Search This Blog

Wednesday, May 04, 2011

கனிமொழி கைதா? 6ம் எண் சிறையா?


மூன்றாவது குற்றப் பத்திரிகையை மே-31 அன்று சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த ஊழல் வழக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்கு, சட்டப்படி கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால், இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், ஆயுள் முழுக்கவும்கூட சிறையில் கழிக்க வேண்டி இருக்குமாம். அதனால், இந்தக் கோணத்திலும் தனியாக வழக்குப் போட ஆதாரங்களை சி.பி.ஐ. சேகரிக்கிறது.

யார் இந்த அமிர்தராஜ்?

ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த, மறைந்த சாதிக் பாட்சாவின் பி.ஏ-வாக இருந்தவர் அமிர்தராஜ். சாதிக் சம்பந்தப்​பட்ட அனைத்து விவகாரங்களையும் நன்கு அறிந்தவர்.



''ஷாகித் பால்வாவின் டிபி ரியாலிட்டி நிறுவனமும், சாதிக்கின் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனமும் கிட்டத்தட்ட ஒரே நிர்வாகத்தின் கீழ்தான் இயங்கி வந்ததாக அமிர்தராஜ் சி.பி.ஐ-யிடம் சொல்லி இருக்கிறார். உலகத் தரத்தில் ஊழியர்கள் வேண்டும் என்பதற்காக, நேர்முகத் தேர்வு நடத்தி க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு பால்வாவின் மும்பை நிறுவன அதிகாரிகள் உதவி செய்தார்களாம். சாதிக்கின் நிறுவனத்துக்கு பால்வாவின் நிறுவனங்களில் இருந்து பல கோடிகளில் பணப் பரிவர்த்தனை நடந்து இருக்கிறது.மும்பைத் தொழிலதிபர்கள் ஷாகித் பால்வாவும், வினோத் கோயங்காவும், தொழில் முறை நண்பர்கள். இருவரும் இப்போது திகார் சிறையில் இருக்கிறார்கள். வினோத்தின் தந்தை கிருஷ்ணன் முராரி, இளைய சகோதரர் பிரமோத் கோயங்காவின் பின்னணி​களையும் சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்கிறது. இவர்களுடன் சாதிக் பாட்சா நெருக்கமான தொடர்புவைத்து இருந்த ஆதாரங்கள் சி.பி.ஐ. வசம் வந்துவிட்டன.

தாவூத் ஆல்பத்தில் பிரமோத் கோயங்கா


பாகிஸ்தானின் கராச்சி நகரில் பலத்த பாதுகாப்புடன் இருந்து​கொண்டு, இந்தியாவில் பயங்கரவாதத்தை ரிமோட்டில் இயக்கி வருகிறார் தாவூத் இப்ராஹிம். அப்படிப்பட்ட தாவூத்தின் இளைய சகோதரன் ஹுமாயுனின் திருமண நிகழ்ச்சியில் முக்கிய விருந்தாளியாக பிரமோத் கலந்துகொண்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மும்பையை மிரட்டிவிட்டு, போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்று பதுங்கிய அபுசலீமை, அந்த நாட்டு போலீஸ் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைத்தது. அபுசலீமின் வாக்குமூலத்தில், திருமணத்தில் பிரமோத் கலந்துகொண்டதைச் சொல்லி இருக்கிறார். மும்பையைச் சேர்ந்த பில்டர் ராஜேஷ் என்பவரை, கடந்த 2003-ம் ஆண்டு நிழல் உலக தாதாக்கள் சுட்டுக் கொன்றனர். அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், தனது மரணத்தின் பின்னணியில் கிருஷ்ண முராரி இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தாரிக் பாய் என்று அழைக்கப்படும் கராச்சியைப் பூர்வீகமாகக்​கொண்ட தொழிலதிபர் இந்திய போலீஸாரிடம் பிடிபட்டபோது, 'கிருஷ்ணன் முராரி, வினோத் கோயங்கா, பிரமோத் கோயங்கா ஆகிய மூவருக்கும் தாவூத்தின் 'டி' கம்பெனிக்கும் தொடர்பு உண்டு. இவர்களின் ரியல் எஸ்டேட் தொழிலில் தாவூத்தின் பணம் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது’ என்றும் தெரிவித்ததாக ஒரு தகவல் உள்ளது. அதனால், சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் பிரமோத்தையும் தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டுவர இருக்கிறார்​களாம்.

தயார் நிலையில் 6-ம் எண் சிறை?


மே 6-ம் தேதி கனிமொழியும், கலைஞர் டி.வி-யின் நிர்வாகி சரத்குமாரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜ​ராகிறார்கள். அன்றைய தினமே, அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படலாம் என்று டெல்லியில் திடுக்கிடும் வகையில் பேச்சு வலம் வருகிறது. பெண்களுக்கு என்று தனியாக 6-ம் எண் சிறை இருக்கிறது. இங்கே 1,200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் இருக்கிறார்கள். 'கனிமொழி கைது செய்யப்பட்டால் இங்கேதான் அடைக்கப்படுவார்’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். இந்த சிறையில் தமிழக போலீஸின் ஆயுதப் படையைச் சேர்ந்த 30 பெண் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்கே இரண்டு ஃபைல்கள்?

சமீபத்தில் இரண்டு ஃபைல்கள் காணவில்லை. அதற்குக் காரணமானவர்களை முதலில் பிடித்து திகார் சிறையில் தள்ளினால்தான், மற்றவர்கள் திருந்துவார்கள்போல் தெரிகிறது 'ஊழல் செய்த உயர் அதிகாரிகள் சிலரைக் காப்பாற்றும் நோக்கில் அந்த இரண்டு ஃபைல்கள் எங்காவது ஒளித்துவைக்கப்பட்டு இருக்கிறதா... அல்லது, ஒரேயடியாக எரித்துவிட்டார்களா?’ என்று சி.பி.ஐ. தேடுகிறது. அதில் ஒரு ஃபைல், ஆ.ராசா மந்திரியாக இருந்தபோது, தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தில் தினசரி அலுவலகப் பணிகளைப் பதிவு செய்த விவரங்களை உள்ளடக்கியது. மற்றொரு ஃபைல், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று, ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி அரசுக்கு விண்ணப்பித்தது தொடர்பானது. இந்த இரண்டு ஃபைல்களுடன் தொடர்புடைய வேறு சில விவரங்கள் சி.பி.ஐ-க்குக் கிடைத்துவிட்டது. என்றாலும், ஒரிஜினல் ஃபைல்களைத் தேடும் பணி மும்முரமாக நடக்கிறது. இந்த ஃபைல்களை வைத்திருந்த அதிகாரிகளிடம் சி.பி.ஐ. வாக்குமூலம் பதிவு செய்துவிட்டது. ஒருவேளை, காணாமல்போன ஃபைல்கள் கிடைக்கவில்லை என்றால், இந்த வாக்குமூலத்தை ஆதாரமாகப் பயன்படுத்தவும் சி.பி.ஐ.யிடம் திட்டம் இருக்கிறது!

விகடன்    


No comments:

Post a Comment