Search This Blog

Wednesday, May 11, 2011

கண்ணீரில் ஆஸ்திரேலியா

தாய் நாட்டுச் சேவைக்காகத் தங்கள்உயிரையும் துச்சமாக மதித்தே, எல்லா நாடுகளிலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் ராணு​வத்தில் நுழைகிறார்கள். எல்லைக் கோட்டில் எதிரிகள் நுழைந்துவிடாமல், காவல் காக்கிறார்கள். போர்க் காலத்தில், 'உயிர் தனக்கு இல்லை’ என்னும் நிலையிலும், கடுமையாகப் போராடுகிறார்கள். நாட்டு மக்கள் சுகமாக வாழ, சுமைகளைத் தாங்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மாவீரருக்கு சமீபத்தில் பெரும் மரியாதை செய்து இருக்கிறது, ஆஸ்திரேலிய அரசு!

1918-ல் முதலாம் உலகப் போரின் இறுதி நேரம். அப்போது ஜெர்மனிய கப்பல் படை, ஸ்காட்லாண்டில் சரண் அடைந்தது. அந்த சம்பவத்தின்போது முன்னணியில் இருந்தவர், ராணுவ வீரர் க்ளாடு ஸ்டான்லி ஷொல்ஸ். அவர் கடந்த மே 4-ம் தேதி, தனது 110-வது வயதில் மரணத்தைத் தழுவ... ஒட்டுமொத்த உலகமும் அவர் பெயரை உச்சரித்தது! இவர்தான், ஆஸ்தி​​ரேலியாவின் அதிக வயதான மனிதராகவும் இருந்தார். தனது 108-வது வயதில் சுயசரிதை வெளியிட்ட முதல் மனிதரும் இவரே!



இங்கிலாந்தில் உள்ள பெர்ஷோர் நகரில் 1901-ம் ஆண்டு பிறந்த க்ளாடுக்கு, இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள்.அவருக்கு ஐந்து வயது இருக்கும்போது, தான் கட்டிய கணவ​னையும் ஐந்து குழந்தைகளையும் கைவிட்டு, இவரது தாயார் தனியே போய்விட... க்ளாடு உள்ளிட்ட ஆண் குழந்தைகளைத் தானே வளர்த்தார் க்ளாடின் தந்தை... பெண் குழந்தைகளை, உறவினர்கள் வீட்டில் வளர்க்கக் கொடுத்துவிட்டார். காரணம், வறுமை!

1911-ல் க்ளாடின் மூத்த சகோதரர்கள் இருவரும், இங்கிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, கடற்படையில் சேர்ந்தனர். க்ளாடுக்கும் கப்பற் படையில் சேர ஆசை.  க்ளாடு, தன் 15-வது வயதிலேயே கப்பல் படையில் சேரத் தயாரானார். 16 வயது நிறைவடையாத காரணத்தால் சேர முடியவில்லை. இருப்பினும் அவருடைய தந்தை, க்ளாடின் ஆர்வத்தைப் பார்த்து, ஒரு பயிற்சிக் கப்பலில் சேர்த்தார். 16 வயது ஆனதும் பிரிட்டிஷ் கப்பல் படையில் சேர்த்துக்​கொள்ளப்பட்டார்.

முதல் உலகப் போரில் ஜெர்மனி வீழ்ச்சியுற்று, ஜெர்மானியப் படைகள் பல நாடுகளில் சரண் அடைந்தது. அப்போது, ஸ்காட்லாண்டில் க்ளாடு அங்கம் வகித்த படையின் முன்புதான் அந்த சரண் அடையும் நிகழ்வு நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வின் நேரடிச் சாட்சியாக வாழ்ந்த கடைசி மனிதர் க்ளாடு என்பதால்தான், உலகம் முழுவதும் அவர் மேல் ஒரு தனி மரியாதை!

1926-ல் இங்கிலாந்து கடற்படையில் இருந்து ஆஸ்திரேலியக் கடற்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் பயணம் செய்த அந்தக் கப்பலிலேயே தனக்கான வாழ்க்கைத் துணையையும் தேர்ந்து எடுத்தார். கூடவே பயணித்த ஈத்தல் என்ற குழந்தைகள் நலச் செவிலியரைக் காதலித்து, அதே ஆண்டில் கைப்பிடித்தார். 10 ஆண்டுகள் இங்கிலாந்து படையில் பணியாற்றிய க்ளாடு, ஆஸ்திரேலிய கப்பற்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி, ஓய்வு பெற்றார்.இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள், 13 பேரக் குழந்தைகள், 26 கொள்ளுப்பேரக் குழந்தைகள். அவர் தனது 100-வது பிறந்த நாள் கொண்டாடியபோது, அவரது காதல் மனைவி ஈத்தலுக்கு முத்தமிட்ட காட்சி மிகவும் பிரசித்தம். அதன் பிறகு, தனது 98 வயதில் ஈத்தல் மரணத்தைத் தழுவ... இப்போது தனது 110 வயதில் தூக்கத்திலேயே உயிர்விட்டு இருக்கிறார் க்ளாடு.

உயிர் பிரியும்போதும், தன் மனைவி ஈத்தலின் புகைப்படத்தை தன் பக்கத்திலேயே வைத்திருந்தார் என்ற செய்தி, எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது!குயின் எலிசபெத் மெடல், வேர்ல்டு வார் விக்டரி மெடல், ஆஸ்ட்ரேலியன் டிஃபென்ஸ் மெடல் என ஏராளமான பதக்கங்களைப் பெற்றவர் க்ளாடு. யாராவது அது குறித்துக் கேட்டால், ''நான் சாதாரணமானவன். என் வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும்படி நான் எந்த சாதனையும் செய்துவிடவில்லை...'' என்று ரொம்ப சிம்பிளாகப் பதில் சொல்வாராம்.க்ளாடின் மரணத்தால், ஒட்டுமொத்த ஆஸ்திரேலி​யாவும் ஏதோ தங்கள் உறவினர் ஒருவரைப் பறிகொடுத்​ததைப் போன்றே துக்கத்தில் மூழ்கியது. ஆஸ்திரேலிய கப்பற்படை, அவரது இறுதிச் சடங்கை ராணுவ மரியாதையுடன் நடத்தியது.

40 வருடங்கள் ராணுவத்தில் இருந்தவர் என்றாலும், போரை வெறுத்து வாழ்ந்த ஒரு மனிதர் க்ளாட் என்பதுதான் ஆச்சர்யம். ''அரசியல்வாதிகள் போர் தேவை என்ற முடிவெடுத்து, இளைஞர்களை ராணுவத்துக்கு அனுப்புகிறார்கள். ஆனால், முதியவர்களும் போரிட்டே ஆகவேண்டும் என்ற ஒரு நிலை வந்தால், 'போர்’ என்ற வார்த்தையே எந்த மொழியின் அகராதியிலும் இருக்காது!'' என்று அடிக்கடி சொல்வார், க்ளாட்.

சத்தியமான வார்த்தைகள்!


 விகடன் 

No comments:

Post a Comment