Search This Blog

Friday, February 25, 2011

கோத்ரா ரயில் - தீர்ப்பும் தீர்வும்!


குஜராத் மாநிலத்தில், 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கோத்ரா ரயில் நிலையத்தில் நின்ற சபர்மதி ரயிலின் பெட்டி எஸ்-6 எரிந்து அதில் இருந்த 59 கரசேவகர்கள் இறந்த சம்பவம் விபத்து அல்ல, திட்டமிட்ட சதி என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் நடந்த மதக்கலவரங்களும் அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும் நாடறிந்த உண்மை. இதற்குக் காரணம், ரயில் எரிப்பு ஒரு திட்டமிட்ட சதி என்று பாஜக கூறியது. ஆனால், காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதச்சார்பற்ற பிற கட்சிகளும் இந்த வாதத்தை மறுத்தன. ரயில் எரிந்தது வெறும் விபத்து மட்டுமே என்றன.  


இது தொடர்பாக, குஜராத் அரசு நியமித்த நானாவதி குழு அறிக்கை 2008-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டபோது, அந்த அறிக்கையிலும் இதே தகவல் - இது விபத்து அல்ல, திட்டமிட்ட சதி வேலை - என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும்கூட இந்த நானாவதி குழுவின் அறிக்கை நரேந்திர மோடி அரசு நியமித்தது என்பதால், அரசு சார்பான கருத்தாக பலரும் இதை விமர்சித்தனர். இப்போது நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னர் இந்த அமைப்புகள் இதற்குப் பெரிய அளவில் எதிர்வினை புரியவில்லை.

இந்த வழக்குத் தொடர்பாக 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 63 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார்கள். வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களும் கடந்த 9 ஆண்டுகள் சிறையில் இருந்தமைக்காக மாநில அரசிடம் இழப்பீடு கோரி வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அது நியாயமும்கூட.


இருப்பினும், இந்த வழக்கில் மேலும் சிலர் குற்றவாளிகளாகத் தண்டிக்கப் போதுமான ஆதாரம் இல்லை என்று விடுவிக்கப்படலாமே தவிர, அல்லது இந்த சதித்திட்டம் குறித்த ஆதாரங்கள், அதற்கான நபர்கள் பெயர்கள் மறுக்கப்படலாம் என்றாலும்கூட, ரயில் பெட்டி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் போதுமானதாக இருப்பதால் இந்தத் தீர்ப்பு மேல்முறையீட்டிலும்கூட, விபத்து என்று மாறுகிற விபத்து ஏற்பட வாய்ப்பில்லை.

ஏனென்றால், கோத்ரா ரயில் நிலையத்தில் தேநீர் விற்கும் அஜய் பாரியா, ரயில் நிலையம் அருகே வசித்துவந்தவரும் சம்பவத்தின்போது நேரில் பார்த்த சாட்சியுமான சிக்கந்தர் முகம்மது ஆகியோர், எஸ்-6 பெட்டியில் சிலர் நுழைந்து, பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தனர் என்று கூறியுள்ளனர். மேலும், எரிந்து கிடக்கும் ரயில்பெட்டி எஸ்-6-ன் பல்வேறு மீதங்கள் தடய அறிவியல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, அவற்றின் கசடுகளில் உள்ள பெட்ரோலியப் பொருள்களின் எச்சங்களை வைத்து, இந்த விபத்துக்குக் காரணம் பெட்ரோல் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எரிந்த ரயில் பெட்டி குறித்து, அன்றைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் அமைத்த யு.சி. பானர்ஜி குழு விசாரணை செய்து, இது வெறும் விபத்துதான் என்று அறிவித்தது. ஒரு ரயில்பெட்டி எப்படி எரிந்தது, எரிந்த மிச்சங்களில் மீதமாகிக் கிடக்கும் வேதியல் பொருள்கள் என்ன, அதில் பெட்ரோலியப் பொருள்கள் இருக்கின்றனவா என்கிற அறிவியல்பூர்வமான ஆய்வுகளுக்கு உள்படாமல், பானர்ஜி குழு இந்த முடிவுக்கு வந்தது என்பதைத்தான் தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு உணர்த்துகிறது. அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக பானர்ஜி குழு செயல்பட்டதோ என்று இப்போது சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.


