Search This Blog

Wednesday, February 23, 2011

புதிய கல்வித் தந்தைகள் -தமிழக அமைச்சரையில்

''தி.மு.க. இம்முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்லூரி நடத்தியது  எ.வ.வேலு மட்டும்தான். ஆனால், இன்று பெரும்பாலான அமைச்சர்கள் கல்லூரிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இது கட்சிக்கு நல்லதல்ல. அனைவரும் அதைக் கட்சிக்கு எழுதிவைத்துவிடுங்கள்!'' என்று ஒரு நாள் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி சீறினார். அவரே அதிர்ச்சியடையும் அளவுக்கு தமிழக அமைச்சரவையில் இப்போது கல்வித் தந்தைகள் அதிகம்!

 ஜெகத்ரட்சகன், ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், வேலூர் விஸ்வநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் கடைக்கண் பார்வையால் கல்வி நிறுவனங்களை அமைத்து வளர்ந்தவர்கள் என்றால், கருணாநிதியின் ஆசீர்வாதம் காரணமாக... வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் பரிணமித்து இருக்கிறார்கள். சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர், கடலூர், கோவை நகர்ப் பகுதியில் வலம் வந்தால், இவர்களது பிரமாண்டமான கல்லூரிக் கட்டடங்களைத் தரிசிக்கலாம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டையில் பிரமாண்டமாக உருவாகிறது தயா இன்ஜினீயரிங் கல்லூரி. மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான இந்த கல்லூரி அடுத்த கல்வி ஆண்டில் இருந்து செயல்படத் துவங்குமாம்.

''அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மனைவி சாந்தா ஆகியோர் இணைந்து நாராயணா அறக்கட்டளை வைத்துள்ளனர். அதன் சார்பாக ஒரு கல்லூரி நடத்துகின்றனர். அந்தக் கல்லூரிக்காக ஏழை, எளிய விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு 100 ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்காக இந்த நிலங்கள் முன்பு தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிலங்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, இப்போது புங்கனூரில் இருக்கும் ஏரியை வளைத்து தேசிய நெடுஞ்சாலைக்குப் பாதை அமைத்து வருகின்றனர். இது என்ன தர்மம்?'' என்று கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா முழங்கினார்.


ஜெயலலிதா குறிப்பட்டது திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாயனூர் கிராமத்தில் இயங்கி வரும் கேர் இன்ஜினீயரிங் கல்லூரி பற்றித்தான். அந்தக் கல்லூரியின் சேர்மனாக இருப்பவர் நேருவின் தம்பி ராமஜெயம். நேருவின் அக்காள் மகனும், மாப்பிள்ளையுமான செந்தில் இதன் நிர்வாக அதிகாரி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இன்ஜினீயரிங் கல்லூரி, நேருவின் தந்தை பெயரில் இயங்கி வரும் நாராயணா எஜுகேஷனல் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா குறிப்பிட்டதுபோல, நேருவின் மனைவி சாந்தாவும் சகோதரர் ரவிச்சந்திரனும் டிரஸ்ட்டை நடத்த, குடும்ப உறுப்பினர்கள் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஊரகத் தொழில் மற்றும் கால்நடைத் துறை அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, கோவை அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி, விஜயலட்சுமி பழனிச்சாமி சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நடத்தப்படுகிறது. தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இந்தக் கல்லூரியைக் கட்டி இருக்கிறாராம் பழனிச்சாமி. இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அமைச்சரின் மகளும், நிர்வாக அறங்காவலருமான வித்யா கோகுல் கவனித்து வருகிறார். ''கருணாநிதிக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்துகொண்டு, அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வரும் அமைச்சர்கள் யாரும், நன்றிக்கடனாகக்கூட கருணாநிதியின் பெயரை வைக்கவில்லை. ஆனால், பொங்கலூரார்தான் தலை​வரின் பெயரைச் சூட்டி தன்னுடைய நன்றி உணர்ச்சி​யைக் காட்டி இருக்கிறார்...'' என்று பொங்கலூராரின் கோஷ்டி பெருமை அடித்துக்கொள்கிறது.  


'கனிமொழிக்கு சொந்தமானது இந்தக் கல்லூரி. பொங்கலூர் பழனிச்சாமியின் பெயரை இதற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள்!’ என்று சொல்பவர்களும் உண்டு. நீலகிரி தொகுதியின் எம்.பி-யாக ஆ.ராசா வந்து உட்கார்ந்த சில காலங்களிலே, இந்தக் கல்லூரி அவரது பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற லெவலுக்குக்கூட லோக்கல் தி.மு.க-வுக்குள் புகைந்தது. ஆனால், பொங்கலூரார் தரப்போ... எல்லாவற்றையும் அடியோடு மறுத்துச் சிரிக்கிறது.


