Search This Blog

Monday, January 03, 2011

அனுமன் ஜெயந்தி

மனம் ஒரு குரங்கு; காரணம், அது நிலையாக இருப்பதில்லை. ஒன்றை நினைக்கும் போதே, "ஹும்... அப்படி செய்ய வேண்டாம்; இப்படி செய்தால் என்ன...' என்று கணக்குப் போடும். ஆனால், குரங்காகப் பிறந்த ஆஞ்சநேயரோ, மனதை தம் வசப்படுத்தும் முயற்சியில், மனிதனுக்கே எடுத்துக்காட்டாக விளங்கினார்.

அதனால், அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றியின் நாயகனாக விளங்கினார். அவரது வெற்றிக்கு காரணம் திட்டமிட்ட செயல், கடலையும் தாண்டும் தைரியம், சமயோசிதம், பக்தி ஆகியவையே. அவர், மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தார்.  

வரலாறு :

புஞ்ஜிகஸ்தலை என்ற பெண்மணி, தேவலோகத்தில் வசித்தாள். மிகுந்த அழகியான அவள், தன்னை விட அழகி யாருமில்லை எனக் கருதி, ஆணவத்தால், ஒரு முனிவரின் தோற்றத்தை கேலி செய்து பேசினாள். கோபமடைந்த முனிவர், அவளது அழகு அழிந்து, குரங்காக மாற சாபமிட்டார். அவள், அவரிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடினாள். இரக்கப்பட்ட முனிவர், சாப காலம் முடியும் வரை நினைத்த நேரத்தில், நினைத்த வடிவம் எடுக்கும் வரம் தந்தார்.  

பூலோகத்தில் வசித்த குஞ்சரன் என்பவனுக்கு மகளாகப் பிறந்தாள். அவளுக்கு, "அஞ்சனை' என்று பெயரிட்டனர். ஒருமுறை, அவள் ஒரு மலையுச்சியில், மானிட வடிவில் மிகுந்த அழகுடன் நடமாடிக் கொண்டிருந்தாள். அவளது அழகில் மோகம் கொண்ட வாயு பகவான், அவள் முன் தோன்றி,ஆட்கொண்டான் அவளை. அவள் மிகுந்த கோபமடைந்து, "தேவனான நீ, மோசமான எண்ணத்துடன் அணுகியது முறையா?' என சப்தமிட்டாள். வாயு பகவான் அவளைச் சமாதானம் செய்து, "இந்த உலகிற்கு நம் மூலம் ஒரு உத்தமபுத்திரன் பிறக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதனாலேயே, இந்த சம்பவம் நிகழ்ந்தது. உன் மகன், என்னைப் போல் பராக்கிரமசாலியாக இருப்பான். அவனுக்கு பறக்கும் ஆற்றல் இருக்கும்...' என்று சொல்லி, மறைந்தான். அந்த மலையிலேயே தங்கி, புத்திரனைப் பெற்றாள் அஞ்சனை. அவனுக்கு, "ஆஞ்சநேயர்' என்ற பெயர் சூட்டப்பட்டது. 

குழந்தையான அஞ்சநேயர், ஒருமுறை, வானில் உதித்த சூரியனைப் பார்த்தான். அதைப் பழமென்று நினைத்து, பறிக்க வானில் பாய்ந்தான்; சூரியன் அவனை எரிக்கவில்லை. இதனால், சூரியனுக்கு ஏதும் ஆபத்து ஏற்படுமோ என்று பயந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் ஆஞ்சநேயரின் தோளில் அடித்தார். அதனால், தாடை எலும்பு ஒடிந்து கீழே விழுந்தான் அஞ்சநேயர். தாடை எலும்பை, "ஹனு' என்பர். இதனால், அவருக்கு, "அனுமன்' என்ற பெயர் ஏற்பட்டது. மகன் தாக்கப்பட்டதைக் கண்ட வாயு பகவானுக்கு கோபம் ஏற்பட்டது; காற்றை நிறுத்தி விட்டார். உலக உயிர்கள் மூச்சு விட முடியாமல் தவித்தன. வாயுவை சமாதானம் செய்து, "உன் மகனுக்கு எந்த ஆயுதத்தாலும் மரணம் நிகழாது. அவன் எப்போது மரணமடைய நினைக்கிறானோ அப்போதே மரணம் வரும்...' என்று அருள்பாலித்தார் பிரம்மா. என்றும் அழியாதவனை, "சிரஞ்சீவி' என்பர். அனுமானும், சிரஞ்சீவியாக இன்றும் நம் உள்ளங்களில் கலந்திருக்கிறார். அந்த இனிய தெய்வத்தை, அவரது பிறந்தநாளில் வணங்கி, அவரது நல்லாசியைப் பெறுவோம்.

No comments:

Post a Comment