Search This Blog

Saturday, April 09, 2011

யாருக்கு வோட்டுப் போடுவது? - ஓ பக்கங்கள், ஞாநி


நம் அரசியல் கட்சிகள் திருந்தவில்லை என்பதற்குத் தொடர்ந்து பல அடையாளங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. நாம்தான் அவற்றைச் சரியாகக் கவனிப்பதும் இல்லை. அழுத்தம் கொடுப்பதும் இல்லை. 

சென்றமுறை ஜெயித்து வந்த 234 எம்.எல்.ஏ.க்களில் 77 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. இந்த முறை போட்டி யிடும் வேட்பாளர்களில் 18 சதவிகிதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் 66 பேர் மீது உள்ளவை கடும் குற்றச்சாட்டுகள். ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர் களிலும் கிரிமினல் வழக்குள்ளவர்கள் சதவிகிதம் அதிர்ச்சியாக இருக்கிறது. தி.மு.க - 22 சதவிகிதம். அ.தி.மு.க - 30. பா.ம.க -52. விடுதலைச் சிறுத்தைகள்- 50. தே.மு. தி.க- 19. காங்கிரஸ்- 11. பி.ஜே.,பி- 11.  

சென்ற முறை ஜெயித்தவர்களில் 57 பேர் கோடீஸ்வரர்கள். இந்த முறை போட்டியிடுபவர்களில் 35 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள். மீதி பெரும்பாலோர் லட்சாதிபதிகள். கோடீஸ்வர வேட்பாளர்கள் கட்சி வாரியாக: தி.மு.க - 65.77 சத விகிதம். அ.தி.மு.க - 52.08. காங்கிரஸ் - 61.11. பா.ம.க - 40.74. விடுதலைச் சிறுத்தைகள் - 33.33. தே.மு.தி.க - 33.333. பி.ஜே.பி- 14.79. மார்க்சிஸ்ட் - 8.33. கம்யூனிஸ்ட்- 0. 


ஐந்து வருடங்களில் இவர்களுடைய சொத்து எப்படிப் பெருகியிருக்கிறது என்பதே இவர்கள் மக்களுக்கு எப்படி சேவை செய்திருக்கிறார்கள் என்பதைக் காட்டி விடும். தி.மு.க அமைச்சர் இ.வ.வேலுவின் சொத்து பல நூறு மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆட்சியில் இருந்த அமைச்சர்களை விட அவர்களுடைய மனைவிகள், துணைவிகள் சொத்து அதிகரித்திருக்கிறது. முதலமைச்சர்தான் இதில் வழிகாட்டி. பிறவி கம்யூனிஸ்ட் அல்லவா அவர்! 2006ல் அவர் சொத்து 26.52 கோடி. 2011ல் 44.14 கோடி இதில் கருணாநிதியின் சொத்து வெறும் சுமார் 5 கோடிதான். தயாளுவுடையது சுமார் 16 கோடி. ராஜாத்தியுடையது சுமார் 24 கோடி! இன்னும் பல பேர் மனைவி-துணைவி கணக்கு காட்டியிருக்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்து மதிப்பு வெறும் 75 லட்சம். மனைவி ரங்கநாயகியுடையதோ 93 லட்சம். துணைவி லீலாவுடையதோ 2.25 கோடி!


தேர்தல் ஆணையம் இந்த முறை தமிழ்நாட்டில் பிரதான பிரச்னை, பெரும் பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாகக் கொடுக்கப்படுவதைத் தடுப்பதுதான் என்று அறிவித்து, கடுமையாகச் செயல்பட்டிருக்கிறது. இதன் விளைவு டீக்கடைக்காரர் வீட்டில் சில லட்சங்களும் ஆம்னி பஸ் கூரையில் பல கோடிகளும் பிடிபட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் எந்த அளவு கறுப்புப் பணம் சுழற்சியில் இருக்கிறது என்பதற்கு, தேர்தல் ஆணையம் தரும் ஒரு புள்ளிவிவரமே சாட்சி. சென்ற வாரம் வரை பிடிபட்ட 22 கோடியே 40 லட்சம் ரூபாயில், முறையாகக் கணக்கு காட்டி தேர்தலுக்குச் சம்பந்தம் இல்லாத நியாயமான சொந்தப் பணம் என்று நிரூபித்து திரும்பப் பெறப்பட்ட தொகை வெறும் 4 கோடியே 88 லட்சம்தான்.  

