Search This Blog

Wednesday, May 18, 2011

அன்புள்ள அம்மாவுக்கு...

 
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்!
 
உங்களுக்கு வாக்களித்தவர்களில் நானும் ஒருவன். உங்களுக்கு வாக்களிக்கப் போகிறேன் என்று வெளிப்படப் பேசியது இல்லை. மெüனமாகவே இருந்தேன். இதற்குக் காரணம் இருந்தது. எனது முடிவைச் சொன்னால் என்னிடம் கேட்கப்படும் தர்மசங்கடமான கேள்வி இதுவாகத்தான் இருக்கும். 

அந்த அம்மாவின் ஆட்சியில் மட்டும் ஊழல் நடக்கவில்லையா?
 
 இந்தக் கேள்வியைக் கேட்பவர் என்னிடம் மேலும் பல துணைக் கேள்விகளைக் கேட்டு சங்கடப்படுத்துவார். என்னைத் திசை திருப்பப் பார்ப்பார். சாதியம் பேசுவார். திராவிடப் பாரம்பரியம் பற்றிப் பாடம் நடத்துவார். தேவையற்ற விவாதங்களும், ஒருவேளை சமரசங்களும் ஏற்பட்டுவிடக்கூடும் என்கிற அச்சத்தில்தான் எனது முடிவை வெளியே சொல்லாமல் மெüனமாகவே இருந்து உங்களுக்கு வாக்களித்தேன். மேற்சொன்ன அந்தக் கேள்விகள் எனக்குள் எழாமல் இல்லை. அதற்கான பதிலும் என்னிடமுண்டு. 
 
 
நீங்கள் குடும்பம் இல்லாதவர். ஊழல் செய்ய வேண்டிய அவசியம் உங்களுக்குக் கிடையாது தான். ஆனாலும், தேர்தல் நேரச் செலவுகளுக்காகச் சில சமரசங்களைச் செய்து கொள்வது எல்லா கட்சிகளிலுமே நடப்பதுதான். அதனால், ஊழல் இல்லாத ஆட்சியை உங்களால் தரமுடியுமா என்று யோசித்தால் முடியாது என்பதுதான் என் மனம் சொன்ன பதில். இதைச் சொல்வதற்காக என்னை மன்னிக்க வேண்டும். அதன்பிறகும் வாக்களிக்க எனக்குக் காரணம் இருக்கிறது. உங்கள் ஆட்சியில் ஊழல் நடந்தால் அதை நீதிமன்றம், சிபிஐ, பொதுக் கணக்குக் குழு, பொது தணிக்கைக் குழு அறிக்கை இவற்றின் மூலம்தான் மக்கள் அரைகுறையாகத் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலைமை இருக்காது.
 
தமிழ்நாட்டில் கருணாநிதியை அறிவுஜீவியாகவும், தமிழ் உணர்வாளராகவும் கருதி, அவரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதைப் படித்த தமிழர்கள் பெருமையாகக் கருதுவதும், எம்ஜிஆர் ஒரு சினிமாக்காரர், மலையாளி என்பதாகவும் அவரைச் சார்ந்தவர்கள் வெறும் அரைகுறைகளாக மட்டுமே இருப்பார்கள் என்பதாகவும் ஒரு மாயை இருந்தது அல்லது உருவாக்கப்பட்டது என்றும் சொல்லலாம். அந்த மாயையை உடைத்தவர் நீங்கள்!ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாக வெளுத்து வாங்கியதோடு, நிர்வாகத்திலும்கூட, மாவட்ட ஆட்சியாளர்கள் எல்லோரும் அரசுத் தரப்பு மாவட்டச் செயலர்களாக இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்காதவர். உங்களுக்கு அதிகாரிகள், ஆட்சியர்கள் மீது விருப்பு வெறுப்பு இருக்கலாம். ஆனால், எல்லா அமைச்சரும் தங்கள் மாவட்டத்தில் கோட்டை கட்டிக்கொண்டு கொடி நட்டுவிட முடியாது. கட்சியின் முக்கியமான அமைச்சர் என்றாலும், உள்ளூரில் தாங்கமுடியாத அட்டூழியம் செய்வதாக உங்களுக்குப் புகார் வந்தால், போலீஸ் தரப்பும் இதைக் காதில் போட்டால், அந்த அமைச்சர் அடுத்தநாள் அமைச்சராக இருக்க மாட்டார். இந்தத் தைரியம் திமுக தலைமையிடம் இருந்ததே கிடையாது. ஆனால் உங்களிடம் இருக்கிறது.
 
