Search This Blog

Sunday, March 06, 2011

ஏன் தொடங்கினார் எம்.ஜி.ஆர்!

ஓ பக்கங்கள்- ஞாநி 


அ.தி.மு.க. பிரமுகர் சேகர்பாபு தி.மு.கவில் தம் ஆதரவாளர்களுடன் இணைந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது, கலைஞர் கருணாநிதி, “எம்.ஜி.ஆர் என்ன நோக்கத்துக்காக அ.தி.மு.க.வைத் தொடங்கினாரோ அதிலிருந்து அது விலகிப் போய்விட்டது. இதைத் தாமதமாக உணர்ந்தாலும், உறுதியான முடிவு எடுத்து இப்போது சேகர்பாபு அதிலிருந்து விலகி நம்மிடம் வந்திருக்கிறார்” என்று பேசியிருக்கிறார். 

இப்படி விசித்திரமான கருத்துகளை, வரலாறு தெரியாத ஒரு தலைமுறையைக் குழப்பும் விதத்தில் விதைப்பது கருணாநிதி தொடர்ந்து பின்பற்றி வரும் சாமர்த்தியமான உத்தி. என்ன நோக்கத்துக்காக எம்.ஜி.ஆர்., அ.தி. மு.க.வைத் தொடங்கினார்; அதிலிருந்து எப்படி அ.தி.மு.க. விலகிவிட்டது என்பதை மட்டும் கருணாநிதி எச்சரிக்கையாகச் சொல்லாமல் விட்டு விட்டார். அது என்ன என்று தெரியாதவர்கள், எம்.ஜி.ஆர். ஏதோ உன்னதமான சமூகக் கொள்கைகளைத் தூக்கிப் பிடிக்க கட்சி தொடங்கியதாகவும், அதிலிருந்து அந்தக் கட்சி விலகிவிட்ட தாகவும் அந்த மேன்மை யான கொள்கைகளை எல் லாம் தொடர்ந்து நிறை வேற்றுவது, தி.மு.க.தான் என்றும் மயக்கம் கொள்ள வைப்பதே கருணாநிதியின் நோக்கம். 


உண்மையில் ஏன் எம்.ஜி.ஆர் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்னால் அ.தி.மு.க.வைத் தொடங்கி னார் என்ற காரணங்கள் இப்போது ஐம்பத்தைந்து வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே நினைவில் இருக் கும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளைக் குழப்புவதற்காகவே கருணாநிதி இப்படிப் பேசியிருக்கிறார் என்பதில் சந்தேக மில்லை. 

கருணாநிதி என்ற தீய சக்தியை அரசியலிலிருந்து அகற்றவும், அண்ணா உருவாக்கிய தி.மு.க.வின் அசல் நோக்கங்களைக் காப்பாற்றவும்தான், அ.தி.மு.க.வைத் தாம் தொடங்கியதாக 1972லிருந்து 1987ல் அவர் இறக்கும்வரை, எம்.ஜி.ஆர் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர். இறக்கும் வரையில் கருணாநிதியால் ஒரு தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை என்பதும் இன்னொரு முக்கிய வரலாற்றுச் செய்தி.
 

1972ல் எம்.ஜி.ஆர் கம்யூனிஸ்ட் கட்சியினரின் உதவியுடன் கருணாநிதிக்கும் அவரது ஆட்சிக்கும் எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் அளித்தார். அவற்றுக்கெல்லாம் சட்டமன்றத் தில் கருணாநிதி அளித்த மழுப்பலான பதில்களை அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு ஏற்கவில்லை. பிரதமர் இந்திரா காந்தி நீதிபதி சர்க்காரியா கமிஷனை நியமித்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கச் செய் தார். சர்க்காரியா கமிஷன், கருணாநிதி அரசு ஊழல்களைச் செய்திருப்பதாகத் தெளிவாக அறிவித்தது. அதன் அடிப்படையில் கருணாநிதி மீதும் அவரது சகாக்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. 

அந்த வழக்குகளைத் திரும்பப் பெறச் செய்ய, கருணாநிதி படாத பாடுபட்டார். அப்போது அவரது கூட்டாளியாக இருந்த ஜனதா கட்சி ஆட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய் வழக்குகளைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார். வழக்குப் போட்ட இந்திரா காந்தி காலிலேயே மறுபடியும் விழுந்துதான் கருணாநிதி அந்த வழக்குகளைத் தொடர விடாமல் தப்பிக்க முடிந்தது. இந்தச் சரித்திரமெல்லாம் நன்றாகத் தெரிந்த காங்கிரஸ்காரர்கள்தான் ப.சிதம்பரமும், தங்கபாலுவும்.

1980ல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உருவாக்கப்பட்டு எம்.பி.தேர்தலில் ஜெயித்த பின்னர், எம்.ஜி.ஆர். அரசைக் கலைக்கும்படி இந்திராவை கருணாநிதி தான் வற்புறுத்தினார். 356ஆம் பிரிவின் கீழ் மாநில அரசைக் கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கக்கூடாது என்று தி.மு.க அரசு கலைக்கப்படும்போதெல் லாம் சத்தம் போடும் கருணாநிதி, அதே 356ஐ எம்.ஜி.ஆருக்கு எதிராகப் பயன்படுத் தத் தயங்கவே இல்லை.

