Search This Blog

Tuesday, August 24, 2010

மதுரை , அழகிரியா (அல்லது) ஜெயலலிதாவா!!!!!

ம்மாவைப் பார்க்க திருச்சியில் திரண்ட கூட்டம் 'அவதார்' படத்தின் கிராஃபிக்ஸ் அல்ல! இந்த ஒரு வரிக்காகவே முரசொலி நம்மை முழுப் பக்கத்துக்குத் திட்டும். பார்ப்பன கேமராவோ, சூத்திர கேமராவோ மலைக் கோட்டை நகரில் கூடிய கூட்டத்தைப் பார்த்து மலைத்தே போயிருக்கும்.

கோவையில், ஜூலை 13-ம் தேதி மிகச் சாதாரணமாக ஆர்ப்பாட்டம் என்ற வகையில்தான் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், கோவை சுற்று வட்டார மாவட்டங்களை வளைத்து முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையனும் பொள்ளாச்சி ஜெயராமனும் திரட்டியதால் கோவையே அன்றைய தினம் திணறியது. குளவிக் கூட்டில் கை வைத்ததுபோல நாலாபுறம் இருந்தும் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதைப் பார்த்து ஆச்சர்யமானார் ஜெயலலிதா. அவரைவிட ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தவர் முதல்வர் கருணாநிதி தான்.


போட்டிக் கூட்டம் என்று சொல்லாமல், ஆனால் அதே ஊரில், ஜெயலலிதா பேசிய அதே வ.உ.சி. மைதானத்தில் தி.மு.க-வும் திரண்டது. அதில் பேசியவர்கள் அனைவரும் இது 'போட்டிக் கூட்டம் அல்ல' என்றே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். என்றும் இல்லாத வகையில் ஜெயலலிதாவை நீ, வா, போ என்று ஒருமையில் அழைக்க ஆரம்பித்தார் கருணாநிதி. 'ஜெயலலிதாவைவிட வயதில் மூத்தவன் நான். எனவே, இப்படி அழைக்க எனக்கு உரிமை உண்டு' என்றும் சொன்னார். 'எங்களுக்குத் திரண்ட கூட்டத்தைப் பார்த்து ஆத்திரப்பட்டுதான் கருணாநிதி இப்படிப் பேசினார்' என்று அம்மா கட்சிக்காரர்கள் கோபத்தைத் தூண்டினார்கள்.

'அடுத்ததாக, திருச்சியில் கூடுவோம்' என்று அறிவித்தார் ஜெயலலிதா. 'கோவை கூட்டத்தை வைத்துதான் திருச்சியையும் கணிப்பார்கள். இங்கே கூட்டம் குறைந்தால் கோவையோடு அவுட் என்பார்கள். எனவே, அதைவிட அதிக கூட்டம் கூட்டியாக வேண்டும்' என்று ஜெயலலிதா கட்டளையிட்டார். ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயகுமார், பொள்ளாச்சி ஜெயராமனுடன் மாவட்டச் செயலாளர் மனோகரன் ஆகிய ஐந்து பேர் பரபரப்பானார்கள்.

தயாரிக்கப்பட்ட பேச்சை அப்படியே வாசித்துவிட்டுப் போகிற ஜெயலலிதாவே, மனம்விட்டுச் சில வார்த்தைகளை உதிர்த்தார்.

"நான் 28 ஆண்டு காலமாக அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன். தமிழ்நாட்டில் நான் போகாத ஊர் இல்லை. பேசாத கூட்டம் இல்லை. என் வாழ்நாளில் இதுபோன்ற கூட்டத்தை நான் கண்டது இல்லை. ஏறத்தாழ நான்கரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மக்கள் வெள்ளத்தில் மிதந்துகொண்டே மேடைக்கு வந்தேன்"- சொல்லும்போதே முகம் சிவந்தது ஜெயலலிதாவுக்கு.

ஆர்ப்பாட்ட, பொதுக் கூட்டம் நடந்த இடம் 'ஜி' கார்னர். அ.தி.மு.க. தொண்டர்களால் அது 'ஜெ' கார்னர் ஆனது. மூன்று லட்சம் பேர் திருச்சிக்குள் நுழைந்து இருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். "15 வருஷமா டி.வி. மீடியாவில் இருக்கிற நான் பார்த்த பெரிய பொதுக் கூட்டம் இதுதான்" என்கிறார் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ஒருவர். 'அம்மா அலை ஆரம்பிச்சிருச்சு!' என்பதுதான் அ.தி.மு.க-வினர் சொல்லிக்கொள்ளும் சந்தோஷ வார்த்தைகள். பொது வான நேரத்தில் இப்படிக் கூடினால் ஆளும் கட்சி இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாது. ஆனால், தேர்தல் நெருங்கி வரும் காலம் என்பதால் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