பணபலம் இல்லாமல் தேர்தலில் போட்டியிடவே முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருசில விதிவிலக்கான இடதுசாரி வேட்பாளர்கள் தவிர, எந்தப் பெரிய கட்சி வேட்பாளரும் ஆணையம் நிர்ணயித்த வரம்புக்குள் செலவு செய்வதே இல்லை என்பது உண்மை. பணபலம் இல்லாமலே ஜெயிக்க முடியும் என்று நம்பும் படித்த இளைஞர்களின் பிரதிநிதியாகத் தங்களை முன்னிறுத்தும் சுயேச்சை வேட்பாளர் சரத்பாபு போன்றோர் போடும் கணக்குக் கூட தப்பாகவே இருக்கிறது. மொத்தம் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ள வேளச்சேரியில் தமக்கு 40 ஆயிரம் வாக் குகள் கிடைத்தால் ஜெயித்து விடலாம் என்று அவர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 70 சதவிகித வாக்குப் பதிவு என்றால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் விழும். அதில் 40 ஆயிரம் ஜெயிக்கப் போதும் என்றால் மீதி ஒரு லட்சம் வாக்குகளுக்கு அர்த்தம் என்ன? அவை பல வேட்பாளரிடையே பிரிவதால் தான் 40 ஆயிரத்துக்கு மதிப்பு வருகிறது!  


இந்தத் தேர்தல் முறையே தவறு; விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பது பற்றித்தான் படித்தவர்கள் பிரசாரம் செய்து கருத்து திரட்ட வேண்டும். இருக்கும் தவறான முறைக்குள்ளேயே செயல்பட்டு ஜெயித்துவிடலாம் என்று கணக்குப் போடுவது படித்த நல்லவர்களின் அப்பாவித்தனம் அல்லது சாமர்த்தியம். காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் என் நண்பர் அவருக்கு எதிர் வேட்பாளர் மூன்று கோடி செலவு செய்தால், தான் ஒரு கோடி வரைக்குமாவது செலவிடும் கட்டா யத்துக்குத் தள்ளப்படுவேன் என்கிறார். நண்பருக்கு மாத வருவாயே 15 ஆயிரத்துக்குள்தான். எப்படி ஒரு கோடி திரட்ட முடியும்? கொடுப்பவர்கள் நாளைக்கு பதிலுக்கு என்னவெல்லாம் பிரதி உபகாரம் கேட்பார்கள் என்பதை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது. 

இப்படிப்பட்ட ஒட்டுமொத்த அருவருப்பான சூழ்நிலையில் ஒரே நம்பிக்கைக் கீற்று, தேர்தல் ஆணையத்தின் கறாரான செயல்பாடு மட்டும்தான். ஆனால் அது போதாது. இன்னும் பல தேர்தல்களுக்கு இப்படிப்பட்ட கெடுபிடிகள் தொடர்ந்தால்தான் கட்சி அமைப்பு சீர்படும்.  

 
இப்போதும் பணபலமும், இலவச ஆசை காட்டி வோட்டு வாங்கும் உத்தியும் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றன. இந்தச் சூழலில் எந்தக் கட்சிக்கு வோட்டுப் போடுவது என்று பலரும் என்னைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நம் முன்னால் மூன்று வழிகள்தான் இருக்கின்றன.

வழி 1: 49 ஓ. எல்லா வேட்பாளரையும் நிராகரிக்கும் உரிமை. இப்போதைக்கு இது மின் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ரகசிய பட்டனாக இல்லை. எனவே பகிரங்கமாக சொல்லித்தான் இதைப் பதிவுசெய்ய வேண்டும். எனவே பெருவாரியானவர்கள் இதைப் பயன்படுத்தும் வாய்ப்புக் குறைவு. பெருவாரியாக 49 ஓ விழுந்தால்தான் கட்சிகளுக்குக் கலக்கம் ஏற்படும். ஒரு சில நூறு 49 ஓக்கள் பயன் தராது. என் கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று நமக்கு நாமே வலியுறுத்திக் கொள்ள இது உதவும். 

வழி 2: தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு மட்டைகளுக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் எதுவும் இல்லை. இருவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்தான்.  கடந்த ஆட்சிக் காலங்களைப் பார்த்தீர்களானால், 1996-2001ல் தி.மு.க ஆட்சியும், 2001-2006ல் அ.தி. மு.க ஆட்சியும் சகிக்கக்கூடியனவாக இருந்தன. ஆனால், 1991-96 அ.தி.மு.க ஆட்சியும் 2006-2011 தி.மு.க ஆட்சியும் சகிக்க முடியாதவை. மூன்றாவது அணியாக உருப்படியாக எதுவும் உருவாவதற்கு இன்னும் 15 வருடங்கள் ஆகலாம். அதுவரை எந்த ஒரு கழகத்தையும் தொடர்ந்து பத்தாண்டு ஆள விடாமல், 5 வருடங்களுக்கு ஒரு முறை கேரளா மாடலில் மாற்றி மாற்றித் தேர்ந்தெடுத்து நம்மை நாமே கொஞ்சம் ஆறுதல்படுத்திக் கொள்ளலாம். 

