டவை. கருப்பையாவின் இலக்கணப்படி அத்தனையும் தப்பு. வாஸந்தியின் புத்தகம் பற்றி இதுவரை அவுட்லுக்கில் ஒரே ஒரு கட்டுரைதான் வந்திருக்கிறது. அதில் வந்துள்ள அனைத்தும் ஏற்கெனவே பல்வேறு ஆண்டுகளில் பல இதழ்களில் வெளியான தகவல்கள்தான். இதையே சகித்துக் கொள்ள முடியாமல் ஜெயலலிதா தடை வாங்கியதைத்தான் விமர்சித்திருந்தேன். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களிலேயே சகிப்புத்தன்மை இல்லையென்றால் வரப் போகும் நாட்களில் கடுமையான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வார்கள்? 


என்னை முரசொலியும் ஜெயா டி.வி.யும் கண்டிப்பதுதான் எனக்குக் கிடைக்கிற மிகப் பெரிய பத்திரிகைத் துறை விருது. சரியான திசையில் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதற்கான நிரூபணம். இன்றைய தமிழகச் சூழலில் மக்கள் சார்பான நிரந்தர எதிர்க்கட்சியாகச் செயல்படுவதுதான் மனசாட்சியுள்ள பத்திரிகையாளர்கள் செய்யத்தகுவதாகும்.

இனி ஜெயலலிதாவின் ஆட்சியில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம்?  



கருணாநிதி அரசு செய்து வந்த அத்தனை ஊழல்களையும் தமக்கு வேண்டியவர்களுக்குக் கைமாற்றி விட்டு அதே ஆட்சிமுறையைத் தொடரக் கூடாதென்று எதிர்பார்க்கிறோம். முந்தைய ஆட்சியில் நடந்த நல்வாழ்வு திட்டங்கள் எதையும் நிறுத்தாமல் தொடரவேண்டு மென்று எதிர்பார்க்கிறோம். இலவசங்களை விட மோசமானது மது விற்பனையால் தமிழக ஏழைக் குடும்பங்கள் சீரழிந்து கொண்டே போகும் அவலமாகும். ஜெயலலிதா நினைத்தால் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். ரேஷனில் தரப்படும் இலவசங்கள், மான்யங்கள் எல்லாவற்றையும் வருமான அடிப்படையில் கட்டுப் படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.


இந்தத் தேர்தல் விஜயகாந்த்துக்கு மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பொறுப்பான எதிர்க்கட்சியாக இடதுசாரிகள் உதவியுடன் அவர் தம் செயல் திட்டத்தை வகுத்துக் கொண்டால், அடுத்தகட்ட அரசியல் வளர்ச்சியை அவர் பார்க்கமுடியும். இல்லையேல் ராமதாஸ், வைகோ, திருமா... வழியில் சுருங்கிப் போக நேரிடும்.


பதவி ஏற்றதுமே சட்டசபையையும் தலைமைச் செயலகத்தையும் பழைய இடத்துக்கே கொண்டு செல்ல ஜெயலலிதா முடிவு செய்திருப்பதை வீரமணி, வைகோ, ராமதாஸ்... ஆகியோர் கண்டித்திருக்கிறார்கள். ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தில் கட்டிய கட்டடத்தை வீணடிக்கக் கூடாது என்பது அவர்கள் வாதம்.அதைக் கட்டியதே தவறு என்று கட்டும் போதே நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். சென்னை நகரின் மையத்தில் கட்டடங்கள் எழுப்பக் கூடாது என்று ராஜாஜி காலத்திலிருந்து நகரின் நுரையீரலாகப் பாதுகாக்கப்பட்ட ஓமந்தூரார் தோட்டத்தை கான்க்ரீட் காடாக்கியது கலைஞர் ஆட்சி. கூவம் அடையாறு கரையோரக் குடிசைவாசிகளை முப்பது கிலோமீட்டர் தொலைவுக்குத் தூக்கி எறிந்தது. அவர்களுக்கு அங்கே குடியிருப்புகள் கொடுத்திருக்கலாம். வெறும் 234 பேர் மட்டும் கூடிப் பேச மகாபலிபுரத்தருகே கட்டடம் கட்டியிருக்கலாம் என்று அப்போதே எழுதினேன்.

புதிய கட்டடம் முடியவில்லை. தற்காலிக ஜோடனைக்கு மூன்று கோடி வீணடித்தார் கருணாநிதி. அப்போதெல்லாம் வீரமணி, ராமதாஸ், வைகோ வாய்கள் அடைத்துக் கிடந்தன. மின் இணைப்பு கூட வராமலே ஜோதிடர் குறித்த தேதியில் திறப்பு விழா நடத்தினார்.

இனி அந்தக் கட்டடத்தை என்ன செய்வது? 

அதை அரசுப் பொது மருத்துவமனையாகவும் மருத்துவக் கல்லூரி வளாகமாகவும் மாற்றலாம். அதிலிருக்கும் சட்டமன்ற அரங்கைச் சுற்றிலும் மாணவர்கள் அமர்ந்து பார்த்து கற்கும் வசதியுடன் கூடிய நவீன ஆபரேஷன் தியேட்டர்களாக மாற்றலாம். 

மருத்துவமனைக்கு உதவாதென்றால், சிட்டி டிரேட் சென்டர் போல வர்த்தக பொருட்காட்சிகளுக்கும் கருத்தரங்கங்களுக்கும் நிரந்தர புத்தகக் காட்சிக்குமான இடமாக மாற்றலாம்.  