இந்தச் சம்பவம் நடைபெற்ற அந்த நேரத்தில் "இதைச் சதி என்றோ விபத்து என்று உடனடியாக முடிவு செய்ய முடியாது, அதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் வரட்டும். பிறகு கருத்துச் சொல்கிறோம்' என்று பொறுமை காக்க பாஜகவும் காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகளும் பொறுமை காட்டியிருந்தால், மக்களிடம் ஆவேசம் ஏற்பட்டிருக்காது. கலவரம் நடந்திருக்காது. இதைச் செய்யத் தவறிய பழி எல்லா அரசியல் கட்சிகளையும் சேரும்.காங்கிரஸ் கோத்ரா சம்பவத்தை பாஜகவுக்கு எதிரான ஆயுதமாகக் கருதியது. பாஜகவோ, இதன்மூலம் தன் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றது. கோத்ரா சம்பவத்தின் பின்னணி என்ன என்பதைப் பற்றியும், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த கலவரம், அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருள் சேதம் பற்றியும் விவாதங்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. அடிப்படையில், ஏதோ ஒரு சிறிய பொறி, இதயத்தின் அடித்தளத்தில் இருந்த மனக்கசப்பு, சட்டென்று வெளிப்பட்டு கோரத்தாண்டவமாட வைத்துவிட்டது என்பதுதானே நிஜம்!


 அதிவிரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட்ட வழக்குக்கு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பெயரா அதிவிரைவு நீதிமன்றம்? சாதாரண நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டிருக்குமேயானால், இப்போது நிரபராதிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் 63 பேரின் ஆயுள்காலமும் கிலியில் கழிந்திருக்குமே?அது போகட்டும். கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு ஒரு திட்டமிட்ட சதி என்று தீர்ப்பளித்திருக்கிறது விரைவு நீதிமன்றம். ஆனால், சதித்திட்டம் தீட்டியவர் என்று குற்றம் சாட்டப்பட்ட, ஒலிபெருக்கியில் ரயிலைக் கொளுத்துங்கள் என்று அறைகூவல் விடுத்தவர் என்று கூறப்பட்ட மௌலானா உமர்ஜி, போதிய சாட்சியமில்லாமல் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஏன் இந்த முரண்? அப்படியானால், சதித்திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளி யார்?

இதுபோன்ற பிரச்னைகளையும், தீர்ப்புகளையும் மதமுலாம்பூசிய பூதக்கண்ணாடி மூலம் பார்க்கக்கூடாது. மதமோ, ஜாதியோ யாரும் விரும்பிப் பெற்றது அல்ல. சுதந்திரத்துக்காக நாம் கொடுத்த விலையே மிகமிக அதிகம். மத நல்லிணக்கத்துக்காக நமது "தேசப்பிதா' அண்ணல் காந்தியடிகளையே இழக்க நேர்ந்த துர்பாக்கியம் இந்தியாவுக்கு உண்டு. 64 ஆண்டுகளாகியும் சுதந்திர இந்தியா ஒற்றுமையாக இருக்கப் பழகாவிட்டால் எப்படி?

ஒரு சிலர் ஓரிடத்தில் செய்த குற்றத்துக்காக அவர்களை மட்டும் தண்டிக்காமல் மாநிலத்தையே ரத்த ஆறாக்கி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பதற்றத்தை உருவாக்கிய அரசியல் கட்சிகளை யார் தண்டிப்பது? இந்தக் கட்சித் தலைவர்கள் உசுப்பேற்றிய அனல் கக்கும் வாதங்களுக்கு என்ன தண்டனை?

இனி இன்னொரு கோத்ரா உருவாகாமல் இருக்க வேண்டும். அதற்கு மக்கள் அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் நம்பாமல், நமது ஒற்றுமையில்தான் இந்த தேசத்தின் ஒற்றுமை அடங்கி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கோத்ராவிடமிருந்து நாம் படிக்க வேண்டிய பாடம் அதுதான்.

தினமணி          

No comments:

Post a Comment