Search This Blog

Friday, January 07, 2011

புதியதோர் மாற்றம் காண்போம்..

இந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும். இந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா! இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும்.

மலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன? அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா!

நம் நாட்டு இளைஞர்களின் ஆற்றலை நல்வழிக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும். குடித்துவிட்டுக் கும்மாளம் அடிப்பதும், கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டுத் திரைப்படங்களுக்குப் போவதும், ஜாதி-சமயக் கலவரங்களுக்கு அடியாள்களாக மாறுவதும் தேவைதானா? திரைப்பட நாயகர்களுக்கு "ரசிகர் மன்றம்' அமைப்பதும், அவர்களது படங்கள் வெளிவந்துவிட்டால் பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்வதும் அவர்களது சக்தியை வீணடிப்பதாகும்; விழலுக்கு இறைப்பதாகும்; இளைய சமுதாயத்துக்கே இழிவாகும். "காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது' என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. இதனால்தான் கிடைத்தற்கரிய தங்களின் அருமையான இளமைப் பருவத்தைக் கேளிக்கைகளிலும், வீண் பொழுதுபோக்குகளிலும் செலவழிக்கின்றனர். இன்னும் சிலர் அடுத்தவர்களை - அதிலும் பெண்களையும், பெரியவர்களையும் கேலியும், கிண்டலும் செய்வதில் இன்பம் காண்கின்றனர். மற்றும் சிலரோ தேவையற்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தவிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். ""இன்றைய இளைஞர்களை நினைத்து எனக்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இந்தியாவின் எதிர்காலமே இதனால் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது...'' என்பதே அவர் கவலை. நேற்று என்பது இறந்தகாலமாகிவிட்டது. நாளை என்பது நமக்கு வராமலேயே போய்விடலாம். இன்று மட்டுமே நிச்சயம். அதனை வாழ்ந்து காட்ட வேண்டாமா? இன்றைய வாழ்க்கையே நாளைய வரலாறு. நாம் இதுவரை வரலாறு படித்தது போதும்; புதிய வரலாறு படைக்க வேண்டாமா?

விவேகானந்தர் தனது வெற்றிகரமான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, 1897 ஜனவரி 26 அன்று தாயகம் திரும்பினார். இந்திய இளைஞர்கள் உடல் பலமற்றவர்களாக இருப்பதைக் கண்டு வருந்தினார். அதனால் அவர்கள் சோர்வுமிக்கவர்களாக இருக்கின்றனர்; உழைக்க முடிவதில்லை. சோம்பலும், சுயநலமும் ஒழியாமல் மதநேயமும், மனிதநேயமும் எப்படி வளரும்? ""எனது இளைய நண்பர்களே! பலமுடையவர்களாக ஆகுங்கள். அதுதான் நான் உங்களுக்கு அளிக்கக்கூடிய அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். உங்கள் கை கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால், கீதையை நன்றாகப் பொருள்புரிந்து கொள்வீர்கள்...'' இவ்வாறு சென்னை வரவேற்பில் அவர் பேசினார்.

விவேகானந்தர், இளைஞர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். "சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்' என்பதுபோல இளைஞர்களைக் கொண்டுதான் இந்தியாவை எழுப்ப வேண்டும் என்று எண்ணினார்; எதிர்காலம் என்பது இளைஞர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று நம்பினார். அதனால்தான் அவர் பிறந்தநாள், "தேசிய இளைஞர் தின'மாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 54 கோடிப் பேர் அதாவது சுமார் பாதிப்பேர் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள். ஆண்டுதோறும் நாட்டில் 30 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள். 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களில் சுமார் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் வேலை தேடுகிறார்கள். இந்த இரு பிரிவினருமாக வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஆண்டுதோறும் 1.3 கோடி இளைஞர்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றனர். எனினும், 21-ம் நூற்றாண்டைப் பொறுத்தவரை உயர் கல்வி பெற்ற ஏராளமான இளைஞர்கள் நாட்டுக்குத் தேவை. இத்தேவையைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களும், இதர கல்வி நிறுவனங்களும் இரண்டுவிதப் பிரிவினரை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட அறிவுத் திறனும், திறமைகளும் உடைய இளைஞர்கள் ஒருவகை. உயர்கல்வி கற்ற இளைஞர்கள் இன்னொருவகை. இவர்களுக்கு நம் நாட்டில் மட்டுமன்றி, உலக அளவிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்புத் தேவைப்படுகிறது. ஆனால், அவர்களை நாடு பயன்படுத்திக் கொள்கிறதா என்றால், "இல்லை' என்பதை வருத்தத்துடன் ஒத்துக்கொள்ள வேண்டும்.
 
கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கான அடையாளம் என்பதுபோய், பணம் சம்பாதிப்பதற்கான "பட்டம்' என்றே எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது. உயர்கல்வி கற்பதே அமெரிக்கா முதலிய அயல்நாடுகளுக்கு அனுப்புவதற்காகத்தான் என்பதில் பெற்றோர்கள் தீர்மானமாக இருக்கின்றனர். இந்திய ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, அயல்நாடுகளுக்குச் சேவை செய்ய இவர்கள் அனுப்பப்படுகின்றனர் என்பது எவ்வளவு பெரிய அவலம்! இந்த இளைஞர்களின் சேவை தாயகத்துக்குத் தேவையில்லையா?

இன்று அரசியல் லாபகரமான தொழிலாகத்தான் இருக்கிறது; குற்றவாளிகளின் கடைசிப் புகலிடமாக அல்ல, முதல் புகலிடமாகவே இருக்கிறது. அதனால்தான் நல்லவர்கள் அங்கு செல்லவே அஞ்சுகின்றனர். எனினும், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியல்தான் நம்மை ஆள்கிறது. அதனைப் புறக்கணித்துவிட முடியாது. இந்திய அரசியல் எப்போதுமே இப்படி இருந்தது இல்லை. காந்திஜி, பெரியார், காமராஜ், அண்ணா, ஈ.எம்.எஸ். போன்ற எண்ணற்ற தியாகசீலர்கள் அரசியலில் இருந்திருக்கின்றனர். அந்தத் தூய அரசியலை மறுபடியும் கொண்டுவர வேண்டும். இளைஞர்கள் இதில் ஈடுபட்டு, எதிர்நீச்சல் போட்டு ஒரு புதிய வரலாறு படைப்பதை நாம் வரவேற்க வேண்டும்.

"இளங்கன்று பயமறியாது' என்பது பண்டைத்தமிழ் மக்களின் பழமொழி. பயமறியாத இளைஞர்களின் போராட்டமே உலகம் முழுவதும் வெற்றிக்கனியைப் பறித்துத் தந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும் அப்படித்தான். இன்னும் பறிக்க வேண்டிய கனிகள் ஏராளம். 
இளைஞர்களே! எழுந்து நில்லுங்கள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

 நன்றி - விவேகந்தர் வரலாறு, அப்துல்கலாம் புத்தகங்கள், தி ஹிந்து, எக்ஸ்பிரஸ் நாளேடு



No comments:

Post a Comment