ஜெயலலிதாவைப் பார்க்கக் கூட்டம் கூடுகிறது, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் திருச்சிக்கு வருவதால், அவரது பேச்சைக் கேட்கக் கூடிய கூட்டம் இது, அ.தி.மு.க-வில் இருந்து முக்கியத் தலைவர்கள் முகாம் மாறி வருவதால் கட்சி தேய்ந்து கொண்டு இருப்பதை மறைக்க எல்லா மாவட்டங்களில் இருந்தும் ஆட்களை அழைத்து வந்து காட்டுகிறார் கள், தங்கள் தலையைக் காப்பாற்றிக்கொள்ள முன்னாள் மாஜிக்கள் பணம் செலவழித்து கூட்டம் கூட்டுகிறார்கள், ஒவ்வொரு பொதுக் கூட்டம் நடத்துவதற்கும் 10 கோடி வரை செலவழிக்கப்படுகிறது, என்றெல்லாம் காரணங்கள் வாசிக்கப்படுகின்றன.

அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது நடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது கருணாநிதி போகும் இடம் எல்லாம் இப்படித்தான் கூட்டம் கூடியது. அன்றைய ஆளும் கட்சிக்கு எதிரான எழுச்சியாகத்தான் அப்போது அது கணிக்கப்பட்டது. இன்று கூடும் கூட்டத்துக்கும் அதுவே நோக்க மாக இருக்கிறது. வைகோ ஊர் ஊராக நடத்தும் கொடி அணிவகுப்புக்கு கிராமங்கள் தோறும் கூடும் கூட்டமும், இரண்டு வாரங்களுக்கு முன்னால் கோவில்பட்டியில் இரவு 10.30-க்குத் தொடங்கி 12.45 வரைக்கும் அவருடைய பேச்சுக்காகப் பல்லாயிரக் கணக்கானவர்கள் கூடியிருந்த நிகழ்வும், விஜயகாந்த் கலந்துகொள்ளாமல் தே.மு.தி.க சார்பில் பல்வேறு ஊர்களில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கையையும் வைத்துப் பார்த்தால், ஆளும் கட்சிக்கு எதிர் மனோபாவமாகவே இதை கணிக்கத் தோன்றுகிறது.


தலைவர்களுக்கு கூட்டங்கள் உற்சாகத்தைக் கொடுப்பது மாதிரியே மயக்கத்தையும் கொடுக்கும். 'ஆஹா! என்னா கூட்டம்... இனி கருணாநிதி அவ்வளவுதான்' என்று ஜெயலலிதா நினைத்தால் ஏமாந்துபோவார். கூட்டம் ஓ.கே, கூட்டணி யாருடன் என்று அவர் சிந்திப்பதில்தான் அனைத்துமே அடங்கி இருக்கிறது. கோவை, திருச்சியைப் பார்த்து 'தனித்தே' நின்று ஜெயித்துவிடலாம் என்று அவரே நினைக்கக் கூடும். அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கைகொண்டவர் அவர். ஆனால், அவர் அணியில் வைத்திருக்கும் கட்சிகள் தேர்தலைத் துணிந்து சந்திப்பதற்குப் போதாது.

மேலும், கோவையில் கூடியிருக்கலாம், திருச்சியில் திணறியிருக்கலாம், ஜெயலலிதாவுக்கான உண்மையான ஆசிட் டெஸ்ட் மதுரைதான். 'அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது' என்று சொன்ன மு.க.அழகிரி இருக்கிறார். எந்த மதுரை மண் அ.தி.மு.க-வின் வெற்றிக்கு அடித்தளம் இட்டதோ, அதே இடத்தில் நடந்த அத்தனை இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. மரண தோல்வி அடைந்திருக்கிறது. எனவே, மதுரை கூட்டம் ஜெயலலிதாவுக்கு முக்கியத் துவம் வாய்ந்ததாகவே இருக்கும்.

அ.தி.மு.க. தொண்டனை உற்சாகப்படவைத்தது கோவை... எழுந்து உணர்ச்சிவசப்படுத்தியது திருச்சி... இது பழைய செல்வாக்கு படைத்த அ.தி.மு.க-தான் என்பதை நிரூபிக்குமா மதுரை?




1 comment:

  1. kuttam kuduvathai vaithu mattum inthu allum kattchu ethiranathu nu solla mudiyathu nenga sonnathu poll inthu kasu selavu panni kuttiya kuttam anabal sertha kuttamo illa allum DMK ku ethirana kuttamo alla.....

    Thalapathin thambi,
    Suthakar

    ReplyDelete