 
அதனால் உள்ளூர் அதிமுக அமைச்சர்கள் ரியல் எஸ்டேட், சிறு, பெருந்தொழில்கள் எல்லாவற்றிலும் பங்குதாரர்களாக மாறும் முயற்சிகள் படுகேவலமாக அரங்கேறாது என்று நம்புகிறேன். எனக்குத் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி இதைப்பற்றியெல்லாம் தெரியாது. எனக்கு என் வருமானம் என் குடும்பச் செலவு மட்டும்தான் ரொம்ப முக்கியம்.
 
 கடந்த ஐந்து ஆண்டுகளில் நடுத்தரக் குடும்பத்து நபரான நான் ஏமாந்துபோன விஷயம், கல்வித்துறை. பள்ளிக் கட்டணத்தில் கொள்ளையடிக்கிறார்கள் என்று ஊரே பேசினாலும் ஒரு நடவடிக்கையும் இல்லை. தனியார் பள்ளிகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும் என்று ஒரே அறிவிப்பில் அனைவரையும் வழிக்குக் கொண்டு வரமுடியும். அதைச் செய்யும் தைரியம் உங்களிடம் இருக்கிறது என்று நம்பினேன். அதனால் வாக்களித்தேன்.பள்ளியில் படிக்கும் இரு குழந்தைகளுக்காக ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக ரூ.40,000 செலவு செய்துகொண்டிருக்கிறது. இதில் பாதி குறைந்தால்போதும். ஆண்டுக்கு ரூ.20,000 மிச்சமாகும்.
 
 
 இரண்டாவதாக, மருத்துவக் கொள்ளை தாங்க முடியவில்லை. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்ப அட்டைதாரர் பயன்பெற்று விட்டால் அடுத்த நபர் பயன்பெற முடிவதில்லை. அதிலும் இன்சூரன்ஸ் நிறுவனம் சொல்கிறபடிதான் சிகிச்சை நடக்கிறது. மருந்துகளை வெளியே காசு கொடுத்து வாங்கிக் கட்டுபடியாகவில்லை. உள்ளே போனால்தான் தெரிகிறது உண்மையான வலி.ஆகவே, அரசு மருத்துவமனையைப் பலப்படுத்துங்கள். தனியார் மருத்துவமனைகளைக் கண்காணிக்கவும், தரம் பிரிக்கவும், சிகிச்சைக்கான கட்டணங்களை நிர்ணயிக்கவும் தனி அமைப்பை உருவாக்குங்கள். 50 பைசா மாத்திரைக்கு ரூ.5 விலை வைத்து கொள்ளையடிக்கிறார்கள். மிகக் குறைந்த விலைக்கு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். ஊர் உலகத்தில் அந்த மாத்திரையின் எம்ஆர்பி என்னவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் அதன் விலை இதுதான் என்று தமிழக அரசு தீர்மானிக்கட்டும்.
 
கல்வி, மருந்து இதற்கு மட்டுமே என் சம்பளத்தில் பாதி போகிறது. இதை மட்டும் சரி செய்வீர்கள் என்கிற நம்பிக்கையில்தான் வாக்களித்தேன்.கல்வி, மருந்து இதற்கு மட்டுமே என் சம்பளத்தில் பாதி போகிறது. இதை மட்டும் சரி செய்வீர்கள் என்கிற நம்பிக்கையில்தான் வாக்களித்தேன். வெறும் ரூ.1000 மதிப்பில் பொருள் கொடுத்து என்னை ஏமாற்றி, என் நம்பிக்கையைச் சிதைத்து விடாதீர்கள். மருத்துவச் செலவு, கல்விச் செலவு இரண்டையும் எனக்கு ஏற்புடையதாகச் செய்தால் அதுவே என் வருமானத்தை மிச்சப்படுத்தும். தன்மானத்துடன் வாழ்வேன்.
 
செய்வீர்களா? (பொதுக்கூட்டத்தில் நீங்கள் கேட்பது மாதிரிதான் நானும் உங்களைக் கேட்கிறேன்).  
 
இப்படிக்கு,  
 
வாக்களித்தவன். 
 
இரா. சோமசுந்தரம் 

No comments:

Post a Comment