வழி 3: வேட்பாளர் அடிப்படையில் பார்ப்போம். சரியான கட்சியில் இருக்கும் தப்பான ஆள் என்று சொல்ல எவருமில்லை. ஏனென்றால் சரியான கட்சிகளே இல்லை. தப்பான கட்சியில் இருக்கும் சரியான ஆட்களாக யாரேனும் இருக்கிறார்களா என்று தேடலாம். (சரியான ஆளாக இருந்தால் அவர் ஏன் தப்பான இடத்துக்குப் போகிறார் என்ற தர்க்க நியாயம் தனி.) இரு பிரதான அணிகளிலும் இருக்கும் வேட்பாளர்களில் இருப்பதில் சுமாரானவர் என்பவருக்கு வோட்டுப் போடலாம். நல்ல சுயேச்சைகளுக்குப் போட்டுப் பயனில்லை. எப்படியும் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரும். அவற்றில் பெருவாரியாக முழு அயோக்கியர்களுக்கு பதில், ஓரளவு நல்லவர்களை யாவது ஜெயிக்க வைக்கலாம்.  


மூன்றில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ செய்யுங்கள். ஆனால் வோட்டுப் போடாமல் மட்டும் இருந்து விடாதீர்கள். மூன்றில் எப்படி வோட்டுப் போட்டாலும் தொலைநோக்கில் மாற்றம் வர அது நிச்சயம் உதவும்.

சந்தேகங்கள்! 

1. விஜயகாந்த் குடித்துவிட்டு வந்து பிரசாரத்தில் உளறுகிறார் என்று பிரசாரம் செய்யும் சன், கலைஞர் தொலைக்காட்சிகள், ஒரு முதலமைச்சர் மனைவி, துணைவி என்று இருவருடன் பகிரங்கமாக வாழ்க்கை நடத்துவதை குடிக்குச்
சமமான ஒழுக்கக்கேடாக ஏன் கருதவில்லை ? 

2. வேட்பாளர்கள், தலைவர்கள் மட்டும்தான் மது குடிக்காத ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டுமா? ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை படைத்த வாக்காளர்களுக்கும் அந்த ஒழுக்கம் வேண்டாமா? வருடத்தில் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்குக் குடிப்பவர்கள் தொகை குறைந்தபட்சக் கணக்குப்படி ஒரு கோடிக்கு மேல். குடிப்பழக்கம் உள்ள இந்த ஒரு கோடி வாக்காளர்கள் வோட்டுப் போடும் தகுதி உடையவர்களா, இல்லையா? 

3. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பை என்னவோ 11 பேருக்கு மட்டும்தான் உரியது. ஆனால் தேசமே அதைத் தங்கள் வெற்றியாகக் கொண்டாடுவது போலத்தான் தி.மு.க.வினரும் கூட்டணியினரும் கட்சியில் ஒரு சிலர் மட்டுமே தேர்தலில் வாய்ப்பு பெற்று வெற்றியடைவதைக் கருத வேண்டும் என்று கருணாநிதி அறிவுறுத்தியிருக்கிறார். அதாவது கிரிக்கெட் 11 பேர் மாதிரி அவர் குடும்பத்தினர் 11 பேர் எல்லா லாபங்களையும் அடைவதை எல்லா தி.மு.க.வினரும் கொண்டாட வேண்டும் என்று இதற்கு அர்த்தமா?

4. அமைச்சராக இருக்கையில் ராசா மீது கடும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட தருணத்தில் அவரைப் புகழ்ந்து தொழிலதிபர் ரத்தன் டாட்டா கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றிக் கேட்ட போது, ‘அப்படி ஒரு கடிதமும் தமக்கு வர வில்லை’ என்றார் கருணாநிதி. இப்போது நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு விசாரணையில் டாட்டா தம் கைப்பட கடிதம் எழுதியதாகவும், நீரா ராடியா தாம் அதை நேரில் கருணாநிதியிடம் கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார்களே? கருணாநிதிக்கு செலக்டிவ் அம்னீஷியாவா? ராடியா வேறு யாராவது கருணாநிதியிடம் கடிதத்தைக் கொடுத்து விட்டாரா?

5. ஒரே மேடையில் ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் பேசுவார்களா என்று சவால் விடும் தி.மு.கவினர், ஏன் ஒரே மேடையில் ராகுல் காந்தியும் கருணாநிதியும் தோன்றுவதில்லை என்பதை விளக்குவார்களா? ராகுல் காந்தி, ஸ்டாலினோடு கூட ஒரே மேடையில் தோன்ற முன் வருவதில்லையே ஏன் ? 

6. தேர்தல் நேரத்தில் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகம் இயங்குவதால் எல்லாம் ஒழுங்காக நடைபெறுவது பற்றி மக்களிடையே பெரும் மகிழ்ச்சி இருக்கிறது. இதே அதிகாரிகள்தானே நிர்வாகத்தை எப்போதும் கவனித்து வருகிறார்கள்? ஏன் இதே போல சுதந்திரமாக, சட்டப்படி எப்போதும் நடப்பதில்லை? தடுப்பது யார் என்று அவர்கள் அடையாளம் காட்ட வேண்டாமா? 

No comments:

Post a Comment