Search This Blog

Monday, April 11, 2011

பி.எஃப். பணம் - இனி நீங்களே பார்க்கலாம்!


ரசு நிறுவனமாகட்டும், தனியார் நிறுவனமாகட்டும், அதில் வேலை பார்க்கும் ஊழியர்களின் ஒரே சந்தோஷம் கண்ணுக்குத் தெரியாமலே அவர்கள் பெயரில் சேமிப்பாகும் பி.எஃப். பணம்தான். ஆனால், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் இந்த பி.எஃப். பணத்தை, பி.எஃப். அலுவலகத்தில் கட்டாமல் சில நிறுவனங்கள் ஏமாற்றி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்த ஏமாற்று கம்பெனிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாக பி.எஃப். அலுவலகமே சொல்லி இருக்கிறது. 2009-10-ம் ஆண்டின்படி, இந்தியா முழுக்க சுமார் ரூபாய் 165 கோடி பணம் பி.எஃப். அலுவலகத்துக்கு கொடுக்காமலே ஏப்பம் விடப்பட்டிருக்கிறதாம். இதில், இன்னொரு அதிர்ச்சியான தகவல், பி.எஃப். கணக்கில் மோசடி செய்யும் நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பது தமிழகத்தில்தானாம்!


இந்திய அளவில் மொத்தம் ஐந்து கோடி பேர் பி.எஃப். கணக்கு வைத்திருக்கிறார்கள். இவர்களில் ஒவ்வொருவருக்கும் நிதி ஆண்டின் இறுதியில், சிறிய வால் போன்ற ரசீது ஒன்று கொடுக்கப்படும். அதில், முந்தைய ஆண்டில் மொத்தம் எவ்வளவு பணம் கட்டப்பட்டிருக்கிறது, கணக்கில் உள்ள மொத்தப் பணம்  போன்ற விவரங்கள் மட்டும்தான் தரப்படும். சந்தாதாரரின் பணம் மாதம்தோறும் பி.எஃப். கணக்கில் கட்டப்படுகிறதா என்கிற விவரத்தை இந்த சின்ன ரசீது மூலம் அறிந்து கொள்ள முடியாது. இந்தப் பிரச்னை களுக்கெல்லாம் ஒரு தீர்வு காண இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.


பெரும்பாலான சந்தாதாரர் களுக்கு அவர்களின் கணக்கில் எவ்வளவு தொகை வரவு வைக்கப்பட வேண்டும் என்ற விவரம் தெரிவதில்லை. இதனால், பல நேரங்களில் அவர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப். தொகை மற்றும் அதற்கு இணையாக தொழில் நிறுவனம் கட்டும் தொகை ஆகியவற்றை சரி பார்க்க முடிவதில்லை.இதுநாள் வரை நிறுவனங்கள் பி.எஃப்.க்கு உரிய தொகையை மாதம்தோறும் கட்டி வந்தாலும், எந்த பணியாளர் கணக்கில் எவ்வளவு பணம் கட்டப்பட்டிருக்கிறது என்கிற விவரத்தை ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில்தான்  பி.எஃப் அலுவலகத்துக்கு தெரிவிக்கும். இதன் அடிப்படையில் பணத்தைப் பிரித்துப்போட்டு, அதற்குரிய வட்டி எல்லாம் கணக்கிட்டு செப்டம்பர் மாத வாக்கில் நிறுவனங்களுக்கு அனுப்புகிறது பி.எஃப். அலுவலகம்..

ஆனால், பி.எஃப். ஆணையம் இப்போது கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறையின்படி, எல்லா நிறுவனங்களும் இனி மாதம்தோறும் பி.எஃப். பணத்தை கட்டும்போதே, எந்த ஊழியரின் கணக்கில் எவ்வளவு பணம் போட வேண்டும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அப்படி நாங்கள் செய்யும் பட்சத்தில், பல்வேறு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பதை கம்ப்யூட்டர் மூலம் பார்த்துக் கொள்ளும் வசதியையும் கொண்டுவரப் போகிறோம். இந்த வேலைகள் எல்லாம் சரியாக முடிந்துவிட்டால், 2013-ம் ஆண்டு முதல் வங்கிக் கணக்குப்போல, பி.எஃப். கணக்கிலும் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பதை எப்போது வேண்டுமானாலும் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். மேலும், எஸ்.எம்.எஸ் மூலமும் இருப்புத் தொகையை அறிந்து கொள்ளும் வசதி வர இருக்கிறது .

No comments:

Post a Comment