அவசர அவசரமாக கருணாநிதி செம்மொழி நூலகத்தை, கோட்டைக்கு எடுத்துச் சென்றார். இனி அதை கோட்டூர் புரத்திலிருக்கும் அண்ணா நூலகத்துக்கே இடம் மாற்றலாம். ஒரே வளாகத்தில் உயர் ஆய்வு நூலகமும் இருப்பது ஆய்வாளர்களுக்கு வசதியானது.

புதிய ஆட்சிக்கு நான் இப்போதைக்குச் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கடந்த ஆட்சி கவிழ்ந்ததற்கான காரணங்களை மறக்காமல் இருங்கள். அதே பாதையில் சென்றால் அதே முடிவுகளைத்தான் சந்திக்க வேண்டிவரும். 

இந்த வார பூச்செண்டு!

வாரா வாரம் பத்திரிகை நிருபர்களை சந்தித்துப் பதில் சொல்ல ஒப்புக் கொண்டிருப்பதற்காக புதிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இ.வா.பூ. கருணாநிதியிடம் சங்கடமான கேள்விகளைக் கேட்காமல் தவிர்த்து மழுப்பிக் கொண்டிருந்தது போல இப்போதும் செய்யாமல் தெளிவாகக் கறாராகக் கேள்விகள் கேட்டால் நிருபர்களுக்கும் பூச்செண்டு தருவேன்.

இந்த வார வேண்டுகோள்!



இந்தத் தேர்தலின் ஒரே டிராஜெடி காமெடியன் வடிவேலு. அவர் அரசியலுக்குள் வந்திருக்கத் தேவையே இல்லை. நாகேஷுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய திறமைசாலி வடிவேலு. அவர் தமிழக மக்களின் பொதுச் சொத்து. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவராக அவர் இருந்திருக்க வேண்டும். விஜயகாந்துக்கும் அவருக்கும் இடையே தனிப்பட்ட பெரிய கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் எதுவு மில்லை. சின்ன ஈகோ மோதல்தான்.

தமிழகத்தின் இன்னொரு கலைச் சொத்தான மனோரமா, வடிவேலு செய்த அதே தவறை 1996ல் செய்தார். அப்போது ரஜினிகாந்த் செய்ததை இப்போது விஜயகாந்த் செய்ய வேண்டும். நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் எல்லோரையும் அரவணைத்துச் செயல்பட்டு வெற்றி கண்ட சாதனைக்குரியவர். வடிவேலுவுடன் விரோதம் பாராட்டுவது தேவையற்றது. நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சரத்குமாரும் ராதா ரவியும் வடிவேலுவையும் விஜயகாந்த்தையும் சந்திக்கவைத்து இந்த விரோதத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். 

இந்த வார நகைச்சுவை!


1. தேர்தல் முடிவுக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. தோல்விக்குக் காரணத்தை இனிமேல் தான் கண்டறியவேண்டும். - தி.மு.க பேச்சாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.

2. (தாம் ஆட்சி அமைக்கப் போவதாகத் தெரிந்ததும்) ஏற்கெனவே சங்கிலி பறிப்புத் திருடர்கள் ஆந்திரத்துக்கு ஓடிப் போய்விட்டதாகக் கேள்விப்பட்டேன். - பதவி ஏற்றதும் ஜெயலலிதா அளித்த பேட்டியில் சொன்னது.

இந்த வார அதிர்ச்சி!


தமிழ் நாட்டிலேயே ஒரே ஒரு பள்ளியாக சூளைமேடு மாநகராட்சிப் பள்ளியில்தான் புகைப்படக் கலையை ப்ளஸ் டூவில் படிக்க வழியிருக்கிறது. அதை மூடக் கூடாது என்று நான் கல்கியில் முன்னர் எழுதியதையடுத்து அதை மூடப் போவதில்லை என்று மேயர் தெரிவித்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அதேபோன்று தங்கள் பள்ளியிலும் ப்ளஸ் டூவில் புகைப்படப் பாடத்தை தொடங்க அனுமதி கேட்டு திருநின்றவூர் சேவாலயா அமைப்பினர் விண்ணப்பித்ததற்கு, அனுமதிப்பதற்கு அரசாணையில் இடமில்லை என்று கல்வித் துறை பதிலளித்துள்ளது, அதிர்ச்சியாக உள்ளது. புதிய கல்வி அமைச்சர் சண்முகம் கவனிப்பாரா? 

இந்த வார வருத்தம்

டி.வி. சேனல்கள் முன்பு கருத்துச் சொல்ல வராமல் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லாரும் ஓடி ஒளிந்துகொண்டு விட்டபோது, குஷ்பு மட்டும் வந்து செஞ்சோற்றுக் கடனைக் கழித்ததைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. குஷ்பு... இது உங்க ஏரியா இல்லை. கட்சி அரசியலை விட்டு விட்டுப் பொது சேவையில் இறங்குங்கள்.  
  

3 comments:

  1. //என்னை முரசொலியும் ஜெயா டி.வி.யும் கண்டிப்பதுதான் எனக்குக் கிடைக்கிற மிகப் பெரிய பத்திரிகைத் துறை விருது.//

    உண்மை

    ReplyDelete
  2. //மக்கள் சார்பான நிரந்தர எதிர்க்கட்சியாகச் செயல்படுவதுதான் மனசாட்சியுள்ள பத்திரிகையாளர்கள் செய்யத்தகுவதாகும்.
    //

    இத கொஞ்சம் நக்கீரனுக்கும் சொல்லிகொடுங்க ஞாநி சார்

    ReplyDelete