வேளாண் துறை அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொந்தமாக உத்தம சோழபுரத்தில் வி.எஸ்.ஏ. குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் (இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ.) இருக்கிறது. வி.எஸ்.ஏ. என்றால் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் என்று அர்த்தம். அமைச்சரின் மகனான எம்.எல்.ஏ.ராஜா இதன் சேர்மன். இந்தக் கல்லூரியைக் கட்டுவதற்காக அருகில் இருந்த கஞ்ச மலையை சேதம் செய்தார்கள் என்றொரு புகார் எழுந்து அடங்கியது. இந்தக் கல்லூரி தவிர ஆட்டையாம்பட்டியில் பழைய ஸ்கூல் ஒன்றை சில மாதங்களுக்கு முன் விலைக்கு வாங்கி, வி.எஸ்.ஏ. மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள்.


தி.மு.க-வின் கடலூர் மாவட்டச் செயலாளராகவும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். அவருடைய சித்தப்பா தெய்வ​சிகாமணி, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008-ல் காட்டுமன்னார்கோவிலில், சந்திரவதனம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மற்றும் சந்திரவதனம் ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரே சேர்மனாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.  

2008-ம் ஆண்டு மேல​பழஞ்சநல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் மூன்று ஏக்கரிலும், 2009-ம் ஆண்டு வீராணம் நல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்றை சுமார் 20 ஏக்கரிலும் நடத்தி வருகிறார். இதை பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் நிர்வகித்து வருகிறார். கதிரவன்தான் சேர்மன். நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்வி நிறுவனத்துக்காக கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எம்.ஆர்.கே. கல்வி அறக்கட்டளைக்கு பன்னீர்செல்வத்தின் சித்தப்பா தெய்வசிகாமணி சேர்மனாக இருக்கிறார்.



சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், தனது மகன் கதிர்ஆனந்த் பெயரில் கிங்ஸ்டன் கலை மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். காட்பாடியில் இருந்து சித்தூர் போகும் வழியில் சுமார் 6 கி.மீ தொலைவில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கல்வி நிறுவனம் நடந்து வருகிறது. இந்தக் கல்லூரிக்கு அருகில்தான் அரசின் வெடி மருந்துத் தொழிற்சாலை நடந்து வருகிறது. இதன் அருகில் எந்தவொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தக் கூடாது என்பது அரசு விதி. அதையும் மீறி இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதனால், 'அரசு வெடி மருந்துத் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றலாமா...’ என்ற அளவுக்கு ஆலோசனைகள் நடக்கிறது.


விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலா​ளரும், அமைச்சருமான பொன்முடி, சிகா என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார். அதன் மூலம், சிகா மேலாண்​மைக் கல்லூரி, மற்றும் சிகா டீச்சர் டிரெயினிங் கல்லூரி ஆகிய​வற்றை கப்பியாம்புலியூர் என்ற இடத்தில் நான்கு ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். மேலும் விக்கிரவாண்டி அருகே சூர்யா பொறியியல் கல்லூரி ஒன்றையும் மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சூர்யா பொறியியல் கல்லூரி பொன்முடியின் மகன்களான பொன்.கௌதமசிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் பெயரில் நடத்தப்படுகிறது.


முன்னரே சொன்னது மாதிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் ஐ.டி.ஐ., ஜீவா வேலு உறைவிடப் பள்ளி ஆகியவற்றை வேலு நடத்தி வருகிறார்.

ஆகமொத்தம், தமிழக அமைச்சரையில் நான்கில் ஒரு பங்கு மந்திரிகள் கல்வித் தந்தையராக வளர்ந்திருக்​கிறார்கள்.

''இது பொற்கால ஆட்சி!'' என்று சமீபத்தில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னார். அதற்கு பதில் அளித்த கருணாநிதி, ''பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ, என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கிற நிலைமை ஏற்படுகிறதோ, அதுதான் பொற்காலமாகும்!'' என்று சொன்னார்.

இந்தக் கட்டடங்களை எல்லாம் பார்த்தால் யாருக்குப் பொற்காலம் என்பது சொல்லாமலே புரிகிறது!


நன்றி:விகடன் 







No comments:

Post a Comment