ஆனால், எம்.ஜி.ஆர். ஆட்சிக் கலைப்புக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் அணி படு தோல்வி அடைந்தது. அதன் பின்னர் காங்கிரஸ் அ.தி.மு.க. பக்கம் போய்விட்டது. அடுத்த 13 வருடங்கள் அ.தி.மு.க.வுடன்தான் இருந்தது.

அப்போது சர்க்காரியா கமிஷன் தொடர்பான ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க காங்கிரஸிடம் சரணாகதி அடைந்த கருணாநிதி, இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தம் குடும்பத்தினரும் மாட்டி விடாமல் தடுப்பதற்கு காங்கிரஸிடம் சரணாகதி அடையும் நிலையில் இருக்கிறார். அதிக இடங்கள் தேவை, ஜெயித்தால் கூட்டணி ஆட்சி; ஆட்சியில் காங்கிரஸுக்கும் பங்கு; துணை முதல்வர் பதவி உண்டு என்ற கோரிக்கைகளை இப்போது காங்கிரஸ் வலியுறுத்தி, பேரம் பேசிக் கொண்டிருக்கிறதல்லவா? இதே பேரத்தை 1980லும் பேசியது. அப்போது அத்தனை கோரிக்கைகளையும் ஒப்புக்கொண்டு, காங்கிரசுடன் சேர்ந்து குறைந்தபட்ச பொதுத் திட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டுத் தேர்தல் அறிக்கையையும் கருணாநிதி வெளியிட்டார். கூட்டணி ஜெயித்தால் முதல்வர் பதவியும் தி.மு.க.வுக்கு இல்லாமற் போய்விடுமோ என்ற அளவுக்கு தி.மு.க.வினருக்கு அப்போது பயம் இருந்தது. 


இந்திராவே பகிரங்கமாக, நாங்கள் ஜெயித்தால் கருணாநிதிதான் முதல்வர் என்று அறிவித்தார். ஆனாலும் ஜெயிக்கவில்லை; காரணம் எமெர்ஜென்ஸி ஒடுக்குமுறைகளில் அல்லற்பட்டிருந்த தி.மு.க. தொண்டர்கள் காங்கிரஸ் உறவை விரும்பவில்லை. எம்.ஜி.ஆரை வைத்து தி.மு.க.வை உடைத்த நாம், ஏன் திரும்ப தி.மு.க.வுக்கு உயிர் தரவேண்டும் என்ற அதிருப்தி காங்கிரஸாருக்கு இருந்தது. ஒரே அணியில் இருந்துகொண்டு விரோத மனநிலையில் வேலை செய்தார்கள். எம்.ஜி.ஆர். அரசை டிஸ்மிஸ் செய்தது அவருக்குப் பெரும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்தது. 

இப்போதும் அதே போன்ற சூழ்நிலைகள் நிலவுகின்றன. கூட்டணி என்றும் பாராமல் ராசாவைக் கைது செய்து காங்கிரஸ் ஆட்சி சிறையில் அடைத்திருப்பது தி.மு.க.வினர் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒழுக்க சீலர் என்ற பிம்பத்துடன் வலம்வந்த மன்மோகன் ஆட்சிக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று நடத்தியிருக்கும் தி.மு.க.வை நாம் ஏன் தாங்கிப்பிடிக்க வேண்டும் என்ற எரிச்சல் காங்கிரஸாரிடம் இருக்கிறது. தேர்தலுக்குப் பின் இழுபறி நிலை ஏற்பட்டால், அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேரவும் காங்கிரஸ் தயங்கப் போவதில்லை. தி.மு.க. இப்போது குடும் பச் சண்டையாலும் ஸ்பெக்ட்ரம் நெருப் பாலும் எரிகிற வீடு. அதில் பிடுங்கினவரை லாபம் என்பதே காங்கிரஸின் அணுகுமுறை.

தி.மு.க.வுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ‘தருமம் தலைகாக்கும்’ என்பதுதான். அரசு கஜானாவிலிருந்து அள்ளி அள்ளி வீசி இலவசம் என்ற பெயரில் செய்திருக்கும் ‘தானதர்மங்கள்’, இனி தேர்தல் நேரத்தில் செய்யப்போகும் ‘தர்மங்கள்’ எல்லாம்தான் தங்களைக் கரையேற்றும் என்று அது நம்பிக் கொண்டிருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், எந்த நோக்கத்துக்காக எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவைத் தொடங்கினாரோ அந்த நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. இந்தத் தேர்தல்தான் அதை இறுதியாகத் தீர்மானிக்கப் போகிறது. எம்.ஜி.ஆரின் கனவை ஜெயலலிதா சாதிப்பாரா, அல்லது எம்.ஜி.ஆரின் கனவு கனவாகவே போய்விடுமா என்பது தீர்மானிக்கப்படும்.
இந்த வாரக் கேள்வி!

மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய்கள். சுகாதாரத்துக்கு 26 ஆயிரம் கோடி. விளையாட்டுக்கு வெறும் 1121 கோடி. ஆனால், ராணுவத்துக்கு மட்டும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 415 கோடிகள். அரசு வருவாயில் 11 சதவிகிதம் வருமான வரியிலிருந்து வருகிறதாம். ராணுவ செலவும் அரசின் செலவில் 11 சதவிகிதம். ராணுவ செலவைச் சரிபாதியாகக் குறைத்து கல்வி, சுகாதார ஒதுக்கீட்டை யெல்லாம் இரண்டு மடங்காக்கும் பட்ஜெட் எப்போது வரப்போகிறது ?

1 comment: